PUBLISHED ON : ஏப் 14, 2017

புவனகிரி என்ற ஊரில், சோமசுந்தரம் என்ற செல்வந்தர் இருந்தான். செல்வம் சேர்ப்பதே அவன் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது.
அந்த ஊரிலிருந்த நிலங்கள் அனைத்தையும், தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். இதே எண்ணத்தில் இருந்ததால், அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.
முதுமை அடைந்த அவன், வழுக்கை விழுந்து அவலட்சணமாக காட்சி தந்தான்.
'பொருள் சேர்ப்பதிலேயே காலத்தை செலவழித்து விட்டேன். என்னைப் போன்ற செல்வந்தன் யாரும் இந்த வட்டாரத்திலேயே இல்லை. இனிமேல், திருமணம் செய்து, மகிழ்ச்சியாக வாழ வேண்டியதுதான். பல பெண்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவர். ஆனால், எனக்கு முத்துவின் மகள் மகேஸ்வரியை தான் பிடித்து இருக்கிறது. அவள் தான் எனக்கு பொருத்தமாக இருப்பாள்' என நினைத்தான்.
மகேஸ்வரியை சந்தித்து, தன் விருப்பத்தை அவளிடம் சொன்னான்.
“கிழவரான உங்களை எனக்கு பிடிக்கவில்லை. உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது,” என்று வெடுக்கென பதில் தந்தாள்.
எதிர்பாராதது நடந்ததை கண்ட சோமசுந்தரம் திகைத்தான். மீண்டும் மீண்டும் அவளை வற்புறுத்தினான்.
“உங்களை, நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை இப்படி வற்புறுத்துவதால் எந்தப் பயனும் இல்லை,” என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னாள்.
இதனால், அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி அவனுக்கு ஏற்பட்டது.
அவளுடைய தந்தை முத்துவை, தன் மாளிகைக்கு வரவழைத்தான்.
“உன் மகளிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ள சொன்னேன்; அவள் மறுத்து விட்டாள். நீதான் அவளை எப்படியாவது எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்தால், உன்னையும் செல்வந்தன் ஆக்குவேன். நீ எனக்கு தர வேண்டிய கடனையும் திருப்பி தர வேண்டாம். என்ன சொல்கிறாய்?” என்று ஆசை காட்டினான் சோமசுந்தரம்.
“ஐயா! என் மகள் சிறு பெண். நல்லது, கெட்டது அவளுக்கு தெரியாது. நான் சொல்லி அவளுக்குப் புரிய வைக்கிறேன். உங்களை திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிப்பாள். அதற்கு நான் பொறுப்பு,” என்று உறுதியாக சொன்னான் முத்து.
வீடு வந்த அவன், மகளிடம், “வளமான வாழ்வு உனக்கு காத்திருக்கிறது. இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பு யாருக்குமே வராது. அந்தச் செல்வந்தனை மணந்து கொண்டால் செல்வத்தில் மிதக்கலாம்,” என்றான்.
“அந்த அவலட்சணமான கிழவனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,” என்று மறுத்தாள் மகேஸ்வரி.
முத்துவிடம் இருந்து திருமணச் செய்தி வரும் என்று காத்திருந்தான் சோமசுந்தரம். செய்தி ஏதும் வராததால் கடுங்கோபம் கொண்டான்.
முத்துவை வரவழைத்து, “நீ தந்த வாக்குறுதி என்ன ஆயிற்று... நான் யார் என்பது உனக்குத் தெரியாதா... என்னை ஏமாற்ற நினைக்கிறாயா?” என்று கத்தினான் சுந்தரம்.
“என்ன சொன்னாலும் என் மகள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். நீங்கள் என் மகளை திருமணம் செய்ய ஒரே ஒரு வழிதான் உள்ளது,” என்றான்.
“என்ன வழி?” என்று கேட்டான் சோமசுந்தரம்.
“திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள். இது குறித்து என் மகளுக்கு எதுவும் தெரிய வேண்டாம். பண்ணையில் ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லி, என் மகளை இங்கே அழையுங்கள். அவள் இங்கு வருவாள். திருமண ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்ததும், அவள் மறுக்க மாட்டாள். அப்படியே மறுத்தாலும், நீங்கள் விடாதீர்கள். வற்புறுத்தி திருமணத்தை நடத்தி முடியுங்கள்,” என்றான் முத்து.
“அருமையான வழி சொன்னாய். திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிக்கிறேன். பின், உனக்குச் செய்தி அனுப்புகிறேன். உன் மகளை உடனே அனுப்பி வை,” என்றான் சோமசுந்தரம்.
“அப்படியே செய்கிறேன்,” என்றான் முத்து.
திருமண நாள் குறிக்கப்பட்டது. அந்தச் செய்தியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினான் சோமசுந்தரம்.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. விருந்தும், கேளிக்கையுமாக இருந்தது.
வேலையாள் ஒருவனை அழைத்த சோமசுந்தரம், “நீ முத்துவின் வீட்டிற்கு ஓடு. செல்வந்தரிடம் வாக்குறுதி தந்தபடி கொடுத்து அனுப்பு, என்று அவனிடம் சொல். அவன் தருவதைப் பாதுகாப்பாக இங்கே கொண்டு வா. ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, குளறுபடி நடந்தாலோ உன்னை கொன்று விடுவேன்,” என்று விரட்டினான்.
மூச்சிறைக்க முத்துவின் வீட்டை அடைந்தான் வேலையாள்.
“எஜமானருக்கு ஏதோ தருவதாக வாக்குறுதி தந்தீராமே. காத்திருக்க எனக்கு நேரம் இல்லை. உடனே தந்தீரானால் கொண்டு செல்வேன்,” என்று பரபரப்புடன் சொன்னான்.
“ஏரிக் கரைக்கு ஓடு. அங்கே அவள் இருப்பாள். முரண்டு பிடித்தால் விடாதே. எப்படியாவது இழுத்துச் செல்,” என்றான் முத்து.
ஏரிக் கரைக்கு வேகமாக ஓடி வந்தான் வேலையாள். அங்கே முத்துவின் மகள் மகேஸ்வரி, ஆடுகளுக்குப் புல் அரிந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த வேலையாள், “என் எஜமானருக்கு உங்கள் தந்தை ஏதோ தருவதாக வாக்குறுதி தந்தாராம். அதை எடுத்துச் செல்ல வந்துள்ளேன்,” என்றான்.
நடந்தது எதையும் அறியாத அவள், 'என் தந்தை என்ன தருவதாகச் சொல்லி இருப்பார்... கொழுத்த பெட்டை ஆடாகத் தான் இருக்க வேண்டும். செல்வந்தர் வீட்டு விருந்திற்கு தருவதாகச் சொல்லி இருப்பார்' என்று நினைத்தாள்.
“அங்கே மேய்கிறது பார். அந்த ஆட்டை உன்னுடன் இழுத்துச் செல்,” என்றாள் மகேஸ்வரி.
அந்த ஆட்டைப் பிடித்தான். முரண்டு பிடித்த அதை எப்படியோ இழுத்துக் கொண்டு, செல்வந்தரின் மாளிகைக்கு வந்தான்.
அப்போது மாடி அறையில் இருந்தார் சோமசுந்தரம். அங்கு சென்ற வேலையாள், அவர் முன் பணிவாக நின்றான்.
“அழைத்து வந்தாயா?” என்று பரபரப்புடன் கேட்டான் சோமசுந்தரம்.
“அழைத்து வந்துள்ளேன். மாளிகை வாயிலில் விட்டு வந்துள்ளேன்!” என்றான்.
“முட்டாளே! இப்படியா நடந்து கொள்வது... அவளை என் தாய் இருந்த அறைக்கு அழைத்துச் செல். அங்குள்ள பெண்கள் அவளுக்கு அலங்காரம் செய்வர்,” என்றான்.
திகைத்த வேலையாள், “ஐயா! அவளை உங்கள் தாயின் அறைக்கு அழைத்துச் செல்வதா... அலங்காரம் செய்வதா... அது முடியாதே,” என்று குழப்பத்துடன் கூறினான்.
“உன்னால் அவளை அழைத்துச் செல்ல முடியாது. அவள் முரண்டு பிடிக்கிறாள் என்றால் மற்ற வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொள். அவள் ஓடி விடக் கூடாது. ஏதேனும் தவறு நடந்தால் உன் உடலில் உயிர் இருக்காது. ஓடு,” என்று விரட்டினான் சோமசுந்தரம்.
'ஏதேனும் மறுத்துப் பேசினால் அவர் கோபம் அதிகம் ஆகும். அவர் சொன்னபடியே செய்வோம்' என்று நினைத்தான் வேலையாள்.
வேலையாட்களை அழைத்து, “இந்த ஆட்டை ஒப்பனை அறைக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். எஜமானரின் கட்டளை. உதவி செய்யுங்கள்,” என்றான்.
சிலர் அதன் கொம்புகளை பிடித்தும். சிலர் பின்னாலிருந்து அதைத் தள்ளியபடி ஒப்பனை அறைக்குள், அந்த ஆட்டை இழுத்து வந்தனர்.
அங்கே மணப் பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக காத்திருந்த பெண்கள், ஆட்டைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
செல்வந்தரிடம் வந்த அவர்கள், “ஐயா! நாங்கள் அலங்காரம் செய்ய முடியாது. எங்கள் வாழ்நாளிலேயே இப்படிச் செய்தது இல்லை,” என்றனர்.
'அந்தப் பெண் இவர்களை அலங்காரம் செய்ய விடாமல் முரண்டு பிடிக்கிறாள். அதனால் தான் இவர்கள் இப்படிச் சொல்கின்றனர்' என்று நினைத்தான் சோமசுந்தரம்.
“நீங்கள் இத்தனை பேர் இருக்கிறீர்கள். என்ன முரண்டு பிடித்தாலும் உங்களால் அலங்காரம் செய்ய முடியாதா... எப்படியாவது நன்கு அலங்காரம் செய்து முடியுங்கள். உங்களுக்கு இரண்டு பங்கு ஊதியம் தருகிறேன்,” என்றான்.
“நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். எங்களால் முடியாததைச் செய்ய சொல்கிறீர்கள்,” என்று தயக்கத்துடன் கூறினாள் அவர்களில் ஒருத்தி.
“இனி உங்களிடமிருந்து எந்த விளக்கமும் எனக்கு வேண்டாம். அவளை மணப் பெண் போல அழகாக அலங்காரம் செய்ய வேண்டும். தேவையான அணிகலன்களை எடுத்துக் கொள்ளுங்கள். எந்தக் குறையும் இருக்கக் கூடாது. தலையில் அழகிய கீரிடம் சூட்ட மறக்காதீர்கள்,” என்றான்.
வேறு வழியின்றி ஒப்பனை அறைக்குத் திரும்பினர் பெண்கள். அந்த ஆட்டிற்கு அழகிய பட்டாடையை அணிவித்தனர். அதன் கழுத்தில் விலை உயர்ந்த முத்து மாலையை மாட்டினர். கால்களில் பொன் வளையல்களை மாட்டி, அதன் தலையில் அழகிய மணி முடி சூட்டினர்.
'எப்படியோ ஒப்பனை செய்து முடித்து விட்டோம்' என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
அவர்களில் ஒருத்தி செல்வந்தரிடம் சென்று, “அலங்காரம் முடிந்து விட்டது!” என்றாள்.
“சிறிது நேரத்தில் நான் மண மேடைக்கு சென்று அமர்வேன். அப்போது அவளை அழைத்து வாருங்கள். நீங்கள் செய்த இந்த வேலைக்கு நிறைய பரிசு கிடைக்கப் போகிறது,” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
நன்கு அலங்காரம் செய்து கொண்டு, பெருமிதத்துடன் வந்து மண மேடையில் அமர்ந்தான்.
திருமணத்தைக் காண்பதற்காக அங்கே ஏராளமான பேர் வந்திருந்தனர். அங்கிருந்த “மணப் பெண்ணை அழைத்து வாருங்கள்,” என்று குரல் கொடுத்தார் சாஸ்த்திரி!
ஒப்பனை அறையிலிருந்த ஆட்டை இழுத்து வந்தனர் அந்தப் பெண்கள். மணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்யப்பட்டு இருந்த ஆடு, கூட்டத்தைப் பார்த்து மிரண்டது. அவர்கள் பிடியிலிருந்து விடுபட்டு, 'மே! மே!' என்று கத்தியபடி அங்கும், இங்கும் ஓடியது.
மணமகன் கோலத்திலிருந்த சோமசுந்தரம் நடந்ததை பார்த்தார். வேலையாள் குழப்பமாகக் கேட்டதும், ஒப்பனை பெண்கள் தயங்கியதற்கான காரணமும் அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.
எதையும் விளக்கமாகச் சொல்லாதது, தன் தவறு தான் என்று உணர்ந்தான்.
மணப் பெண்ணாக இருந்த ஆட்டைப் பார்த்து, அங்கே இருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறு வலிக்க சிரித்த படியே, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
'ஊராரின் கேலிக்கு உள்ளாக நேர்ந்ததே... இப்படிப்பட்ட அவமானம் உண்டாயிற்றே...' என்று வருந்தினான். அதன்பின், அவன் தன் மாளிகையை விட்டு வெளியே வரவும் இல்லை; திருமணப் பேச்சை எடுக்கவும் இல்லை.
நீதி... யாரையும் எதற்காகவும் வற்புறுத்தக் கூடாது.
