தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரழகி லடோனா! (2)

பேரழகி லடோனா! (2)

பேரழகி லடோனா! (2)


PUBLISHED ON : அக் 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவள் எவ்வளவு நேரம் அவ்வாறு தூங்கி இருப்பாள் என்பது அவளுக்கே தெரியாது. திடீரென விழிப்புத் தட்டியது. படகு எங்கோ ஓரிடத்தில் கரை தட்டி நிற்பதைப்போல உணர்வு அவளிடம் தோன்றியது.

லடோனா கண்விழித்துச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.

திடீரென கண்முன் பச்சைக் கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டதைப் போல அத்தீவு அவ்வளவு அழகுமயமாய் விளங்கியது. வண்ண வண்ணப் பூக்கள் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டின. அங்கிருந்த மரங்களில் பழுத்துத் தொங்கிய விதவிதமான கனிகள் உண்ணுவதற்கு நான் தயார் நிலையில் உள்ளேன் என்பதை அறிவித்த வண்ணம் இருந்தன.

அத்தீவின் அழகைப் பார்த்து, பெரிதும் வியந்து போனாள் லடோனா. படகை விட்டு மெல்லத் தன் தங்கப் பாதங்களை கீழிறக்கி வைத்து நடை பயின்றாள். அங்கிருந்த கனிகளை அவசரமாகப் பறித்து உண்டாள். ஆற்றிற்கு வந்து தண்ணீரை அள்ளிப் பருகினாள்.

மனித சஞ்சாரமற்ற அத்தீவு அவள் வாழ்வதற்குரிய சரியான இடமாக அவளுக்குத் தோன்றியது. இனி லடோனாவின் வாழ்க்கையில் அவளுக்கு எக்கவலையுமில்லை என்பதைப் போல தோன்றியது.

கனிகளை உண்டு முடித்ததும், காலார அத்தீவைச் சுற்றிப் பார்க்க கிளம்பினாள். அத்தீவின் நடுவிலே விசித்திரமான வடிவில் ஒரு வீட்டைப் போலக் குகை ஒன்று காணப்பட்டது.

அக்குகையில் ஆள் நடமாட்டம் இருப்பதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை. அக்குகையிலே சென்று தன் எஞ்சிய நாட்களைக் கழிப்பது என்று அவள் திட்டமிட்டாள்.

குகையினுள்ளே புகுந்து சுற்றுமுற்றிலும் ஆராய்ந்தாள். இறைவன் இவளுக்காக அத்தீவில் குகை ஒன்றைப் புதிதாக நிர்மாணித்திருந்ததைப் போல அத்தனைக் கச்சிதமாகவும், புதுப்பொலிவுடனும் குகை விளங்கியது.

அந்தக் குகையை ஒட்டி முற்றிலும் சுத்தமான நன்னீர் ஓடை ஒன்று தென்பட்டது. குளிப்பதற்கும், குடிப்பதற்கும் உபயோகப்படுவதுபோல அத்தனை அற்புதமாக அது அமைந்திருந்தது.

லடோனா பெரிதும் மகிழ்வடைந்தவளானாள். ஒவ்வொரு நாளும் இன்பமுற்று வாழ்வதற்கு உரிய வாழ்க்கை வசதிகளை இறைவன் தனக்குத் தந்தமை குறித்து அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, தன் வாழ்நாளைத் துவங்கினாள் லடோனா.

இறைவன் லடோனாவின் மேல் மிகவும் அன்புடையவனாகவும், இரக்கமுடையவனாகவும் இருந்தான்.

அவன் ஒவ்வொரு நாள் இரவிலும் லடோனாவின் கனவில் தோன்றுவார். அக்கனவில் இறைவனே, தன் கணவனாக வந்ததைப் போல ஓர் உள்ள உணர்ச்சியும் உந்துதல் சக்தியும், புத்துணர்ச்சியும் அவளுக்குக் கிடைத்தன.

ஒருநாள் கனவில், தான் கர்ப்பவதியாக இருப்பதைப் போலக் கனவு கண்டாள்.

ஆனாலும், மறுநாள் காலையில் விழித்தெழுந்து பார்க்கையின் அவள் தனிமையாக இருப்பது அவளுக்குப் புரிந்தது.

இரவில் கனவு, உண்மையா, பிரமையா என்பதை உள்ளபடியே உணர முடியவில்லை என்றபோதிலும், ஒவ்வொரு நாள் இரவிலும் தன்னுடைய கர்ப்பத்திலிருந்த குழந்தை வளர்ந்து கொண்டே வருதைப் போல அவளுக்குத் தோன்றியது.

ஒருநாள் இரவில் அவளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. கனவிலேயே அவள் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தாள்.

ஒரு குழந்தை ஆணாகவும், மற்றொரு குழந்தை பெண்ணாகவும் இருந்தது. அக்குழந்தைகளின் பேரழகைப் பார்த்து வியந்து போனாள் ஸ்டோனா.

மறுநாள் காலையில் விழித்தெழுந்தபோது உண்மையிலேயே கனவில் கண்ட அதே குழந்தைகள் அவள் அருகில் இருந்தன. அப்போதூன் அது இறைவன் அவளுக்கு அளித்த அற்புதப் பிரசாதங்கள் என்று தெரியவந்தது.

அவள் அந்த குழந்தைகளை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள். உளமாரக் கொஞ்சினாள். தான் கனவில் வாழ்ந்த வாழ்க்கை பொய்யான வாழ்க்கையில்லை என்று உணர்ந்தாள்.

இறைவனின் அற்புதச் சக்தியானது உண்மையான வாழ்க்கையைப் பிரமை போலவும், கனவு போலவும் காட்டியுள்ளது என்பதை உணர்ந்து கொண்டாள்.

அக்குழந்தைகளைச் சீராட்டி, பாராட்டி வளர்க்கத் துவங்கினாள். குழந்தைகள் பெரிதாக வளரத் துவங்கின.

தனக்குப் பிறந்த அக்குழந்தைகளில் ஆண் பிள்ளைக்கு, 'அப்போலோ' என்றும் பெண் குழந்தைக்கு, 'டயானா' என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தாள்.

இரண்டு குழந்தைகளும் பசுமையான புல் தரையில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தன. இக்காட்சிகளைக் கண்டு பரவசப்பட்ட நிலையில் எங்காவது ஓர் உயர்ந்த மேட்டின் மேல் அமர்ந்திருப்பாள் லடோனா.

நாட்கள் விரைந்து செல்லலாயின-

அப்போது வானம் இருண்டது. கரிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடித் திரண்டு வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி விண்ணில் கடும் இருட்டுத் தோன்றி மண்ணை நனைத்தது. லடோனா திடுக்கிட்டாள்.

தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மழை வருவதற்குள்ளாகத் தன் குகை வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணினாள்.

எனவே, குழந்தைகளை அழைக்கத் தன் வாயைத் திறந்தபோது, விண்ணிலிருந்த ஒரு குரல் அவளை பெயரிட்டு அழைத்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினாள் லடோனா.

அங்கே அவள் கண்காட்சி நடுங்க வைப்பதாக இருந்தது. மிக்க கோபத்துடன் மேகங்களுக்கிடையிலே ஜீனோ நின்று கொண்டிருந்தாள்.

''நீ இந்தத் தீவில் வாழ்ந்தது போதும். நான் உன்னை அளவுக்கு அதிகமாக வெறுக்கிறேன். நீ இப்போதே வெளியேறு, நீ வெளியேறாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்!'' என்று இடிக்குரலில் அவள் முழங்கினாள்.

லடோனாவுக்குத் துக்கம் பொங்கிப் பெருகியது. அந்த அழகான தீவில் மனிதர்கள் இல்லை. ஆயினும் இந்த ஜீனோ என்னை இத்தீவிலிருந்தும் வெளியேற்ற நினைக்கிறாளே; நான் என் செய்ய? எங்கே போக? என்று நினைத்துக் கலங்கிப் போனாள். இருப்பினும் வேறு வழியில்லை!

'நான் இத்தீவைவிட்டு வெளியேற மறுத்தால் கொடுமையே உருவான இந்த ஜீனோ எனக்குத் தீமைகளைச் செய்வதைவிட என் குழந்தைகளுக்கு அதிக அளவுத் தீமைகளைச் செய்து விடுவார். நான் என் குழந்தைகளின் நலன் பொருட்டாவது இங்கிருந்த வெளியேறிச் செல்ல வேண்டும்' என்று எண்ணினான்.

பதில் ஏதும் பேசாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன் இரண்டு தோள்களிலும் சுமந்தவாறு அங்கிருந்து புறப்பட்டாள்.

அவள் எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ அவளுக்கே தெரியாது. பசி, தாகம், களைப்பு தோள்களின் சுமை ஆகிய அனைத்தும் அவனை வாட்டி எடுத்தது.

உடல் சுமையும், உள்ளச் சுமையும் அவளை கசக்கிப் பிழித்தெடுத்தது. அவள் நீண்ட தூரம் அங்கிருந்துசென்று விட்டாள். குறிப்பிட்ட நகரமோ அடர்ந்த காடோ அவள் விழிகளில் சிக்கவில்லை.

இறுதியாக அவள் அலைந்து, அலைந்து கொடிய வறட்சி நிரம்பி வெயிலைத் தவிர வேறு எதுவுமே கண்டறியாத பாலைவனம் ஒன்றிற்கு வந்து சேர்ந்தாள். கடுமையான வெயிலின் உக்கிரத்தை தன்னகத்தே சுமந்திருந்த பாலைவனத்தில் மணல் அவளைச் சுட்டெரித்தது. அங்கே, அவள் களைப்பினைப் போக்கும் எவ்வகையான மரமும் காணப்படவில்லை. அவள் பசியை நீக்க வைக்கும் பழ மரங்களில்லை. அவள் தாகத்தைப் போக்கும் தெள்ளிய நீரோடையும் இல்லை.

இறைவனைத் தொழுது கொண்டு, அழுத உள்ளத்தோடு அங்குமிங்கும் இளைப்பாற ஓர் இடம் தேடினாள் லடோனா.

(-2 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us