PUBLISHED ON : மே 02, 2026

திருவாரூர் மாவட்டம், நெடுங்குளம்,
அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2006ல், 10ம் வகுப்பு
படித்தேன். எங்கள் வகுப்பு கணக்கு ஆசிரியையாக இருந்தவர் அமுதா.
அதுவரை, கணக்கு பாடம் என்றாலே எனக்கு பயம். சரியாக கணக்கு போடாவிட்டால்,
ஆசிரியர்கள் அடித்து வெளுத்துவிடுவர். இதனால், கணக்கு வகுப்பில் முகம்
தெரியாமல், மறைந்து கொண்டு அமர்ந்திருப்பேன். பொதுத் தேர்வில் தோல்வி
அடைந்து விடுவோனோ என்ற அச்சம், மனதில் தொற்றி இருந்தது.
ஆனால்,
அந்த சூழ்நிலையை மாற்றினார், கணக்கு ஆசிரியை. கணக்கு பாடத்தில் பின்தங்கி
இருந்தோருக்கு தனிக்கவனம் அளித்தார். நேரம் ஒதுக்கி, தனியாக அழைத்து
கற்றுக் கொடுத்தார். கணக்கு பாடம் மீது இருந்த பயம் விலகி, ஆர்வம்
ஏற்பட்டது. மாதிரி கணக்குகளை, அவர் கற்றுக் கொடுத்த விதம், என்னை
மட்டுமின்றி, வகுப்பில் அனைவரையும் பொதுத் தேர்வில் வெற்றி பெற வைத்தது.
தற்போது என் வயது, 33. ஊடக நிறுவனத்தில் பணி புரிகிறேன். வாழ்க்கையிலும்,
பணியிலும் சிந்தித்து செயல்பட, கணக்கு பாடம் தான் எனக்கு விதை போட்டது.
அதற்கு அடித்தளமிட்ட கணக்கு ஆசிரியை அமுதாவின் முகமும், அவர் அடிக்காமல்,
நிதானமாக சொல்லி கொடுத்த விதமும், இப்போதும் என் நினைவில் நிழலாடுகிறது.
- ரா.விமல்ராஜ், திருவாரூர்.
தொடர்புக்கு: 88702 99170
