PUBLISHED ON : அக் 08, 2022

கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், நாட்டாண்மை கழக உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 9ம் வகுப்பு படித்த போது, உடல்நிலை சரியில்லாததால் ஒருநாள் வகுப்புக்கு செல்லவில்லை.
மறுநாள், முதல் பாடவேளை தமிழ்பாட வகுப்பு. ஆசிரியர்
பூ.சு.அரங்கசாமி வகுப்பிற்குள் நுழைந்ததும் எழுந்து, வணக்கம் சொல்லி அமர்ந்தோம். நேற்று நடத்திய பாடத்தை ஒப்புவிக்க அறிவுறுத்தினார். என் முறை வந்த போது, 'ஐயா... ஒப்புவிக்க இயலாத நிலையில் உள்ளேன்...' என்று பணிவாக கூறினேன்.
கனிவுடன், 'எப்போது ஒப்புவிப்பதாக உத்தேசம்...' என்றார். துணிவுடன், 'ஐயா... நேற்று நடத்திய பாடத்தை மீண்டும் நடத்தினால், இந்த பாட வேளை முடிவதற்குள் ஒப்புவித்து விடுவேன்...' என்றேன்.
சலிப்பின்றி மீண்டும் நடத்திய பின், 'போதுமா...' என்றார். நன்றி தெரிவித்து, பாடத்தை முறையாக ஒப்புவித்தேன். மகிழ்ந்து பாராட்டினார் ஆசிரியர். கை தட்டி வரவேற்றனர் மாணவர்கள்.
தற்போது, என் வயது, 76; இடைநிலைப் பள்ளியில் ஆசிரியையாக, 40 ஆண்டுகள் மனநிறைவுடன் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனக்காக, தனிப்பட்ட முறையில் பாடம் நடத்திய அந்த ஆசிரியரை போற்றி வணங்குகிறேன்.
- எம்.பி.சரஸ்வதி சிவராஜ், கோவை.
