PUBLISHED ON : டிச 31, 2022

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 12ம் வகுப்பு படித்தேன். அன்று பொதுத்தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் நடந்தது.
தோழியுடன், ஒரே மேஜையில் அமர்ந்து எழுதினேன். குறிப்பிட்டதற்கும் அரை மணி நேரத்துக்கு முன் எழுதி முடித்து, விடைத்தாளை கட்டி சரி பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
தோழியும் முடித்திருந்ததால், நான் எழுதிய விடையில் ஒன்றை ரகசியமாக கூறி, 'சரியா...' என கேட்டேன். அவள், 'தவறு...' என, வேறு ஒரு விடையை கூறினாள். அது சரியா, தவறா என சிந்திக்காமல் திருத்தி, அவள் கூறியதை எழுதினேன்.
வீட்டுக்கு வந்ததும், அந்த விடையை சரி பார்த்தேன். முதலில், நான் எழுதியது தான், சரியாக இருந்தது. அவசரத்தில் அறியாமையால் செய்த தவறை எண்ணி, 'என் மீதே நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதே' என வருந்தினேன்.
தேர்வு அறையில், 'மற்றவரிடம் பேசக் கூடாது; மற்றவரை பார்த்து எழுத கூடாது' என்ற கட்டுப்பாட்டு விதியின் அர்த்தம் அப்போது தான் புரிந்தது. பின், அதுபோல் தவறு செய்வதை தவிர்த்தேன்.
என் வயது, 32; தனியார் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறேன். மாணவர்களுக்கு என்னையே முன் உதாரணமாக கூறி, முழு நம்பிக்கையுடன் தேர்வு எழுத அறிவுரைத்து வருகிறேன்.
- க.கிரிஜா, கோவை.
