PUBLISHED ON : அக் 12, 2024

கரீபியன் நாடான கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்தது. மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். மருத்துவர்களை அனுப்பி உதவ, உலக நாடுகளை கெஞ்சினார் அந்நாட்டின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவுக்கு பயந்து, எந்த நாடும் உதவ முன்வரவில்லை. பெரும் இழப்பிற்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தார் பிடல் காஸ்ட்ரோ.
கியூபாவில் மருத்துவக் கல்லுாரிகள் ஏராளம் துவங்கப்பட்டன. அதுவும் மருத்துவக் கல்வி முழுக்க இலவசம் என்ற நிலைக்கு வந்தது. அமெரிக்காவில், 420 பேருக்கு ஒரு மருத்துவர். ஐரோப்பாவில், 330 பேருக்கு ஒரு மருத்துவர். இந்த நிலையில் கியூபாவில், 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சாதனையை எட்டிப்பிடித்தது.
உலகிலே தரமான மருத்துவம் வழங்கும் நாடு என்ற பெயரையும் பெற்றது. அமெரிக்க மாணவர்கள், கியூபா நாட்டிற்கு அதிகமாக மருத்துவச் சுற்றுலா செல்ல துவங்கினர்.
இவ்வாறு மருத்துவத்தில் புரட்சி செய்தது கியூபா. பின், உலகில் எந்த நாட்டில் பிரச்னை என்றால், மருந்து, மாத்திரையுடன் மருத்துவர்களை இலவசமாக அனுப்பி வருகிறது. அவ்வகையில், 95 நாடுகளுக்கு, 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பி உதவியுள்ளது கியூபா.
மன உளைச்சலையும், வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்து வருகிறது. இந்தியாவும், கியூபாவும் அணிசேராக் கொள்கையை ஆதரித்து வருகின்றன.
- மு.நாவம்மா