PUBLISHED ON : ஜூலை 08, 2011

முன்னொரு காலத்தில் சோழ நாட்டைக் கோப்பெருஞ்சோழன் என்ற அரசர் ஆண்டு வந்தார். நல்லாட்சி செய்த அவர் புலமையிலும் சிறந்து விளங்கினார். புலவர்களை மதித்த அவர், வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கினார்.
இப்படி அவர் செல்வத்தை வாரி வழங்குவது அவர் மகன்களுக்குப் பிடிக்கவில்லை. பொருளாசை அவர்கள் கண்களை மறைத்தது. தந்தையை எதிர்த்துப் போர் முரசும் கொட்டினர்.
'பெற்ற மகன்களே தன்னை எதிர்க்கிறார்களே... என் மானமே போய் விட்டது!' என்று கலங்கினார் அவர். மானம் அழிந்த பின் உயிர் வாழ வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். யார் தடுத்தும் கேளாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கினார்.
அவரிடம் அன்பு கொண்ட பலர் அவருடன் வடக்கிருந்து உயிர் துறக்க முன்வந்தனர். இதனால் அவர் வடக்கிருந்த இடத்தில் மிகுந்த கூட்டமாக இருந்தது. சிலர் அமர்வதற்கு இடம் இல்லாமல் துன்பப்பட்டனர். இந்த நிலையைப் பார்த்தார் அவர். தன் அருகே இருந்த பொத்தியாரிடம், ''என் அருமை நண்பர் பிசிராந்தையார் வடக்கிருக்க இங்கே வருவார். என் அருகே அவருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வையுங்கள்!'' என்றார்.
இதைக் கேட்டு வியப்பு அடைந்த பொத்தியார், ''அரசே! நான் உங்களுடன் நீண்ட காலமாகப் பழகி வருகிறேன். பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் உங்களைச் சந்தித்ததாகவோ பழகியதாகவோ தெரியவில்லை. உங்களுக்காக அவர் இவ்வளவு தொலைவு வந்து வடக்கிருப்பாரா? எனக்கு ஐயமாக உள்ளது!'' என்றார்.
''பொத்தியாரே! நீர் சொன்னது போல நானும் பிசிராந்தையாரும் நேரில் சந்தித்தது இல்லை. பழகாமலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நட்பு கொண்டுள்ளோம். நான் பேருடனும், புகழுடனும் இருந்த போது அவர் வராமல் இருக்கலாம். இப்போது உள்ள சூழலில் கண்டிப்பாக வருவார்!'' என்று உறுதியுடன் சொன்னார்.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் செய்தியை அறிந்தார் பிசிராந்தையார். நண்பருக்காக உயிரைவிட முடிவு செய்தார். தன் கடமையை எல்லாம் விரைந்து முடித்துவிட்டுச் சோழ நாடு வந்தார். சோழன் வடக்கிருக்கும் இடத்தை அடைந்தார்.
அதற்குள் கோப்பெருஞ் சோழன் உயிர் நீத்துவிட்டார். பலர் அங்கே வடக்கிருந்தனர். அவர்களிடம் அவர், ''நான் பிசிராந்தையார்; கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருக்க வந்தேன். அதற்குள் நண்பர் உயிர் நீங்கி விட்டதே. அவரைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லையே!'' என்று கண் கலங்கினார்.
அங்கிருந்த பொத்தியார் இதைக் கேட்டார். பிசிராந்தையாரைப் பார்த்து, ''உங்களுக்காக ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கச் சொன்னார் கோப்பெருஞ்சோழன். நான் ஐயப்பட்டுக் கேட்டதற்கு என் அருமை நண்பர் கண்டிப்பாக வருவார் என்றார். உங்களுக்கு உரிய இந்த இடத்தில் அமருங்கள். பழகாமலே உங்களுக்குள் ஏற்பட்ட ஆழ்ந்த நட்பைப் போற்றுகிறேன்!'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார்.
இதைக் கேட்டு அங்கே இருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். அங்கேயே வடக்கிருந்து பிசிராந்தையாரும் உயிர் நீத்தார்.
***
