PUBLISHED ON : ஏப் 20, 2018

அடர்ந்த காட்டில், குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அங்கு கிடைக்கும், காய் மற்றும் கனிகளை சந்தோஷமாக தின்று பசியாறின.
மார்கழி மாதம் கடும் குளிரில், குரங்குகளின் உடல், வெட வெடத்தது. குளிர் தாங்க முடியாமல் அங்கு கிடைத்த இலை, தழைகளைப் பயன்படுத்தி குளிரை போக்க முயன்றன; முடியவில்லை. குட்டிக் குரங்குகள், கடுமையாக நடுங்கின. எனவே, தப்பிக்க, யோசித்தன.
ஒவ்வொரு குரங்கும், வெவ்வேறு யோசனையை தெரிவித்தன.
''இந்த இடத்தை காலி செய்து, குளிர் இல்லாத பிரதேசத்திற்கு சென்று விடலாம்...'' என்றது, ஒரு குரங்கு.
''இந்த குளிரில், வெகு துாரம் நடப்பது இயலாத காரியம்; எனவே, வேறு யோசனை செய்யலாம்...'' என்றது மற்றொரு குரங்கு.
''பக்கத்தில் எங்காவது, துணி, போர்வைகள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்; அதை போர்த்தி, குளிரைப் போக்கிக்கொள்ளலாம்...'' என்றது, வேறொரு குரங்கு.
''பக்கத்தில், மனிதன் வசிப்பிடமே இல்லை; அப்புறம் எப்படி துணி கிடைக்கும்...'' என்றது இன்னொரு குரங்கு.
அப்போது, ஒரு குரங்கு, ''அதோ துாரத்தில் என்னமோ வெளிச்சம் தெரியுது; என்னவென்று பாருங்கள்...'' என்றது.
''ஏதோ வெளிச்சம் கிடையாது; அது நெருப்பு... நன்றாக உற்றுப் பாருங்கள்...'' என்றது ஒரு குரங்கு.
அப்படியே உற்றுக் கவனித்த குரங்குகள், ஆமோதித்தன.
''அப்படியானால், நாம் குளிர் காய, அந்த நெருப்பு உதவும்; அங்கே போய் கடுங்குளிரை விரட்டலாம்...'' என்றது அந்த குரங்கு.
மற்ற குரங்குகள், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தன. குளிர் தொல்லைக்கு விடுதலை கிடைக்கப் போவதை எண்ணி, ஆட்டம் போட்டபடி, அங்கு செல்லத் தயாராயின.
இதை, மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு கவனித்து, ''நீங்கள் எல்லாம் சரியான முட்டாள்கள்...'' என்று சொல்லி சிரித்தது.
இதை கேட்டதும் குரங்குகளுக்கு கோபம் வந்தது. 'எங்களையா முட்டாள் என்கிறாய்' என்று கொக்கை பார்த்து எகிறின.
''ஆமாம்... அங்கே தெரிவது நெருப்பல்ல; பறந்து திரியும் மின்மினிப் பூச்சிகள்...'' என்றது கொக்கு.
இதை கேட்டதும், குரங்குகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு குரங்கு கடும் கோபம் அடைந்து, மரத்தில் பாய்ந்து ஏறியது. கொக்கை வளைத்துப் பிடித்து, ''எங்களுக்கா புத்திமதி சொல்கிறாய்... உன்னை என்ன செய்கிறேன் பார்...'' என்று சொல்லி, பாறையில் அடித்துக் கொன்றது.
பாவம் கொக்கு... நல்லதை சொல்லியது; ஆனால், சொல்லிய விதம் சரியில்லாததால் உயிரைக் கொடுக்க வேண்டியாதாகி விட்டது.
தகுதியுள்ளவர்களுக்கு தான் அறிவுரை வழங்க வேண்டும் குட்டீஸ்...
