
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி துவக்க பள்ளியில், 2001ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
வகுப்பு ஆசிரியையாக இருந்த சந்திரா அன்பும், கண்டிப்பும் நிறைந்தவர். ஒழுக்கம், நேர்மை, பிறருக்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை தவறாமல் போதிப்பார்.
ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நிறைவு பெறுவதை, மாலை, 4:00 மணிக்கு, மணி ஒலித்து அறிவிப்பர். உடனே, புயல் வேகத்தில் வெளியேறி பாய்ந்து ஓடுவர் மாணவ, மாணவியர்.
என் வகுப்பில் மாற்றுதிறனாளி மாணவி ஒருவர் இருந்தார். முந்தியபடி ஓடுவோருக்கு ஈடு கொடுக்க முடியாமல் விரக்தியுடன் ஒதுங்கி நிற்பார். அனைவரும் சென்ற பின், மெதுவாக வெளியேறுவார்.
இதை கவனித்த வகுப்பாசிரியை ஒருநாள் அனைவரையும் அமர வைத்து, 'ஊனம் என்றால் என்ன...' என கேட்டார். சுட்டியாக முந்திய ஒருவன், 'உடலில் குறைப்பாடு இருப்பதே ஊனம்...' என்றான்.
அதை மறுத்தவர், 'மனதில் இருக்கும் குறைப்பாடு தான் ஊனம். சக மாணவர்களுடன், நட்புறவு கொள்ளாமை, உதவும் மனமின்மை, அறிவு குறைப்பாடு, மனிதநேயம் இல்லாமை போன்றவையே ஊனம்...' என, புரியும்படி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, 'எந்த இடத்திலும் உடல் திறன் குறைந்த மாற்றுதிறனாளிகள் முதலில் செல்ல வழி விட வேண்டும். அவர்களின் இயலாமையை சுட்டிக் காட்டுவது போல், முந்தி செல்ல முயலக்கூடாது. இது போன்ற செயல்களை திருத்த முயற்சி செய்யுங்கள்...' என, கண்டிப்புடன் அறிவுரைத்தார். அப்போது தான் தவறு புரிந்தது. வருந்தி மன்னிப்பு கோரினோம்.
தற்போது, என் வயது, 33; கணவருடன் இணைந்து உணவு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறேன். பள்ளி வகுப்பறையில் சரியான விளக்கம் கூறி, மன ஊனம் போக்கிய ஆசிரியையிடம் கற்றதை பெருமையாக கருதுகிறேன்.
- ஜெ.இந்திரகுமாரி நாகராஜ், திருப்பூர்.