PUBLISHED ON : ஏப் 11, 2020

அரியலுார் மாவட்டம், உதயநத்தம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழ் கற்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினேன்.
என் தமிழாசிரியர் நக்கம்பாடி புலவர் முருகேசன், செய்யுளை அழகுற பாடி, பொருளை விளக்குவார். உரைநடை பாடங்களை, நடித்து காட்டி மனதில் பதிய வைப்பார். நகைச்சுவையாக கதைகள் கூறி கவனத்தை ஈர்ப்பார். பக்கத்து வகுப்பு மாணவர்களும், காதை கூர்மையாக தீட்டி, அவர் நடத்தும் பாடங்களை உற்றுக் கேட்பர்.
ஒரு நாள், 'எகிப்து நாட்டையும், ரோமாபுரியையும் பேரழகால் ஆட்டிப்படைத்த கிளியோபாட்ரா, ஒரு தமிழ்ப் பெண்...' என்று கதையை ஆரம்பித்தார்.
மிக ஆர்வத்துடன், 'எப்படி ஐயா...' என்று கேட்டோம். மிக எளிமையாக, 'அழகான பெண்ணை பார்த்தால், கிளிபோல இருப்பதாக வர்ணிப்போம் அல்லவா... அதை, 'கிளியை பார்த்தீரா' என்றும் சொல்லலாம்; பிற்காலத்தில் அது மருவி, 'கிளியோபாட்ரா' என்றாகி விட்டது. அவள் தமிழ் அழகி தான்..' என்று கூறினார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
என் வயது, 62; தமிழக காவல் துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியரின் குரலும், பாடம் நடத்திய விதமும், பாரம்பரிய உடையழகும் மனதில் நிலைத்திருக்கிறது.
- கோ.பாண்டியன், அரியலுார்.
தொடர்புக்கு: 90474 84949
