
விருதுநகர் மாவட்டம், தளவாய்புரம், பி.எம்.மாரிமுத்து நாடார் பள்ளியில், 1952ல், 6ம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு சென்ற போது நடந்த சம்பவம்...
தேர்வுக்கு வெள்ளைத்தாள் எடுத்து வர அறிவுறுத்தியிருந்தனர். ஒருவன் போதிய தாள்கள் எடுத்து வரவில்லை. பற்றாக்குறையால் தேர்வு அறையில் உதவி கேட்டான். தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மரிய பொன்னையா, அவனுக்கு உதவும்படி பொதுவாக கேட்டார்.
யாரும் உதவ முன் வரவில்லை. நான் அமர்ந்திருந்த வரிசையில் மீண்டும் கேட்டவரிடம், அனிச்சையாக சில தாள்களை கொடுத்தேன். பின் அதை மறந்து எழுதுவதில் கவனம் செலுத்தினேன்.
தேர்வில் வென்று, பள்ளியில் சேர்ந்தேன், நன்றாக படித்து, 9ம் வகுப்பிற்கு முன்னேறிய போது, வகுப்பறை பிரிவுகளை மாற்றியமைத்தனர். நான் இருந்த, 'பி' பிரிவு வகுப்பில் வந்து சேர்ந்தான் கோவிந்தன். விரைவில் நெருங்கிய நண்பர்களானோம்.
தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடித்து பிரியும் நாளில், என் கைகளை பற்றியபடி, 'அன்று, நீ எனக்கு தேர்வு எழுத வெள்ளை தாள் தந்து உதவியிருக்காவிட்டால், படிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்...' என நெகிழ்ந்தான். நுழைவு தேர்வில் உதவியது அவனுக்குதான் என்பதை அப்போது தான் அறிந்தேன்.
இப்போது, எனக்கு, 80 வயதாகிறது; அந்த நிகழ்வை மனதில் அசை போடுகிறேன். அது, 'காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்ற குறட்பாவை நினைவு படுத்துகிறது.
- வெ.சுந்தரராஜன், மதுரை.