
கஞ்சத்தனமாக இருக்கிறார் அப்பா. எதை கேட்டாலும், கணக்கு பார்க்கிறார். உடன் படிக்கும், நண்பன் பாலுவின் அப்பா எவ்வளவு தாராளம். அவன் பள்ளிக்கு பணமின்றி வந்ததே இல்லை. ஐஸ்கிரீம், குச்சி மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிடுகிறான்.
பள்ளியில் படிக்கும் ஈஸ்வரனுக்கு அப்பா மீது கடும் கோபம்.
அன்று பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தான்.
பெட்டிகடையில், நொறுக்கு தீனி வாங்கிய பாலு, ''ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிட காசு இல்லாதவன் தானே நீ...'' என மட்டம் தட்டினான். கிண்டலடித்து சிரித்தான்.
'இனி, கை செலவுக்கு, அப்பாவிடம் காசு கேட்க வேண்டியது தான்'
முடிவு செய்தபடி, வீடு திரும்பினான் ஈஸ்வரன்.
இரவு சாப்பாடு முடிந்தது. அப்பா வரும் வரை காத்திருந்தான்.
நாற்காலியில் அமர்ந்திருந்தனர் பெற்றோர்.
தைரியத்தை வரவழைத்து அப்பா முன் போய் நின்றான்.
''என்னப்பா... என்ன வேணும்...''
அன்பாய் கேட்டதால், தயக்கம் மறைந்து தைரியம் பிறந்தது.
''பள்ளிக்கு செல்லும் போது கைசெலவுக்கு காசு வேணும்...''
''என்ன வாங்கணும்...''
''உடன் படிப்போர், நினைத்ததை வாங்கி சாப்பிடுகின்றனர்; அவர்களுடன் நின்று, வேடிக்கை பார்க்க மனமில்லை...''
''உனக்கு வேண்டிய சாப்பாடு, ஸ்நாக்ஸ் எல்லாமே கொடுத்து அனுப்பகிறாரே அம்மா. அது போதாதா... வெளியில் சாப்பிட்டால் உடல் நலம் கெடுமே...''
மகனை ஆதரவாய் தோளோடு அணைத்தபடி கூறினார் அப்பா.
''நண்பர்கள் கையில், பணம் புரளும் போது, என்னிடம் இல்லாதது அசிங்கமாய் இருக்கிறது...''
குறுக்கிட்டபடி, ''ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை வாங்கி உண்ணும் நண்பர்களுடன் சேர்ந்து செயல்பட முயற்சிக்கிறாய்; பள்ளிக்கு படிக்க தானே போகிறாய்...'' என அதட்டினாள் அம்மா.
மனைவியை சமாதானப்படுத்தி, ''சரிப்பா... இன்னொரு நாள், இது பற்றி பேசலாம். நீ துாங்க செல்...'' என்றார் அப்பா.
குழப்பத்துடன் கடந்தது இரவு.
மீண்டும் காசு பற்றி பேச தைரியமில்லை.
மாதங்கள் ஓடின -
அன்று, ஈஸ்வரன் பிறந்த நாள்.
மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அழைத்தார் அப்பா.
''பிறந்த நாள் வாழ்த்துகள். உனக்கு பரிசாக, 'ஸ்மைலிங்' புத்தா உண்டியல் வாங்கியிருக்கேன்; திறந்து பார்...''
மகிழ்ச்சியுடன் உண்டியலை திறந்தான் ஈஸ்வரன்.
உள்ளே, 20, 10 ரூபாய் என, நாணயங்கள் கலந்து நிரம்பி இருந்தது.
அவற்றை எண்ணினான் ஈஸ்வரன். ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
''பள்ளியில் செலவழிக்க, காசு கேட்டாயே, நினைவு இருக்கிறதா... அதை தான் சிறுக சிறுக சேர்த்துள்ளேன்...
''வீண் செலவை குறைத்து சேமிப்பை ஊக்குவிக்க தான் இதை செய்தேன்; அதை உணர்ந்திருப்பாய்...''
மகிழ்ச்சியுடன், அப்பாவை இறுக அணைத்துக்கொண்டான் ஈஸ்வரன்.
''சேமித்த பணத்தில் மிதிவண்டி வாங்கி தருகிறோம்; இனி, நடந்து போக வேண்டாம்...''
மகிழ்ச்சியுடன் கூறினார் அம்மா.
''நல்லதை கற்றுத் தந்ததற்கு நன்றி...''
சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தான் ஈஸ்வரன்.
குழந்தைகளே... வீண் செலவை குறைத்து, சேமித்தால் வாழ்க்கை வளமாகும்!
- டி.ரவீந்திரன்