
கோடை துவங்கியது. காட்டில் ஓடையில் நீர் குறைய ஆரம்பித்தது.
முற்றிலும் வறட்சி ஏற்படும் முன், வேறு ஆதாரத்தை கண்டறிய வேண்டும் விலங்கினங்கள்.
துள்ளிக்குதித்த மான் கூட்டமும், வேகம் காட்டிய வரிக்குதிரைகளும் இது தொடர்பாக ஆலோசித்தன.
பேசி முடிவெடுக்க ஒற்றுமையுடன் கூடின.
'நண்பர்களே... செழிப்பான ஓடையை கண்டறிந்து வருகிறேன். பின், அனைவரையும் அழைத்து செல்கிறேன்...'
மான்களின் தலைவன் பேச்சை கேட்டு மகிழ்ந்தன வரிக்குதிரைகள்.
காட்டின் தென்கோடியில், பசும் புல்வெளியும், அதையொட்டி பெரிய ஓடையையும் கண்டறிந்து தகவல் கூறியது.
பின், மான்களும், வரிக்குதிரைகளும் அங்கு இடம் பெயர்ந்தன.
சில நாட்களுக்கு பின், அவற்றுக்குள் தகராறு ஏற்பட்டது.
'நான் தான் ஓடையை கண்டுபிடித்தேன். என்னை மீறி, இதில் நீர் அருந்த கூடாது...'
கர்வத்துடன் உத்தரவிட்டது மான்களின் தலைவன்.
'நண்பா... காட்டில் உள்ள ஓடை, எல்லா உயிரினங்களுக்கு பொதுவானது; எங்களை கட்டுப்படுத்த உன்னால் முடியாது...' என்றன வரிக்குதிரைகள்.
வீண் கர்வத்தால் மான் - வரிக்குதிரை கூட்டங்கள் பிரிந்து நின்றன.
இந்த சண்டையை கவனித்தது ஒரு சிறுத்தை. தனியாக மேயும் மான்களை வேட்டையாடுவது அதற்கு எளிதாக அமைந்தது.
இதனால், மான்கள் எண்ணிக்கையில் குறைய துவங்கின.
நண்பர்களாய் பழகி, ஒற்றுமையாக வாழ்ந்த போது, மகிழ்ச்சியும், பாதுகாப்பும் இருந்தது. கர்வத்தால் ஏற்பட்ட சண்டை அழிவுக்கு காரணமானது.
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது மான்களின் தலைவன்.
மீண்டும் நட்பாய் இணைந்தன. எதிரிகள் வலிமை குறைந்து பின் வாங்கின.
பட்டூஸ்... வெற்றியால் மகிழ்ச்சி அடையாலம். ஆனால், கர்வம் கொள்ளலாகாது. அது அழிவையே தரும்!
எம்.பி.தினேஷ்