தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிறந்த வில்லாளி

சிறந்த வில்லாளி

சிறந்த வில்லாளி


PUBLISHED ON : ஏப் 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாண்டவர்கள் ஐவரும், துரியோதனர் நூறு பேரும் துரோணரிடம் கல்வி கற்று வந்தனர். கல்வி என்றால் வெறும் பாடபோதனை மட்டுமல்ல, வில் பயிற்சி, வாள் பயிற்சி, போர்க் கலைகளையும் கற்று வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும், பால்ய பருவத்துப் பிள்ளைகள்.

ஒருநாள்-

அவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் கையில் அணிந்திருந்த மோதிரம் ஒன்று, ஆழமான கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அந்த மோதிரத்தை எடுக்கும் வழி தெரியாமல், கிணற்றை சுற்றி கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியே வந்த, குருநாதர் துரோணர், மாணவர்கள் அனைவரும், ஒரு கிணற்றை சுற்றி கவலையுடன் நிற்பதை கண்டு வியப்பும், திகைப்பும் அடைந்தார்.

“மாணவர்களே... என்ன நடந்தது. உங்களில் யாராவது கிணற்றுக்குள் விழுந்து விட்டனரா... ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

'குருதேவா! எங்களில் யாருக்கும் ஆபத்து இல்லை. எங்களில் ஒருவன் அணிந்திருந்த மோதிரம், இந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறோம்' என்று கூறினர்.

உடனே துரோணர், தன் வில்லை எடுத்து குறி பார்த்து அம்பு எய்து, மோதிரத்தை எடுத்து தந்தார்.

மோதிரத்துக்கு உரியவன் அதை, தன் அண்ணன் அர்ஜூனனிடம் காட்டி, “அண்ணா! இதோ மோதிரம் பார்த்தீர்களா? நம் அனைவராலும் செய்ய முடியாத காரியத்தை, நம் குருநாதர் செய்துவிட்டார்,” என்று கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட அர்ஜூனன் கோபம் அடைந்து, அந்த மோதிரத்தை வாங்கி மீண்டும் கிணற்றுக்குள் போட்டான். அதே சமயம், அர்ஜூனன் மீது கோபம் கொண்டு ஆளாளுக்கு, மனதுக்குள் முணுமுணுத்தனர்.

'ரொம்பவும் அகங்காரம் பிடித்தவன். இப்படி செய்துவிட்டானே பாவி. இனி மோதிரத்தை எப்படி எடுப்பது... இந்தச் செய்தியைக் கேட்டால், குருநாதர் சும்மா இருப்பாரா?' என்று தங்களுக்குள் பேசியபடி அர்ஜூனனை திட்டி தீர்த்தனர்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனன், தனது வில்லை எடுத்து, துரோணரை போலவே அம்பு எய்தான். அடுத்த கணம், கிணற்றுக்குள் இருந்த மோதிரத்தை எடுத்து கொடுத்தான்.

இதைக் கண்ட அனைவரும் அவனை பாராட்டினர்.

கண்ணால் கண்டதை கற்றதனால், 'சிறந்த வில்லாளி!' எனப் பெயர் பெற்றான் அர்ஜூனன்.

என்ன குட்டீஸ்... அர்ஜூனன் அண்ணாவை போலவே, நீங்களும் உங்கள் ஆசிரியர் நடத்துவதை அப்படியே புரிந்து படித்து, பெயர் வாங்கணும். சரியா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us