PUBLISHED ON : ஜூன் 11, 2022

முன்னொரு காலத்தில் -
தையல் கடைக்காரரிடம் நெருங்கி பழகியது ஒரு குரங்கு.
அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து வந்தார்.
தீபாவளி நெருங்கியதால், அன்று மும்முரமாக துணி தைக்கும் பணியில் இருந்தார்.
அப்போது, 'எல்லாரும் தீபாவளிக்கு புத்தாடை அணியிறீங்க; எனக்கும் ஆசையாக இருக்கு; ஒரு சட்டை தைத்து தர்றீங்களா...' என்றது குரங்கு.
'சட்டை தைத்து தருகிறேன்; ஆனால், இந்த ஆசை உனக்கு தேவையற்றது...'
'ஏன் அப்படி சொல்றீங்க...'
'மனிதருக்கு தான் வெட்கம், மானம் உண்டு; உன் போன்ற விலங்குக்கு அவை தேவையில்லை. நீ, சட்டை போட ஆசைப்பட்டால், அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும்; நாயாய், பேயாய் அலைய வேண்டியிருக்கும். இப்போது போல் சுதந்திரமாக திரிய முடியாது. அடிமையாக இருக்க வேண்டும்; இதற்கு சம்மதித்தால் சட்டை தைத்து தருகிறேன்...' என்றார் தையல்காரர்.
குரங்குக்கு தலை சுற்றியது; சுதந்திர வாழ்வை இழக்க அது தயாராக இல்லை.
எனவே, 'புத்தாடை ஒண்ணும் வேணாம்; நீங்களே கொண்டாடுங்க; பட்டாசு சத்தம் முடிந்தவுடன் வருகிறேன்; இப்போது காட்டுக்கு போறேன்...' என்று கூறியது குரங்கு.
வீட்டிலிருந்த பலகாரங்களை, மூட்டைக் கட்டி கொடுத்து, 'நல்ல படியாக சென்று வா...' என வழி அனுப்பினார் தையல்காரர்.
சகோதரர்களை பார்க்க காட்டுக்கு புறப்பட்டது குரங்கு.
செல்லங்களே... கிடைக்கிற வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து வாழுங்கள்.
ர.கா.செந்தில்

