தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முட்டாள் வேலைக்காரன்!

முட்டாள் வேலைக்காரன்!

முட்டாள் வேலைக்காரன்!


PUBLISHED ON : ஜூன் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகப்பெரிய செல்வந்தரிடம் இளைஞன் ஒருவன் வேலை கேட்டு வந்தான்.

''ஐயா... நீங்கள் கொடுக்கும் வேலையை நான் மிகச் சிறப்பாக செய்வேன்...'' என்றான்.

அவன் பணிவு, செல்வந்தருக்கு மிகவும் பிடித்துவிட்டது. முட்டாள் என்று அறியாமலே, வேலை கொடுத்தார் செல்வந்தர்.

சில நாட்கள் சென்றன -

செல்வந்தருக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவர் சோதித்துப் பார்த்து, 'பயப்படும்படி ஒன்றும் இல்லை; சற்றே தளர்ச்சி உள்ளது; ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிடுங்கள்; எல்லாம் சரியாகி விடும்...' என்றார்.

இதைக் கேட்ட செல்வந்தர், ''மருத்துவர் கூறியதை கேட்டாயா... எங்கள் குலத்தில் பிறந்தோர் இறைச்சி உண்ண மாட்டார்கள். ஆனால், நான் மருந்துக்காக சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளேன்; நீ யாருக்கும் தெரியாமல், இறைச்சி வாங்கி வர வேண்டும்...'' என்று இளைஞனிடம் சொன்னார்.

உற்சாகமானான், இளைஞன்.

''முதலாளி... கவலைப்படாதீங்க; நான் பார்த்துக் கொள்கிறேன்...'' என்றபடி, கடை வீதிக்குச் சென்றான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

'ரகசியம் காப்பவர்கள் யார் யார் என்று விசாரிப்போம்; அவர்களிடம் மட்டும் இந்த விஷயத்தை சொல்லலாம்' என்று நினைத்தான்.

''ரகசியம் காப்போர் இங்கு யாரும் இருக்கிறீர்களா...'' என்று கூவினான்.

எல்லாரும் அவனை வினோதமாக பார்த்தனர்; அதோடு அவனை சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது.

''நான், ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்; அது வேறு யாருக்கும் தெரிய கூடாது; ஏனென்றால், அதனால், என் முதலாளி அவமானப்பட வேண்டியிருக்கும். ரகசியத்தை காப்பாற்றுபவர்கள் மட்டும், இங்கே நில்லுங்கள்; மற்றவர்கள் போகலாம்...'' என்றவன், அங்கு நின்றவர்களிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

''என் முதலாளிக்கு உடல்நலம் கெட்டு விட்டது; அவரை சோதித்த மருத்துவர், ஆட்டு இறைச்சியை சாப்பிட பரிந்துரைத்துள்ளார். யாருக்கும் தெரியாமல் இறைச்சி வாங்கி வர, என் முதலாளி அனுப்பினார். இது மிகவும் ரகசியம் என்று கூறியுள்ளார். அதனால் நீங்களும் ரகசியம் காக்க வேண்டும். இதை யாரிடமும் கூறாதீர்கள்...'' என்றான்.

அவன் முட்டாள்தனத்தை எண்ணி சிரித்தபடியே, கலைந்து சென்றனர் மக்கள்.

கடைக்கு சென்றவன், இறைச்சியுடன் வெளியே வந்தான்.

'எதையும், ஒருமுறைக்கு, நான்கு முறை சிந்தித்தே செய்ய வேண்டும்' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அருகிலிருந்த ஒருவனிடம், ''ஐயா... எங்கள் முதலாளி வாழ்நாளில் ஒருமுறை கூட, இறைச்சி சாப்பிட்டதில்லை; இன்று, உடல்நிலை காரணமாக, ஆட்டிறைச்சி சாப்பிட வேண்டிய நிலை; இறைச்சி உண்டால் தீங்கு ஏதாவது ஏற்படுமா...'' என்று கேட்டான்.

''ஆட்டு இறைச்சி உணவை செரிமானம் செய்வது உன் போன்ற இளைஞர்களுக்கே கடினம்; முதியவருக்கு எப்படி செரிக்கும்... கண்டிப்பாக தீங்கு தான்...''

''வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்...''

''மதுவுக்கு, செரிக்கும் தன்மை உண்டு; அதனால், மதுவாங்கிச் செல்...''

முட்டாள் இளைஞன், மதுபாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டான்.

அருகிலிருந்த முதியவரிடம், ''என் முதலாளிக்கு இறைச்சி செரிக்க, மதுவாங்கிச் செல்கிறேன்; இதைக் குடித்தால், அவருக்கு கெடுதல் எதுவும் ஏற்படுமா...'' என்றான்.

''முதியவர்கள் மது அருந்த கூடாது; விரைவில் குடலில் புண் ஏற்பட்டு விடும்; அதனால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது...'' என்றார்.

'முதலாளி இறந்து விட்டால் என்ன செய்வது' என்று யோசித்தான் இளைஞன்.

அதனால், தாரை தப்பட்டை அடிப்பவர்களையும், பாடை துாக்குபவர்களையும் கூலிக்கு அமர்த்திய முட்டாள், ஒரு கையில் இறைச்சியுடனும், மறு கையில் மதுபாட்டிலுடனும் நடந்து வர, பின்னாலேயே தாரை தப்பட்டை அடித்து, ஆரவாரத்துடன் ஆடியபடி ஒரு கூட்டம் வந்தது.

பொதுமக்கள் அதை பார்த்து, 'ஐயோ... அந்த கிழவர் நன்றாக தானே இருந்தார்; திடீரென்று இறந்து போய்விட்டார் போலிருக்கிறதே' என்று உச்சிக் கொட்டினர்.

முட்டாள் வேலைக்காரன் வீட்டிற்கு சென்றான்; செல்வந்தர் முன் இறைச்சியையும், மதுவையும் வைத்து, ''உங்களுக்கு இறைச்சியுடன், மதுவும் வாங்கி வந்துள்ளேன்...'' என்றான்.

அதிர்ச்சியடைந்த செல்வந்தர், ''மது வாங்கி வரச் சொல்லவில்லையே...'' என்றார்.

''ஐயா... இறைச்சி சாப்பிட்டால் முதியவர்களுக்கு செரிமானம் ஆகாதாம்; மதுவுக்கு செரிக்க வைக்கும் ஆற்றல் உண்டாம்; அதனால், மதுவையும் வாங்கி வந்து விட்டேன்...'' என்று பெருமை பொங்க சொன்னான் இளைஞன்.

வீட்டிற்கு வெளியே, தாரை தப்பட்டை ஓசை பெரிதாக கேட்டது. வெளியில் வந்து பார்த்த செல்வந்தர், ''இதெல்லாம் என்ன...'' என்றார்.

''ஐயா... மது சாப்பிட்டால், குடல் புண் வந்து இறந்து விடுவீர்களாம்; அதனால் தான், தாரை தப்பட்டை அடிப்பவர்களையும், பாடையில் துாக்கிச் செல்வர்களையும் கையோடு அழைத்து வந்து விட்டேன்...'' என்றான்.

''அடேய்...'' என்று அலறினார் செல்வந்தர்.

''ஐயா... நீங்கள் தானே எப்போதும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறுவீர்கள்...'' என்றான் இளைஞன்.

''உன் சிந்தனையை துாக்கி குப்பையில் போடு...'' என்ற செல்வந்தர், அந்த முட்டாளை அடித்து துரத்தி விட்டு, உடன் வந்தவர்களை சமாதானப் படுத்தி, அனுப்பி வைத்தார்.

குட்டீஸ்... முட்டாளாக இருக்காதீங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us