PUBLISHED ON : நவ 04, 2023

விருதுநகர், ஷத்திரியா வித்யாசாலா உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 9ம் வகுப்பு படித்த போது தலைமை ஆசிரியராக இருந்தார் ஜார்ஜ். மிகவும் கண்டிப்பானவர். அவரைக் கண்டாலே மாணவர்கள் பயந்து நடுங்குவர்.
பள்ளி சென்று வருவதற்கு உதவியாக, என் தந்தை மிதிவண்டி வாங்கி கொடுத்திருந்தார். அது கிழக்காசிய நாடான ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. சக்கரங்கள் சிறிதாக இருந்தாலும், கியர் வசதியுடன் வேகமாக செலுத்த முடியும். எந்த வயதுள்ளவரும் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கையை சரி செய்ய முடியும்.
நீலம், மஞ்சள், பச்சை வண்ண கலப்பில் இருந்ததால் ஓட்டும் போது, கவனத்தை ஈர்த்து திரும்பி பார்க்க வைக்கும்.
ஒருநாள் மிதிவண்டியில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த என்னை தலைமை ஆசிரியர் தடுத்து நிறுத்தினார். நடுங்கியபடி இறங்கினேன். சக மாணவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். எதிர்பாரா வகையில் மிகவும் நிதானமாக, 'உன் மிதிவண்டி புதுமையாக இருக்கிறதே... இதை ஓட்டி பார்க்க ஆசை. அதனால் தான் நிறுத்தினேன்...' என்று கூறியபடி, மிதிவண்டியில் அமர்ந்து மைதானத்தில் வலம் வந்தார். அவரது குழந்தை மனம் வியக்க வைத்தது.
தற்போது என் வயது 72; மத்திய அரசின் அக்மார்க் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றேன். அன்று அந்த தலைமை ஆசிரியர் என் மிதிவண்டியை ஓட்டிய போது கண்ட குழந்தைத்தனம் மனதில் பசுமையாக இருக்கிறது. கடுமையிலும் மென்மை மறைவாக இருக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்.
- க.கீராசந்த், விருதுநகர்.
தொடர்புக்கு: 96558 41644
