PUBLISHED ON : நவ 05, 2022

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, நா.சு.வி.வி.தொடக்கப் பள்ளியில், 1960ல், 2ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியை பாக்கியம் மிக கண்டிப்பானவர். பாடங்களை மனதில் பதியும்படி சிறப்பாக நடத்துவார். கதை, பாட்டு, நடனமும் கற்று தருவார்.
ஒருநாள், 'சுவைகள்' என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அதற்காக, பல்சுவை உணவுப் பொருட்கள் எடுத்து வந்திருந்தார். ஒவ்வொன்றையும் காட்டி, 'சுவையை கூறுங்கள்...' என்று கேட்டார். உற்சாகத்துடன் சரியாக பதில் கூறினோம்.
இறுதியில் வேப்பிலையைக் காட்டி, 'இதன் சுவை என்ன...' என கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை. உடனே, அனைவர் கையிலும், வேப்பிலை தளிரைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அதன்படி, சுவை உணர்ந்து, 'கசப்பு...' என்று கூறினோம். அவர் கற்றுத்தந்த முறை, பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.
என் வயது, 68; படித்த அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். வேப்ப மரங்களை பார்க்கும் போதெல்லாம் அந்த ஆசிரியை, இனிய அனுபவத்தால் உணர்த்திய பாடம் நினைவுக்கு வருகிறது.
- சி.மல்லிகா, திண்டுக்கல்.
