PUBLISHED ON : மே 23, 2020

மதுரை, ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன். அந்த பள்ளி வளாகம், பிரமாண்டமாக இருக்க கண்டு பிரமித்தேன்.
முதல் நாள் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும், 'நியூ அட்மிஷனா நீ...' என்றனர் மாணவியர்.
'இல்லை...'
'அப்போ ஏன், 'கலர் டிரஸ்' போட்டிருக்க...'
'புதுசா பள்ளியில் சேர்ந்துருக்கேன்...' என்று கூறியதும், 'கொல்' என, சிரித்தனர்; வளாகமே அதிர்ந்தது. புரியாமல் விழித்தேன். இப்படி முதல்நாள் அனுபவம் இருந்தது.
ஒருநாள், வகுப்பறையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் மாணவியர். திடீர் என, 'ஏ.எச்.எம்., வருகிறார்...' என்றாள் ஒரு மாணவி. அடுத்த நொடி அனைத்தும் ஒடுங்கி அமைதி தவழ்ந்தது.
இதை கவனித்து, மற்றொரு நாள் வகுப்பறை சலசலத்த போது, 'பி.எச்.எம்., வருகிறார்...' என்றேன். இதை கேட்ட மாணவியர், உருண்டு உருண்டு சிரித்தனர்.
ஏ.எச்.எம்., என்றால், 'அசிஸ்டென்ட் ஹெட்மாஸ்டர்' என்பதன் சுருக்கம், பி.எச்.எம்., என்பதற்கு விளக்கமே கிடையாது என்பதை தெரிந்து கொண்டேன். என் ஆங்கில புலமை பல்லிளித்தது.
தற்போது என் வயது, 43; ஆங்கிலம் புரியாமல், பள்ளியில் செய்த ரகளைகளை நினைத்தால் வெடித்து சிரித்து விடுகிறேன்.
- எஸ்.சங்கரசெல்வி, மதுரை.
தொடர்புக்கு: 96290 79275
