
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
தமிழாசிரியையாக இருந்த ருக்மணி, 'பொய் பேசவோ, திருடவோ, ஏமாற்றவோ செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் அகப்படுவர்... அவதியும் படுவர்...' என அறிவுரைப்பார். விடுமுறை நாட்களில், நண்பர்களுடன் ஜாலியாக காட்டுப்பகுதிக்கு போவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது, புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானேன்.
அன்று என் வீட்டில், டீ தயாரிக்க சமையல் அறையில் அடுப்பை பற்ற வைத்தேன். அப்போது ஒரு பீடியை கவ்வி புகைத்து கொண்டிருந்தேன். திடீரென அம்மா வந்ததை கண்டு வீசி எறிய முயன்றேன். தவறி அது, எங்கு விழுந்தது என தெரியவில்லை.
பயத்துடன் விழித்த என்னிடம், 'புகைப்பிடித்தாயா... ஊதிக் காட்டு...' என கன்னத்தில் அறைந்தார் அம்மா; வடிகட்டியில் டீ துாளுடன் கிடந்த பீடி துண்டை எடுத்து காட்டினார். கண்ணீருடன் ஒப்புக் கொண்டேன். அந்த ஆசிரியை அறிவுரைத்த, 'பலநாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்' என்ற முத்தான வாசகம் மனதில் பதிந்தது; அன்றே புகைக்கும் பழக்கத்தை கைவிட்டேன்.
தற்போது, எனக்கு, 42 வயதாகிறது; அந்த ஆசிரியையிடம் கற்ற பொன் மொழியை பின்பற்றி வாழ்கிறேன்.
- ஏ.ஜி.முகம்மது தவுபீக், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 88257 68085

