PUBLISHED ON : அக் 11, 2019

விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, ரத்தம் பெறுவது, இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. சிறு நகரங்களில் கூட ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த நிலை, 100 ஆண்டுகளுக்கு முன் இல்லை. போர், விபத்து, அறுவை சிகிச்சைகளின் போது, ரத்த இழப்பு ஏற்பட்டு, எண்ணில் அடங்கா மனித உயிர்கள் பலியாயின.
ரத்த மாதிரிகளைக் கண்டுபிடித்து, வகை பிரித்தவர் உயிரியல் விஞ்ஞானி, கார்ல் லாண்ட்ஸ் டெய்னர். ஐரோப்பா கண்டம், ஆஸ்திரியா தலைநகர், வியன்னாவில், ஜூன் 14, 1868ல் பிறந்தார். ஆறு வயதில் தந்தையை இழந்தார்.
உள்ளூரில் பள்ளிக் கல்வியை முடித்தவருக்கு, மருத்துவ படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து, விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.
மனித ரத்த மாதிரிகள் பற்றி ஆராய்ந்து வந்தார்.
இந்த நிலையில், 1900ல் ஒரு வினோத ஆய்வை நடத்தினார். இரு வேறு மனித ரத்தங்களை, கலந்தால் ஏற்படும் விளைவு என்ன... இது தான் அவர் செய்த புதுமை ஆய்வு.
அவர் எண்ணப்படி, ஆய்வுக்கூடத்தில் ரத்தங்கள் கலக்கப்பட்டன. சில பிரிவு ரத்தங்கள் கலந்த போது, உறைந்து போயின; சில உறையவில்லை. இந்த இருவேறு நிலைகள் பற்றி தீவிரமாக சிந்தித்தார். இந்த ஆய்வுக்கு உதவ, அலெக்சாண்டர் எஸ்.வெய்னர் என்ற அறிஞரும் வந்தார்.
இருவரும் தீவிரமாக ஆராய்ந்து, ரத்தத்தில், 'ஆர்எச்' காரணிகள் இருப்பதையும், 'பாசிட்டிவ்' மற்றும் 'நெகட்டிவ்' வகை ரத்த பிரிவுகள் உள்ளதையும் கண்டறிந்தனர். ரத்தத்தில், 'ஏ, பி, ஓ' என, மாதிரிகளை வகை பிரித்தனர். இந்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில் புதிய வெளிச்சம் பாய்ச்சியது.
ரத்த பிரிவுகளின் அமைப்பு பற்றி ஆராய்ந்து, பல உண்மைகளை வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பு தான், விபத்தில் பாதிக்கப்படும் மனித உயிர்களை காத்து வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி, திசு வளர்ச்சி, நோய் தொற்று போன்ற துறைகளிலும் ஆராய்ந்து, மருத்துவ உலகில் புதிய கதவுகளை திறந்தனர்.
ரத்தப்பிரிவுகள் கண்டுபிடிக்கப் பட்டதை, மருத்துவ உலகம் இருகரம் கூப்பி வரவேற்றது.
இந்த உன்னத கண்டுபிடிப்புக்காக, 1930ல் நோபல் பரிசை, கார்ல் லாண்ட்ஸ் டெய்னர் பெற்றார்.
இவர் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே, மாரடைப்பால் இறந்தார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு மருத்துவமனையும், மருத்துவ பரிசோதனை நிலையமும், அவர் பெயரை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
