PUBLISHED ON : நவ 23, 2019

சென்றவாரம்: பேராசையால் கனவு கண்ட நீர்மாவை, இளவரசன் போல் வேடமிட்ட வவ்வால் அரக்கன் மணந்து, கொன்று புசிக்க தருணத்தை நோக்கியிருந்தான். எலி அந்த உண்மையை உணர்த்தியது. இனி-
விடிந்ததும், பால் குடிக்க வரவில்லை எலி. செய்வதறியாது தவித்தாள் நீர்மா. கணவன் வடிவில் இருந்த வவ்வால் அரக்கன், நன்றாக சாப்பிடும்படி வற்புறுத்தினான்.
சாப்பிட்டால் உடல் பெருக்கும்; உடல் பெருத்தால் அவளைக் கொன்று, விருந்தாக்கி மகிழ காத்திருந்தனர் அரக்கர்கள். மெலிந்து இருப்பது தான் தப்பும் வழி என எண்ணி, 'தலை வலிக்கிறது; என்னால எதுவுமே சாப்பிட முடியாது...' என, பொய் கூறினாள்.
'சரி... இந்த வாழைப் பழங்களையாவது சாப்பிடு...' என்று கொடுத்தான் வவ்வால் அரக்கன்.
'தலைவலி விட்டதும் சாப்பிடுறேன்... நீங்க கவலைப்படாதீங்க...'
'நீ பட்டினி கிடக்க கூடாது... அவ்வளவு தான்... அன்பு மனைவி பட்டினி கிடப்பதை கணவனால் பொறுக்க முடியுமா... உன் உடல், கொழுத்து வளர்வதை காணத்தானே காத்திருக்கிறேன்...' என்று கூறியபடி, நண்பர்களைத் தேடிச் சென்றான்.
கவலையுடன் நின்ற நீர்மா, 'இந்த அபாயத்திலிருந்து எப்படி மீள்வேன்; என்னை காப்பாற்ற போவது யார்... எலியே... என் இனிய நண்பனே... எங்கே போனாய்... கருணை காட்டு; இந்த கொடிய அரக்கன்களிடம் இருந்து தப்பும் வழியைக் கூறு' என, மனதில் அழுது புலம்பினாள்.
இரவு வந்தது -
வவ்வால் அரக்கன்கள் திரண்டு வயிறு புடைக்க உண்டு, முற்றத்தில் ஆடி பாடி கொட்டமடித்தனர். படுக்கையில் சோர்ந்து கிடந்தாள், நீர்மா. அப்போது தாவிக் குதித்து வந்த எலி, 'பயப்படாதே... ஜன்னல்களை மூடு; திறந்து வைத்தால், இங்கு என்ன செய்கிறோம் என்பது, அரக்கன்களுக்கு தெரிந்துவிடும்...' என எச்சரித்தது.
ஜன்னல்களை மூடியதும், 'பளீர்' என வீசிய ஒளியில், தேவதையாக மாறியது எலி; அதன் ஆடைகளில், சிவப்பு, மஞ்சள், நீலம் என, வண்ணக்கற்கள் பளபளத்தன.
புன்னகைத்த தேவதை, 'சொல்வதைக் கவனமாக கேள்; உனக்கு, ஒரு முட்டை, விளக்குமாறு, கோணிஊசி ஆகியவற்றை தருகிறேன்; அவற்றை எடுத்துக்கொண்டு உன் தாய் வீட்டுக்கு ஓடு; அரக்கன்கள் துரத்தியபடி வருவர். மிகவும் நெருங்கி வந்தால், முட்டையை எறிந்து விட்டு, திரும்பி பார்க்காமல் ஓடு...
'அது, அரக்கன்களைத் தடுக்கும். ஆனால், ஓய்ந்து விடாமல், மீண்டும் துரத்துவர். பயந்து விடாதே... மறுபடியும், நெருங்கி வந்தால், விளக்குமாறை வீசு; அதன் பின்பும், துரத்தி வந்தால், கோணி ஊசியை எறி... உன்னை நெருங்கும் முன், உன் தாய் வீட்டை அடைந்து விடுவாய்...' என்றது.
மூன்றையும் எடுத்தபடி ஓடினாள், நீர்மா.
முற்றத்தில் பாடி, ஆடிய அரக்கன்களில் ஒருவன், 'நாளை, உன் மனைவி கொழுத்திருக்காவிட்டாலும், கொன்று விருந்து போட வேண்டும்...' என்றான்.
'இருங்கள்... எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருகிறேன்...' என்று, நீர்மாவின் படுக்கையறைக்கு வந்தான் வவ்வால் அரக்கன். இருட்டாக இருந்ததால், மெழுகுவர்த்தியை ஏற்றினான். படுக்கை காலியாக இருந்தது. பின்புற கதவு திறந்து கிடந்ததைக் கண்டு கூச்சல் போட்டான்.
'என்ன... என்ன...' என்றபடியே பதறியடித்து வந்தனர் அரக்கன்கள்.
'என் மனைவியைக் காணோம்...'
'வீட்டின் பின்புறமாக ஓடியிருப்பாள்... வாருங்கள் துரத்தி பிடிப்போம்...' என்றபடி, இறக்கைகளை, 'படபட' என அடித்து துரத்தி பறந்தனர். நெருங்க முயன்றதும், எலி தேவதையின் அறிவுரைப்படி, முட்டையை வீசினாள் நீர்மா.
அந்த முட்டை மந்திர சக்தி வாய்ந்தது. உடைந்து மஞ்சள் கருவும், வெள்ளைக் கருவும் கொட்டி, ஒரு பெருங்கடல் உருவானது. அரக்கர்கள் செய்வதறியாது விழித்தபடி, 'முதலில், இந்த கடல் நீரை குடிப்போம்; பின், அவளை கொன்று, விருந்தாக்கி உண்ணலாம்...' என்றனர்.
கடல் நீரைக் குடித்ததும், இரட்டிப்பு வேகத்தில் பறந்தனர்; மீண்டும் நெருங்கியதை, ஓசை மூலம் அறிந்த நீர்மா, விளக்குமாறை வீசினாள். அது விழுந்த இடத்தில், அடர்ந்த காடு உண்டானது. எங்கும், பெரிய மரங்கள், இருண்ட புதர்களாக கட்சியளித்தது; மரங்களின் இடைவெளியில் பறக்க முடியாமல் திணறினர் அரக்கன்கள்.
'இந்த மரங்களை வெட்டிச் சாய்ப்போம்; பின், அவளைப் பிடிக்கலாம்...' என்றான் வவ்வால் அரக்கன். மரங்களை வெட்டி தடை விலகியதும் தொடர்ந்து துரத்தினர்.
மூன்றாவது முறை, புயல் வேகத்தில் நெருங்கியதை உணர்ந்த நீர்மா, கோணி ஊசியை வீசி எறிந்தாள். அது விழுந்த இடத்தில், பல்லாயிரம் ஈட்டிகள் கூர்மையுடன் நீட்டி நின்றன. வேகமாய் பறந்த அரக்கன்களின் உடல், அவற்றில் சிக்கி சிதைந்தன.
தாய் வீட்டை அடைந்தாள் நீர்மா. கண்ணீருடன், கடினமாக தப்பியதை விவரித்தாள். அதைக் கேட்டதும், 'இவ்வளவு சோதனைகளையும் கடந்து திரும்பி வந்தாயே...' என்று மகிழ்ந்து வரவேற்றனர் பெற்றோர்.
'எலி தேவதை மட்டும், உதவி செய்யா விட்டால்...' என்று கண் கலங்கிய நீர்மா, அதற்கு நன்றியை சமர்ப்பித்தாள்.
வாண்டூஸ்... தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது; இளவரசன் தான் கணவனாக வேண்டும் என, ஆசைப்பட்ட நீர்மாவுக்கு, அரக்கன்களுடன் போராடும் நிலை ஏற்பட்டது பார்த்தீர்களா...
முற்றும்
