
ராமநாதபுரம், ராஜா உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 11ம் வகுப்பு படித்த போது, தமிழ் வகுப்பில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து வந்தேன். எப்படியும், பாஸ் மார்க் வாங்கி விடலாம் என்ற அலட்சிய எண்ணமே அதற்கு காரணம்.
தமிழாசிரியர் நாராயணசாமிக்கு அப்போது, 75 வயதாகியிருந்தது. பணி ஓய்வு பெற்றிருந்தவரை சிறப்பாசிரியாக நியமித்திருந்தார் தலைமையாசிரியர் ராஜா. வயது முதிர்வால் பார்வையில் குறைபாடும் ஏற்பட்டிருந்தது. எழுத்தை வாசிக்க சிரமப்படுவார். அந்த நிலையிலும், அவரது தமிழறிவு சிறப்பாக செயல்பட்டது.
உடல் உபாதைகளை உதறி, தெளிவாக பாடங்களை கற்பிப்பார். செய்யுள்களின் முதல் அடியை எடுத்து கொடுத்தால் பிறழாமல் சொல்லி விளக்குவார். அது, வியப்பை ஏற்படுத்தும். வகுப்பை கவனிக்கா விட்டால், 'கல்லுாரியில் இதை சொல்லி தர மாட்டாங்கப்பா...' என வேதனையை வெளிப்படுத்துவார்.
பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்பு நடக்கும் போதே பின்வாசல் வழியே சென்று விடுவர். இதை அறிந்து, அன்பு கனியும் பேச்சால் கட்டுப்படுத்துவார். அவர் ஊட்டிய மொழிப் புலமையால், பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் சிறப்பாக பயின்றேன்.
என் வயது, 73; தமிழக அரசு மாவட்ட கருவூல கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் நினைவு ஆல விருட்சமாக மனதில் படர்ந்திருக்கிறது!
- ந.ரமணாநந்தன், மதுரை.
தொடர்புக்கு: 99944 21985