PUBLISHED ON : ஆக 27, 2010

அன்பின் உருவமாய் இந்த பூமியில் தோன்றி, உலகை மீண்டும் அன்பை நோக்கி திரும்பிவிட்டு செல்வர். அப்படிப்பட்ட அன்பு வடிவங்களில் ஒன்றுதான் நம் அன்னை தெரசா. 'மக்கள் சேவையே கடவுள் சேவை' என்று வாழ்ந்த அன்னை தெரசாவை, '20-ம் நூற்றாண்டில் உலகம் பெற்ற அன்பின் வடிவம்' என்று உலகம் முழுவதும் போற்றுகிறது; பாராட்டுகிறது. அவர் இன்றுதான் பிறந்தார். 27ம் நாள், ஆகஸ்ட் மாதம் 1910-ம் ஆண்டு அவர் பிறந்த தினம். அல்பேனிய நாட்டு மக்கள் இவரை அவ்வளவு எளிதில் மறுந்துவிட முடியாது. ஆனால், அதே சமயம் உலகமே வியக்கும் வண்ணம், ஒரு சேவையை இவர் செய்ய போகிறார் என்பதை யார்தான் அறிந்திருப்பார். இவரது சேவை நமக்கு கிடைக்கவில்லையே என்று அனைவரையும் ஏங்க வைத்தவர் அன்னை தெரசா. 1925-ம் ஆண்டு தெரசா இந்தியாவுக்கு வந்தார்.
காலை கடித்த எலி!
இந்தியா வந்த அவர் கல்கத்தாவில் தங்கினார். அங்குள்ள குடிசை பகுதியில் அவரது பணி தொடங்கியது. கல்கத்தா வீதியில் ஒரு அனாதை பெண்மணியின் கால்களை எலி கடிக்க, கத்தக் கூட சக்தி இல்லாமல் சாய்ந்து கிடந்தார். தெருவில் போவோர் வருவோர் எல்லாருமே இக்காட்சியை பார்த்தனர். பார்த்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு போய் கொண்டே இருந்தனர். அப்பெண்மணியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே வரவில்லை. அந்த வழியே வந்த தெரசா, இதை பார்த்து மனம் வருந்தினார். அந்த பெண்மணியை தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். நல்ல முறையில் அவளை குளிப்பாட்டினார்; ஆடை மாற்றினார். மெத்தையில் படுக்க வைத்து, முதலுதவி செய்தார். அந்த அனாதை பெண்மணி, தனது கடைசி நிமிடங்களை அமைதியாக கழிக்க உதவினார். அப்போது தோன்றியதுதான், 'நிர்மல் ஹிருதய்' என்ற அமைப்பு.
அசையும் பொட்டலம்!
ஒருநாள் அன்னை, காரில் போகும்போது தெருவில் இருந்த ஒரு காகித பொட்டலம் அசைவதை பார்த்தார். உடனே இறங்கி அந்த பொட்டலத்தை கையில் எடுத்தார்; பிரித்தார். பிறந்த சில மணி நேரம் ஆன, ஒரு குழந்தை அந்த பொட்டலத்தில் இருந்தது. வீட்டிற்கு கொண்டுபோய் வெந்நீரில் குளிப்பாட்டி போர்த்தி அக்குழந்தையை காப்பாற்றினார். அனாதை குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்று முதல் அவருக்கு தோன்றியது. அதன் காரணமாக, 'சிசுசதன்' பிறந்தது.
கன்னியாஸ்த்ரி!
அன்னை தெரசாவின் இயற்பெயர், ஆக்னெஸ் கோஸ்கா பொஜாயியோ. அல்பேனியாவில் உள்ள ஸ்காப்ஜியில் பிறந்தார். ஆக்னெசுக்கு சேவை செய்வதில் அதிக விருப்பம். அவரது 18-வது வயதில் ஐரிஷ் நாட்டில் கன்னியாஸ்த்ரியாக மாறிவிட்டார். இந்தியாவில் டார்ஜிலிங் கிறிஸ்தவ மிஷனரியில் சிறிது காலம் பணி புரிந்தார். ஒருசமயம் ரயிலில் பயணம் செய்தபோதுதான், தெரசாவுக்கு ஏழைகள் மற்றும் அனாதைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற யோசனை உண்டாயிற்று. இதை ஆண்டவன் கட்டளையாக கொண்டு கல்கத்தா வந்து சேர்ந்தார் அன்னை. ஒரு கன்னியாஸ்த்ரி, அதுவும் வெளிநாட்டவர் ஏழைகளுக்கு பணிவிடை செய்ய முடியுமா என்று பலபேர் சந்தேகப்பட்டனர். அன்னை இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. ஆண்டவர் மீது பாரத்தை போட்டார்.1950-ம் ஆண்டு, 'மிஷனரி ஆப் சாரிட்டி' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இவர் மிஷனுக்கு 15 ஆண்டுகளிலேயே வாடிகன், சுதந்திர உரிமை அளித்தது. இது மிக மிக அதிசயமான விஷயம். ஏனெனில் அவ்வளவு சீக்கிரம் வாடிகள் உரிமையை யாருக்கும் அளித்திடாது. இவரது சேவையை கண்டு பாராட்டிய கல்கத்தா காளிகோவில் நிர்வாகம், காளி கோவிலுக்கு சொந்தமான இடத்தை அவரது, 'நிர்மல் ஹிருதய்'க்கு அளித்தது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்குள் பிண வாடை, துர்நாற்றம் வீசும் என்று கற்களை எறிந்து கலவரம் செய்தனர். அச்சமயம் துணிந்து வெளியே வந்தார் அன்னை. வெள்ளை புடவை உடுத்தி கருணை உள்ளத்துடன், கை கூப்பி வெளியே வந்த அன்னை தெரசா, கற்களை எறிந்தவர்களை நோக்கினார். மிகவும் அன்புடன், 'அந்த அனாதைகள் மீது கற்களை எறியாதீர்கள். அவர்களுக்கு பதில் என்னை கல்லால் அடியுங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரையில் அடியுங்கள்!' என்று கூறினார். கனிவுடன் அவர் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவர்கள் மனம் மாறியது. தலை குனிந்து கல்லெறிந்தவர்கள் சென்றுவிட்டனர். நிர்வாகமும் தெரசாவிடம் மன்னிப்பு கேட்டது. காளிகோவில் பூசாரி ஒருவர் வயதான காலத்தில் அனாதையாக சாகும் தருவாயில், 'நிர்மல் ஹிருதய்' ஆசிரமத்திற்கு வந்தார். அவர் அங்கு நல்ல முறையில் கவனிக்கப்பட்டார். 'நான் 20 ஆண்டுகள் பூசித்த காளி மாதாவை, தெரசா உருவில் காண்கிறேன்' என்று நெகிழ்ந்தார் பூசாரி.
விருது மழை!
ஒரு விருது வாங்குவதே மிக பெரிய விஷயம். அன்னையிடம் விருதுகள் எல்லாம் தலை வணங்கின. ஒரு நாட்டின் விருதுகள் அல்ல, உலக நாடுகளின் விருதுகள் எல்லாம் அன்னையிடம் அணிவகுத்தன. சாதாரண விருதுகளா அவை... ஒவ்வொன்றும் மிக உயரிய உன்னத விருதுகள். சாம்பிளுக்கு ஒரு விருது - நோபல்.
ஆண்டவன் ஆணை!
'நான் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பது இறை விருப்பம்' என்கிற அன்னை, மனிதகுல சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள, தூண்டுதலாக இருந்தது எது என்பதை கூறுகிறார். அந்த புதிய பாடத்தை நான் இன்று கற்று கொள்ள முடிந்தது. ஏழ்மையின் கொடுமையை அனுபவபூர்வமாக புரிந்து கொண்டேன். கால் வலிக்க நடந்தேன். பசியை தீர்க்க சிறிது உணவிற்காகவும், நிழலை தரும் சிறு கூரைக்காகவும், ஏழை மக்கள் ஏங்கி தவித்து தேடி அலையும்போது அவர்கள் எவ்வளவு வெறுப்பும், வேதனையும் அடைந்திருப்பர் என்பதை நேரில் அறிந்து கொண்டேன். அனாதையாக விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் இவர்களின் கண்களில்தான் உண்மையான தெய்வத் தோற்றத்தை காணமுடியும். தெரு ஓரங்களில் பசியினாலும், நோயினாலும் வீழ்ந்து கிடப்பவர்கள்தான் என் கண்கண்ட தெய்வங்கள். ஒடுக்கப்பட்டவனும், தெருவில் ஆதரவற்று இறந்து கிடப்பவனும், தொழு நோயினால் மனம் நொந்து உள்ளம் வெதும்புபவனும் நானே என்னும் ஆண்டவரின் குரல் என் இதயக்கடலில் அலைகள் போல் ஒலிக்கின்றன. இறைவா! என் லட்சிய பாதைக்கு என்னை அழைத்து செல்லும். சொகுசும், சுகமும் நிறைந்த வாழ்க்கை என்னை அசைக்க முடியாது. ஆண்டவரே! அனைவருக்கும் சேவை செய்யும் நெஞ்சுரத்தை எனக்கு தாரும்! -இதுவே அன்னையின் பிரார்த்தனை.***