PUBLISHED ON : டிச 21, 2019

ஆங்கிலேய சிறுவன் நினைவாக, 300 ஆண்டுகளுக்கு முன் கட்டிய நினைவுச் சின்னம், சென்னை, சட்டக்கல்லுாரி வளாகத்தில் உள்ளது. தமிழக புராதனக் கட்டட கழகம் பராமரித்து வருகிறது.
அந்த சிறுவன் பெயர் டேவிட் யேல். அவனது தந்தை, எல்ஹூ யேல்
சென்னையை ஆண்ட ஆங்கிலேய கவர்னர்களில் முக்கியமானவர். புனித ஜார்ஜ் கோட்டை தலைவராகவும் இருந்தார். அங்கு, ஆங்கிலேய கொடியை, 1687ல் முதன்முதலில் ஏற்றினார். அமெரிக்காவில் பிரபலமான யேல் பல்லைக்கழகத்தை உருவாக்கியவர்.
இவர், அமெரிக்காவில் பிறந்தார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் வளர்ந்தார். அடிமை வாணிகத்தில் பொருள் குவித்தார். இந்தியாவிற்கு, 1672ல் வந்தார்.
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள, புனித மரியா தேவாலயத்தில், நவ.,4, 1680ல் அவரது திருமணம் நிகழ்ந்தது. மணப்பெண் விதவையான காரின் ஹின்மர்ஸ்க்.
அந்த ஆலயத்தில் முதலில் பதிவாகியுள்ள திருமணம் அது தான். இந்த தம்பதிக்கு, இரண்டு மகன், ஒரு மகள். மூத்த மகன் தான் டேவிட் யேல்; சிறுவயதில் இறந்தவனுக்கு, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
