
அக்பர் அரசவையில் உள்ள முல்லா தோபியாஸா, நீண்ட தாடியுடையவர். எந்நேரமும் தாடியை உருவியவாறு, பீர்பலைக் கவிழ்ப்பதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவார். அறிவில் சிறந்த பீர்பல், முல்லாவின் திட்டங்களை நன்கு அறிவார்.
பிறர் முகக் குறிப்பிலிருந்தே, அவர்கள் மனத்திலுள்ளதை சொல்லக் கூடிய அளவுக்கு திறமை படைத்த பீர்பலுக்கு, முல்லாஜியின் கெட்ட எண்ணம்தான் தெரியாதா என்ன? தக்க தருணம் வாய்க்கும்போது அவருக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணினார்.
ஒருநாள் --
''பீர்பல், இதுவரை நாம் பலமுறை முட்டாள்களைப் பற்றி சர்ச்சைகள் செய்திருக்கிறோம். நீயும் அவ்வப்போது பல விளக்கங்கள் கொடுத்தும் இன்னும் என் மனம் சமாதானமடையவில்லை. மீண்டும் அதே கேள்வி என் மனதில் எழுகிறது,'' என்றார் அக்பர்.
''அரசே, முட்டாள்களைப் பற்றியும், அறிவாளிகளைப் பற்றியும் இன்னும் கேட்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன்; கேளுங்கள். என் அறிவுக்கு எட்டிய வரையில் தங்களுக்கு விளக்கம் தர முயற்சிக்கிறேன்,'' என்றார் பீர்பல்.
''ஆம் பீர்பல், நம்முடைய நகரில் முட்டாள் யார், புத்திசாலி யார் என்று உன்னால் குறிப்பிட்டுக் கூற முடியுமா?'' என்றார் அக்பர்.
''அரசே, அவ்வாறு கூறினால், நான் சிலருடைய வெறுப்புக்கு பாத்திரனாகலாம்,'' என்றார் பீர்பல்.
''இதில் விருப்பு, வெறுப்பு என்ன! உன் மனத்துக்குப் பட்டதை தைரியமாகச் சொல். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூறு?'' என்றார் அக்பர்.
''அரசே, தாங்கள் கேட்பதால் கூறுகிறேன். என் புத்திக்கு எட்டியவரையில் நம் அரசவையில் உள்ள முல்லாஜிதான்...'' என்று பீர்பல் கூறிக் கொண்டிருக்கும் போது ''அவரைப் புத்திசாலி என்று கூறுகிறாயா? அவரை விட எத்தனையோ சிறந்த அறிவாளிகள் நம் நகரில் இருப்பார்களே!'' என்றார் அக்பர்.
''ஆம் அரசே! அவரை விட புத்திசாலி நம் நகரில் ஒருவர் இருக்கிறார்; அவர் ஒரு வியாபாரி. நம் நகரில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் பகவான்தாஸ்தான், முல்லாஜியை விட சிறந்த புத்திசாலி என்பது என் கருத்து,'' என்றார் பீர்பல்.
இதைக் கேட்ட அக்பர் சக்ரவர்த்தி வியப்படைந்தவராய், ''பகவான்தாஸா! அவனுக்கும், படிப்புக்கும் ஜன்மப் பகையாச்சே! அவனா நம் முல்லாஜியை விட புத்திசாலி?'' என்றார்.
''ஆம் அரசே! நம் முல்லாஜியை விட அவன்தான் புத்திசாலி என்பது என் கருத்து. வேண்டுமானால் ஒரு சோதனை வைத்துப் பார்ப்போம். முதலில் முல்லாஜியைக் கூப்பிடுவோம். பின், பகவான்தாஸைக் கூப்பிடுவோம். இரண்டு பேரிடமும் நானே பேசுவேன். இடையில் தாங்கள் ஒன்றும் வாயே திறக்கக் கூடாது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள். இரண்டு பேரில் யார் அதிக புத்திசாலி என்பது தங்களுக்குத் தெரிந்து விடும்,'' என்றார் பீர்பல்.
உடனே, முல்லாஜியை அழைத்து வருமாறு காவலன் ஒருவனை அனுப்பினார் பீர்பல்.
முல்லா தோபியாஸாவும், என்னவோ ஏதோ? என்று அலறியடித்தவாறு அரண்மனைக்கு வந்தார்.
பீர்பல் அவரைப் பார்த்து, ''முல்லாஜி, அரசருக்கு ஏதோ ஒரு காரியத்திற்காக தங்கள் தாடி தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக தாங்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடுவதாகக் கூறுகிறார்,'' என்றார் பீர்பல்.
''அப்படியா! என்ன புண்ணியம் செய்தேன்! மாமன்னருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்த ஏழையால் முடிந்ததே என்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்று கூறியவாறே, மன்னருக்காக தம் தாடியை எடுத்து விடச் சம்மதித்தார். உடனே, அரண்மனை முடி திருத்துபவர் வந்து முல்லாஜியின் தாடியை சிரைத்து விட்டார்.
''இதற்காகத் தங்களுக்கு எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் பெற்றுச் செல்லுங்கள்,'' என்று பீர்பல் கூறியதும், அவர், 50 மொகராக்களை பெற்றுச் சென்றார்.
பிறகு, பலசரக்குக் கடை பகவான்தாஸை வரவழைத்தார். அவன் வந்ததும், அவனிடம் பீர்பல், மாமன்னருக்கு அவனுடைய தாடி தேவையென்றும், எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுப்பதாகவும், கூறினார்.
''ஐயா, மாமன்னருக்கு என்னுடைய தாடியைத் தர என்ன புண்ணியம் செய்தேன். எனக்கு நீண்ட நாட்களாக தாடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. முதலில் தாடி வளர்த்தேன். கொஞ்சம்தான் வளர்ந்திருந்தது. உடனே தகப்பனார் காலமாகிவிட்டார். அவருக்கு சடங்குகள் செய்யும் போது அருமையாக வளர்த்த தாடியை சிரைத்து விட்டேன்.
''என்னுடைய தகப்பனார் இறந்ததற்கு, ஆயிரம் மொகராக்கள் செலவாயிற்று. மறுபடியும் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் வளர்ந்ததும் என் தாயார் இறந்துவிட்டார். அவர்களுடைய இறுதிச் சடங்கிற்கு, 50 ஆயிரம் மொகராக்கள் செலவு ஆயிற்று.
''அதற்குப் பிறகு மீண்டும் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். என் தாயார் தகப்பனார் நினைவு நாளன்று சிரார்த்தம் செய்வதற்காக, மறுபடியும் இரண்டு தடவை தாடியை எடுக்க வேண்டியதாயிற்று. இம்முறை ஒவ்வொரு தடவையும், ஐந்தாயிரம் ஐந்தாயிரம் மொகரா செலவு ஆயிற்று. அதன் பிறகு நடுவே எந்தவிதமான இடையூறும் வரவில்லை. முன்பு ஒவ்வொரு முறை எடுத்ததை விட இப்போது நாலைந்து பங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு, 20 ஆயிரம் மொகராக்களாவது கொடுத்தால்தான் கட்டும்,'' என்றான் பகவான்தாஸ்.
''சரி, இந்தா 20 ஆயிரம் மொகராக்கள்,'' என்று பகவான்தாஸுக்குக் கொடுத்த பீர்பல் அவனுடைய தாடியை சிரைக்குமாறு அரண்மனை முடி திருத்துபவருக்கு உத்தரவிட்டார்.
உடனே, முடி திருத்துபவர் பகவனான்தாஸை உட்கார வைத்து கிண்ணத்திலிருந்து தண்ணீரை எடுத்து தாடியின் மேல் தேய்த்தான். பின் தாடியை சிரைப்பதற்காக கத்தியைக் கொண்டு போனான். உடனே பகவான் தாஸ் கோபத்துடன் எழுந்து கொண்டு, ''ஏ முட்டாளே, இது என்ன பலசரக்குக்கடை பகவான்தாஸ் தாடி என்று நினைத்து விட்டாயா? இது இப்போது மாமன்னரின் தாடி தெரிந்ததா. அது தெரியாமல் முரட்டுத்தனமாக இழுக்கிறாயே!'' என்று கோபத்துடன் கத்தினான்.
அவன் பேச்சைக் கேட்டதும் மாமன்னருக்கு கோபம் வந்து, ''இந்த முட்டாளுடைய தாடி எனக்குச் சொந்தமா? அடித்து விரட்டுங்கள் இவனை,'' என்றார்.
காவல்காரர்களும் பகவான்தாஸை அடித்து விரட்டி விட்டனர்.
அவன் போன பிறகு, ''பார்த்தீர்களா, அரசே! அவனைப் போய் படிக்காதவன் என்றீர்களே, 20 ஆயிரம் மொகராக்கள் வாங்கிக் கொண்டு, தாடியையும் கொடுக்காமல் போய் விட்டானே... அவன் புத்திசாலியா? ஐம்பது மொகராவுக்கு தாடியை பறிகொடுத்துவிட்டுச் சென்ற முல்லாஜி புத்திசாலியா?'' என்றார் பீர்பல்.
முல்லாஜியை விட பகவான்தாஸே புத்திசாலி என்று ஒத்துக் கொண்டார் அக்பர்.