PUBLISHED ON : ஆக 28, 2021

ஆப்பிரிக்காவின் அடையாளமாக, பாவோபாப் மரங்களை காட்டினால் போதும். அந்த அளவுக்கு புகழ் பெற்றது. குண்டாக, வளர்ச்சி அடையாதது போன்ற தோற்ற கிளைகளுடன், வித்தியாசமான உருவ அமைப்பை உடையது.
இது, 30 மீட்டர் உயரம் வரை வளரும். சுற்றளவு, 20 மீட்டர் வரை இருக்கும்; ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உயிர்ப்புடன் இருக்கும். பழங்காலத்தில் மிகப் பெரிய மரங்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஒரு மரத்தைக் குடைந்து, 40 பேர் வசித்திருக்கின்றனர். அப்படி என்றால் மரத்தின் பருமனை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆண்டில், ஒன்பது மாதங்கள் பாவோபாப் மரங்களில் இலை இருக்காது; அதனால், மரத்தை தலைகீழாக நட்டு வைத்தது போல தோன்றும்.
மரத்தின் உட்பகுதி, 15 மீட்டர் வரை மென்மையான நாரால் நிரம்பியிருக்கும். அதில், 1.2 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமிக்கப்பட்டிருக்கும். தண்ணீர் பற்றாக்குறை காலத்தில், உயிர் வாழ ஏற்ற வகையில் இந்த சிறப்பை பெற்றுள்ளன.
வறட்சி காலத்தில், பாவோபாப் மரத்தில் சிறு துளை போட்டு, தண்ணீரை எடுத்து பயன்படுத்துவர் ஆப்ரிக்க பழங்குடியினர்.
மரம் பட்டுப் போனாலோ, விபத்தில் சாய்ந்தாலோ, கிளைகளிலிருந்து புதிய மரங்கள் துளிர்க்கும். இதனால், இந்த மரங்களுக்கு மரணமே இல்லை என்று கூறுவர்.
இதன் பட்டை மாறுபட்டது; மற்ற மரங்களை போல இருப்பதில்லை. சாம்பல், இளஞ்சிவப்பு நிறங்களில் பளபளப்பாக இருக்கும்.
இந்த மரம், 20 ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும்; நல்ல பருவநிலை காணப்பட்டால் ஆண்டு முழுவதும் பூக்கும். அவை வெண்மையாக இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே மலரும். பூக்களின் நறுமணத்தால் வவ்வால்களும், பூச்சிகளும் படையெடுத்து வரும். இவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
பூவிலிருந்து உருவாகும் காய், ஆறு மாதங்களுக்கு பின், பழமாக மாறும்; இளநீர் அளவுக்கு பெரியதாக இருக்கும். தடித்த ஓட்டின் மீது பச்சை முடிகள் படர்ந்திருக்கும்; பழத்துக்குள் விதைகள் இருக்கும்.
பழத்தில், டார்டாரி அமிலம், மெக்னீஷியம், பொட்டாஷியம் சத்துகள் அதிகம். ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட, ஆறு மடங்கு, வைட்டமின் - சி சத்து உள்ளது.
பழத்துக்குள் சிறுநீரக வடிவில் கறுப்பு விதைகள் காணப்படும். இவற்றை, வறுத்து, பொடி செய்து காபி போல தயாரித்து குடிப்பர் பழங்குடியினத்தவர். பாவோபாப் மர இலைகளை வேக வைத்தும் சாப்பிடுவர்.
இலை, பட்டை, பழம், விதையிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மர பட்டையிலிருந்து, கயிறு, மிதியடி, கூடை, காகிதம், துணி, இசைக்கருவிகள், தண்ணீர் புகாத தொப்பி செய்கின்றனர்.
உயிரினங்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாப்பதில் பாவோபாப் மரம் தன்னிகரற்றது; இதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன. யானை, இதன் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிறது.
சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பாவோபாப் மரங்கள் அழிந்து வருகின்றன. நீண்ட ஆயுளும் பெரும் பயனும் நிறைந்த இந்த மரங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
- எஸ்.வைத்தியநாதன்

