PUBLISHED ON : ஜூலை 01, 2023

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, நா.சு.வி.வி., துவக்கப் பள்ளியில், 1958ல், 1ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் சிரோண்மணி. மிகவும் கண்டிப்பானவர். பார்த்தாலே பயந்து நடுங்குவோம். கையில் எப்போதும் பிரம்புடன் காணப்படுவார். தினமும் வாசிக்க பயிற்சி அளிப்பார். வகுப்பறையில், 'அணிலே அணிலே ஓடி வா...' போன்ற பாடல்களை அபிநயத்துடன் பாடி மனதில் பதிய வைப்பார்.
அன்றைய வகுப்பில், தமிழ் சொற்களை கூற கேட்டு, சிலேட்டில் எழுதினோம். சில சொற்கள் தவறாக இருந்தது கண்டு அடித்து விட்டார்.
மறுநாள் அம்மாவிடம், 'பள்ளி செல்ல மாட்டேன்...' என, அடம் பிடித்தேன். என்னை சமாதானப்படுத்தி, தலைமை ஆசிரியர் ரத்தினசாமியிடம் அழைத்து சென்று, வகுப்பில் நடந்ததை கூறி, வேறு பிரிவுக்கு மாற்றும்படி கேட்டார்.
கோரிக்கையை ஏற்பதாக கூறி, அம்மாவை அனுப்பிய பின், என்னை அழைத்து, 'நீ அந்த ஆசிரியையிடம் படித்தால் தான், கையெழுத்து அழகாக வரும்...' என அதே வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.
மிகவும் கனிவுடன் அந்த ஆசிரியை சிறப்பு வகுப்பு நடத்தினார். பாடங்களை பிழையின்றி படிக்கவும், எழுதவும் கவனம் எடுத்து கற்பித்தார். வடிவமாக எழுதும் வகையில் சிறந்த பயிற்சி கிடைத்தது.
தற்போது, எனக்கு, 70 வயதாகிறது; முயற்சியுடன் சிறப்பு பயிற்சி அளித்த ஆசிரியையும், நல் அறிவுரை கூறி தெளிவு படுத்திய தலைமை ஆசிரியரையும் மனதில் கொண்டுள்ளேன்.
- சி.மல்லிகா, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 97881 64573
