PUBLISHED ON : செப் 23, 2016

ஒரு காட்டில், நரி ஒன்று உணவு தேடி அலைந்தது. வழியில் இருந்த பெரிய பள்ளத்தை கவனிக்காமல் தவறி விழுந்து விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், அதனால் வெளியே வர முடியவில்லை.
'நன்றாக மாட்டிக் கொண்டோமே! இந்தப் பள்ளத்தில் இருந்து எப்படி வெளியே வருவது' என்று யோசித்தது. உரத்த குரலில் ஊளையிடத் துவங்கியது.
நரியின் ஊளைச் சத்தம் கேட்டு, சிங்கம் ஒன்று அங்கு வந்தது. பள்ளத்தில் இருந்த நரியைப் பார்த்து, ''எதற்காக இப்படி ஊளை இடுகிறாய்?'' என்று கேட்டது.
''இந்த உலகமே அழியப் போகிறது. அதை அறிவிக்கத்தான் நான் ஊளையிடுகிறேன்,'' என்றது நரி.
''உலகம் அழியப் போகிறதா? உனக்கு எப்படித் தெரியும்?'' என்று திகைப்புடன் கேட்டது சிங்கம்.
''நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில், உலகம் அழியும் போது இந்தப் பள்ளத்தில் உள்ளவர்கள் மட்டுமே தப்பிப்பர் என்று, அசரீரி சொன்னது. அதனால்தான் நான் இந்த பள்ளத்தில் குதித்தேன். இந்தச் செய்தியை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஊளையிடுகிறேன்,'' என்றது நரி.
அதன் பேச்சை உண்மை என்று நம்பிய சிங்கம், ''நானும் இந்தப் பள்ளத்தில் குதிக்கவா?'' என்று கேட்டது.
''என்ன நடந்தாலும் தும்ம மாட்டேன் என்று வாக்குறுதி கொடு. அதன் பிறகு நீ என்னுடன் சேர்ந்து உயிர் தப்பலாம்,'' என்றது நரி.
''எதற்காகத் தும்மக் கூடாது?'' என்று வியப்புடன் கேட்டது சிங்கம்.
''தும்மினால் உன்னை இந்தப் பள்ளத்தில் இருந்து வெளியே தூக்கி எறிந்து விடுவேன். தும்மியவர் இங்கே இருந்தால், எல்லாருக்கும் ஆபத்து,'' என்றது நரி.
''என்ன நடந்தாலும் தும்ம மாட்டேன்,'' என்று சொல்லி விட்டு அந்தப் பள்ளத்தில் குதித்தது சிங்கம்.
மறுபடியும் உரத்த குரலில் ஊளையிடத் துவங்கியது நரி. ஊளைச் சத்தம் கேட்டு கரடி ஒன்று அங்கு வந்தது.
பள்ளத்திற்குள், சிங்கமும், நரியும் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது.
''நரியே ஏதேனும் ஆபத்தா? ஏன் இப்படி ஊளையிடுகிறாய்?'' என்று கேட்டது கரடி.
''கரடியே உனக்கு செய்தியே தெரியாதா? இந்த உலகமே அழியப் போகிறது. அப்போது இந்த பள்ளத்தில் உள்ளவர்கள் மட்டுமே உயிர் தப்பப் போகின்றனர். அதனால் தான், நானும் சிங்கமும் இங்கே இருக்கிறோம்,'' என்றது நரி.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த கரடி, ''நானும் இந்தப் பள்ளத்தில் குதிக்கவா?'' என்று கேட்டது.
''நீ தும்மினால் உன்னைத் தூக்கி வெளியே எறிந்து விடுவோம். தும்மியவர் யாரும் இங்கே இருக்கக் கூடாது என்பது விதி. இதற்கு சம்மதமானால் உள்ளே குதி,'' என்றது நரி.
''நான் தும்ம மாட்டேன்,'' என்று சொல்லி விட்டு, கரடியும் அந்தப் பள்ளத்தில் குதித்தது.
மீண்டும், உரத்த குரலில் ஊளையிடத் துவங்கியது நரி.
அங்கு வந்த யானை ஒன்று அந்தப் பள்ளத்தைப் பார்த்தது. உள்ளே சிங்கம், கரடி மற்றும் நரியும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தது.
''நரியே ஏன் இப்படி ஊளையிடுகிறாய்?'' என்று கேட்டது.
எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னது நரி .
இப்படியே, புலி, ஓநாய், ஒட்டகம், குதிரை என்று ஒவ்வொரு விலங்காக அந்தப் பள்ளத்தில் குதித்தன. பள்ளத்திற்குள் கூட்டம் நெருக்கத் துவங்கியது
திடீரென, 'அச்' என்று பெரிய தும்மல் போட்டது நரி.
''நீ தும்மல் போட்டு விட்டாய்; இனி நீ இங்கே இருக்கக் கூடாது. நீ இருந்தால் எங்களுக்கு எல்லாம் ஆபத்து!'' என்று எல்லா விலங்குகளும் கத்தின.
''ஐயோ, என்னைத் தூக்கி வெளியே எறிந்து விடாதீர்கள். என்னை அறியாமல் தும்மல் போட்டு விட்டேன். இந்த முறை மன்னியுங்கள்,'' என்று கெஞ்சியது நரி.
''உன்னால் நாங்களும் சாக வேண்டுமா?'' என்ற யானை தன் துதிக்கையால் நரியைத் தூக்கி பள்ளத்திற்கு வெளியே வீசி எறிந்தது.
தன் சூழ்ச்சி வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்த நரி, அங்கிருந்த ஓட்டம் பிடித்தது.
