PUBLISHED ON : செப் 12, 2020

வெள்ளியணை கிராமத்தில் வசித்த பெண், சமையலுக்காக வாங்கிய சுரைக்காயை நறுக்க முயன்றார். அப்போது, 'அம்மா... உங்களுக்கு பிள்ளைக்குப் பிள்ளையாய் உதவுவேன்... என்னை கண்டந்துண்டமாக்க வேண்டாம்...' என்றது சுரைக்காய்.
அவள் முகத்தில் ஆச்சரியம்.
குழந்தையின்றி வாடிய அவள், 'கடவுளாய் கொடுத்த வரம்' என்று எண்ணி மகிழ்ந்தாள். சுரைக்காயை நறுக்குவதை தவிர்த்து, வேறு காய்களில் சமைத்தாள்.
வயலில், வேலை செய்த கணவருக்கு உணவுடன் புறப்பட்டாள். அப்போது, 'அம்மா... உங்க மகனாக நான் இருக்கிறேன்... எல்லா உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன்...' என்று, உணவுப் பாத்திரத்தை வாங்கியபடி புறப்பட்டது சுரைக்காய். வயலுக்கு சென்றதும், 'அப்பா... அப்பா...' என்று அழைத்தது.
அதைக் கேட்ட விவசாயி, 'நமக்குத் தான் குழந்தையே இல்லையே... யார் அழைப்பது' என சுற்றும் முற்றும் பார்த்தார். வரப்பில் நின்ற சுரைக்காய், கதையை விவரமாக கூறியது.
மிகுந்த சந்தோஷத்தில் உணவை சாப்பிட்டு முடித்தார். அப்போது, 'மரத்தடியில் சற்று நேரம் இளைப்பாறுங்கள் அப்பா; நான் உழவு வேலையை கவனிக்கிறேன்...' என்றது சுரைக்காய்.
சற்று கண்ணயர்ந்தார் விவசாயி.
அந்த வழியே வந்த திருடர்கள், வயலில் மாடுகளை கண்டனர்; பிடித்து சந்தையில் விற்க முடிவு செய்து நெருங்கியபோது, 'யாருடா அது! திருடப் பாக்குறீங்களா...' என்று தடுத்து, சண்டை போட்டது சுரைக்காய்.
அதை ஏளனமாக உதைத்து, மாடுகளைத் திருடிப் போயினர்.
விவசாயியை எழுப்பி, நடந்தவற்றை கூறியது சுரைக்காய்.
இருவரும் கவலையுடன் வீடு திரும்பினர்.
'அம்மா... கட்டுச்சோறு கட்டிக் கொடுங்க; மாடுகளை மீட்டு வருகிறேன்...' என்றபடி புறப்பட்டது சுரைக்காய்.
எதிரே, பாம்பு, தேள், அம்மிக்கல், கழுதை வந்தன. அவை, 'கட்டுச் சோற்றுடன் எங்கு போற...' என்று கேட்டன.
'திருடனைப் பிடிக்க போறேன்...'
'நாங்களும் உதவிக்கு வருகிறோம்...' என்று இணைந்தன.
மாலை நெருங்கியதும், ஒரு வீட்டை அடைந்தன; தேடிவந்த உழவு மாடுகள் அங்கு இருந்தன. மிகவும் மகிழ்ச்சியுடன், 'மாடு கிடைத்து விட்டது... ஆனா திருடர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்து விட்டுத்தான், மீட்டுப் போக வேண்டும்...' என்றது சுரைக்காய்.
எல்லாம் சம்மதித்து, ஒளிய வசதியான இடங்களை தேடின.
தீப்பெட்டிக்குள் ஒளிந்தது தேள்.
ஊதாங்கோலில் ஒளிந்தது பாம்பு.
பக்கத்து அறையில் மறைந்தது அம்மிக்கல்.
பின்கட்டில் தங்கியது கழுதை.
நன்றாக இருட்டியதும், திருடர்கள் வந்தனர்.
ஒருவன், தீப்பெட்டியால் விளக்கு ஏற்ற முயன்றான்; அதற்குள் இருந்த தேள், அவனைக் கொட்டியது.
தேளை கொல்ல ஊதாங்கோலை எடுத்தான் ஒருவன்; அதனுள் இருந்த பாம்பு, அவனை தீண்டியது; இதைப் பார்த்த மற்றொருவன், பயந்து பக்கத்து அறைக்கு ஓடினான்; அம்மிக்கல், அவன் கால்மீது விழுந்தது.
இவற்றை பார்த்த நான்காவது திருடன், பின்கட்டில் மறைய ஓடினான். அங்கு இருந்த, கழுதை எட்டி உதைத்தது.
மயங்கி விழுந்தான்.
மயங்கிய திருடர்களை பிடித்து கயிற்றில் கட்டியது சுரைக்காய். ஊர்மக்களிடம் விவரத்தைக் கூறி ஒப்படைத்தது.
பின், உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறி, மாடுகளுடன் வீடு வந்தது சுரைக்காய்.
அதை ஆரத்தழுவி, 'உன்னைப் போல் பிள்ளை கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்...' என்று மகிழ்ந்தனர்!
மழலைகளே... மன உறுதி எதையும் சாதிக்க உதவும். நம்பிக்கையுடன் இருந்தால், எல்லாவற்றையும் வெல்லலாம்.
- எ.சரிதா
