PUBLISHED ON : ஏப் 02, 2022

மனவலிமையால் சாதனைகள் புரிந்து, உலகில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு தொடர்...
நரேந்திரன் கண்ட தீர்வு!
சிறுவன் நரேந்திரன், பொருட்காட்சி, கண்காட்சி, நினைவுச் சின்னம் மற்றும் பூங்காக்களுக்கு, அவ்வப்போது, நண்பர்களுடன் சுற்றுலா செல்வான். கோல்கட்டா, புறநகர் பகுதியில் இருந்த உயிரியில் பூங்காவுக்கு ஒரு நாள் சென்றான்.
மகிழ்ச்சியாக பொழுது போயிற்று; சுற்றுலா முடிந்து படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், நண்பன் ஒருவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிற்று; அவன் வாந்தி எடுத்தான். அதைப் பார்த்த படகோட்டிகள், 'படகை சுத்தப்படுத்தி தர வேண்டும்; இல்லா விட்டால், இங்கிருந்து போக முடியாது...' என்று கண்டிப்புடன் கூறினர்.
கரையை அடைந்தது படகு.
'சுத்தப்படுத்தா விட்டால் இறங்க முடியாது...' என கெடுபிடி செய்தனர் படகோட்டிகள்.
யாரும் கவனிக்காத நேரத்தில், திடீர் என படகிலிருந்து குதித்தான் நரேந்திரன். கங்கைக் கரையில், ஆங்கிலேய சிப்பாய்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை அணுகி, படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைத் தெரிவித்து, உதவும் படி கேட்டான். சிப்பாய்களின் கைகளை பற்றி, படகு நின்ற இடத்திற்கு அழைத்து வந்தான்.
படகோட்டிகளை கடுமையாக எச்சரித்த சிப்பாய்கள், 'சிறுவர்களை இறக்கி விடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்...' என கடிந்தனர்.
மறு பேச்சில்லாமல் இறங்கி செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிச்சல், ஆங்கிலேய சிப்பாய்களை கவர்ந்தது. நன்றி கூறி விடைபெற்றான் நரேந்திரன்.
துணிவு கொண்ட நெஞ்சம்
காசி திருத்தலம், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கிறது; ஒரு சமயம், காசி, துர்க்கை கோவில் மதிர்சுவரையொட்டி நடந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அங்கிருந்த குரங்குகள் பெரும் கூச்சலுடன், அவரைச் சூழ்ந்தன.
முன்னேற தயங்கி பின் வாங்கினார். இதைக் கண்ட சில குரங்குகள், அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன; சில பிறாண்டின.இக்கட்டான நிலையில் ஓட ஆரம்பித்தார் விவேகானந்தர்!
குரங்குகள் விடாமல் துரத்தின.
சற்று துாரத்திலிருந்த சந்நியாசி, 'குரங்குகளை எதிர்த்து நில்...' என்று உரத்த குரலில் கூவினார். அச்சொற்கள் விவேகானந்தர் காதுகளில் விழுந்ததும் ஊக்கம் பெற்றார். துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். உறுதியுடன் எதிர்க்கும் நிலையில் நின்றார்.
அவ்வளவு தான்... குரங்குகள் பயந்து பின்வாங்கின.
நிலைமை தலைகீழாக மாறியது.
தப்பித்தால் போதும் என்று திரும்பி ஓட ஆரம்பித்தன குரங்குகள்!
இந்நிகழ்ச்சி, விவேகானந்தர் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்கா, நியூயார்க் நகரில் நிகழ்த்திய சொற்பொழிவில், 'பயங்கரத்தை எல்லாம் எதிர்த்து நில்! பிரச்னைகளை எதிர் கொள்... ஒருபோதும் பயந்து ஓடாதே! துணிவுடன் நின்றால் அந்தக் குரங்குக்கூட்டம் போலவே, துன்பம் விலகி ஓடிவிடும்...
'மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் செயல்களுக்கு ஒருபோதும் பணிந்து விடக் கூடாது. அச்சத்தை, அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்...' என குறிப்பிட்டார்.
- தொடரும்...
