
திண்டுக்கல் மாவட்டம், அச்சராஜக்காபட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், 1958ல், 3ம் வகுப்பு படித்தபோது ஆசிரியராக இருந்தார் சிவன்காளை. ஓராசிரியர் பள்ளி என்பதால், ஐந்து வகுப்புகளை அவரே கவனிக்க வேண்டும்.
ஒரு வகுப்பில் பாடம் நடத்தும் போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களையும், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது கடின பணி. இதற்காக, அந்தந்த வகுப்புகளில் ஒரு மாணவரை கண்காணிக்க நியமித்திருந்தார்; நானும் அதில் இருந்தேன்.
ஆரம்ப கல்வியை முடித்து, படிப்பை தொடராத இளைஞர்கள் சிலர் அவரை சந்திக்க வருவர். அவர்களிடம் என்னை சுட்டிக்காட்டி, 'நன்றாகப் படிப்பான்...' என்பார். அதை நிரூபிக்கும் விதமாக பாடங்களை வாசிக்க சொல்வார்; கிடுகிடு என வாசிப்பேன்.
அவர் கொடுத்த உற்சாகத்தால் கவனம் செலுத்தி படித்தேன். கல்லுாரியில் படித்த காலத்தில் அவரை சந்தித்து, ரயில்வே சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதப் போவதாக கூறினேன். மனம் உவந்து, 'பெரிய பதவிக்கு வர வேண்டும்...' என வாழ்த்தினார். முதல் முயற்சியிலே பணியில் சேர்ந்தேன்; சம்பளம் வாங்கியதும், நன்றி பெருக்கால் அவரைக் காண சென்றேன்; சந்திக்க முடியவில்லை.
கண்ணும் கருத்துமாக உழைத்து, பல தேர்வுகள் எழுதி ரயில்வேயில், ஐ.ஆர்.பி.எஸ்., அந்தஸ்தில் அதிகாரியாக உயர்ந்து ஓய்வு பெற்றேன். இப்போது என் வயது, 68; அந்த ஆசிரியர் நினைவாக, அரசு பள்ளி மாணவர்களிடம் முன்னேறும் எண்ணத்தை விதைத்து வருகிறேன். அதற்காக, 1,678 பேருக்கு ஊக்க பரிசு வழங்கி இருக்கிறேன்.
- ஆர்.கோபால் மாரிமுத்து, சென்னை.

