
ஹவுரா ரயில் நிலையம் -
ஊர்ந்து சென்ற ரயில் நின்றது.
ரயில் பயணத்தில் துணையாக வந்தவனுடன் இறங்கினேன்.
விடுதியில் தங்கினால் அதிகம் செலவாகும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப வேண்டும். எனவே, மாற்று ஏற்பாடு ஒன்றை தெரிவித்தான் பயணத்தில் உடன் வந்தவன். அங்கு ஓடும் ஹூக்ளி நதியில் குளித்து, தேர்வு மையத்திற்கு செல்லலாம் என்பது தான் அந்த யோசனை. அது சரியாகப்பட்டது.
எனவே, நேராக நதிக்கு சென்றோம்; கரையில் அமர்ந்து பொருட்களை பாதுகாத்தேன்; உடன் வந்தவன் குளித்து முடித்து திரும்பினான்.
பின், ஆற்றில் இறங்கினேன்.
ஒரே முழுக்குடன் நிமிர்ந்து, கரையை எட்டிப் பார்த்தேன். உடன் வந்திருந்தவனை காணவில்லை.
திடுக்கிட்டது மனம். வேகமாக கரைக்கு வந்தேன்.
பேன்ட், சட்டைத் தவிர, என் பொருட்கள் எதையும் காணவில்லை.
அனைத்தையும் திருடி சென்று விட்டான்.
தேர்வுக்கு செல்ல இயலவில்லை; கையில் பணமும் இல்லை. பட்டினியாக இருந்தேன். வழிப்போக்கர்களிடம், நிலையை சொல்லி அழுதேன். ஏளனமாக பார்த்தனரே தவிர, உதவ யாரும் முன் வரவில்லை.
மனதில் நம்பிக்கை மட்டும் மலையளவு இருந்தது.
இரவு திருட்டு ரயில் ஏறி, திரும்ப வேண்டியது தான் என அமர்ந்திருந்தேன்.
ரயில், நடைமேடைக்கு வந்தது.
அது புறப்படும் போது ஏறலாம் என அமைதியாக காத்திருந்தேன்.
அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
என் முன் வந்த பெரியவர், 'சாப்பிட்டாயா...' என்றார்.
'இல்லை' என தலையசைத்தேன்.
சாப்பாடு வாங்கி தந்தார்; என் கதையைக் கேட்டார்.
'என்ன வேலை தெரியும்...'
'சுருக்கெழுத்து உயர்நிலை பயிற்சி பெற்றிருக்கிறேன்...'
'வேலை கொடுத்தால் செய்வாயா...'
'செய்வேன்...'
வீட்டுக்கு அழைத்து சென்று, அவுட் ஹவுசில் தங்க வைத்தார்.
மறுநாள், காலை உணவு வந்தது.
புது துணிகள் வாங்கி தந்தார்.
அவருக்கு உதவியாளராக வேலையில் சேர்ந்தேன். கடுமையாக உழைத்து முன்னேறினேன்.
நம்பிக்கையும், மன உறுதியும் தோற்காது என நிரூபணமானது.
குழந்தைகளே... எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அது வெற்றிப்படிக்கு அழைத்து செல்லும்.
- ராஜா சீனிவாசன்

