PUBLISHED ON : ஜூலை 25, 2020

சென்றவாரம்: விடுமுறையில் குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும், அங்கு நிலவிய மர்மங்களை துப்பறிய முயன்றனர். செல்லமாக வளர்த்துவந்த பிராணிகளே கொடூரமானது கண்டு திடுக்கிட்டான் வினு. இனி -
குட்டி ஆமை, மிக மெதுவாக நகரக் கூடியது; அது கால்களில் சக்கரம் கட்டியது போல சறுக்கி ஓடி, வினு மீது பாய்ந்தது; கறுப்பு சுண்டெலி கண்களை குறி வைத்தது.
பாய்ந்து நடுங்கியபடி, பேஸ்பால் மட்டையை எடுத்தான் வினு. தாக்குவதற்கு முன் 'ஏய்... நீங்க இருவரும் எங்க வளர்ப்பு மிருகங்கள். உங்களுக்கு என்ன ஆனது... செய்நன்றியும், அன்பும் இல்லாமல் தாக்க பாயலாமா...' என்றான்.
எதையும் கேட்கும் மனோ நிலையில் அவை இல்லை. உக்கிரமாக பாய்ந்து தாக்க முயன்றன. இரக்கப்படுவதால் பயனில்லை என உணர்ந்து, சுண்டெலியை கடுமையாக தாக்கினான்; அதன் உடல் நசுங்கி பச்சை நிற ரத்தம் வழிந்தது. தொடர்ந்த போராட்டத்தில், ஆமையும், சுண்டெலியும் இறந்தன.
புதிதாக முளைத்திருந்த ட்ராகுலா பற்களும், நகங்களும் மறுநொடியே மறைந்து, பழைய உருவை அடைந்தன. பிணமாக கிடந்த வளர்ப்பு மிருகங்களை பரிதாபமாய் பார்த்தான். குமுறி கொண்டு வந்தது அழுகை; மதுவை எழுப்பியதும் வீறிட்டாள்.
'என்ன இது... உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா... ஏன் இப்படி செய்த...' என்று கடும் கோபம் கொண்டாள்.
நடந்ததை விவரித்தான் வினு.
'நம்ம கைய வைச்சே நம்ம கண்ணைக் குத்த முயலுதுங்க துர் ஆவிகள்... இப்ப என்ன செய்யலாம்...'
'வளர்ப்பு மிருகங்களை நல்லடக்கம் செய்வோம்...'
சடலங்களை அள்ளி கொல்லைப் புறத்துக்குப் போயினர்; குப்புறப் படுத்து துாங்கிக் கொண்டிருந்தான் சுப்பையன்.
குழி தோண்டி புதைத்து, அந்த இடத்தை மேடாக்கினர். திரும்பிய மது, தன்னுணர்வு ஏற்பட திரும்பி புதைகுழியைப் பார்த்து வீறிட்டாள். புதைத்த இடத்தை அவள் விரல் சுட்டியது.
புதைத்த இடத்தில் மண்மேடு வீறல் விட்டது. அதிலிருந்து மெதுவாக, எதுவோ முளைத்து வருவது போல் இருந்தது.
இரண்டு ஒற்றை கிளைகள் உயர்ந்தன. ரோஜாக்கிளை... ஆனால், கறுப்பு நிறத்தில். இரு கிளைகளிலும் தனிதனியாக மொட்டுகள், ரத்தம் சொட்ட சொட்ட மலர்ந்தன. கறுப்புக் கிளையில் ரத்த ரோஜாக்கள்!
இயலாமை, நம்பாமையுடன் திரும்பி, சமையல் கூடத்தை தாண்டி நடந்தனர்.
இமைக்காத கண்களுடன் நின்றாள் செண்பா.
'நள்ளிரவு கொல்லைல ஏன் நடமாடிக்கிட்டு இருக்கீங்க...'
'ஹி... ஹி... சும்மா...'
'என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியும்...'
'என்ன...'
'உங்க அறைக்கு இப்பத்தான் போயிட்டு வருகிறேன்; தரை முழுக்க ரத்தச்சேறு...'
'ஆமா... அதுக்கென்ன...'
'அருமையா வளர்த்த மிருகங்களையே கொன்றிருக்கீங்க...'
'திடீர்னு தாக்க வந்தால் என்ன செய்றது...'
'கற்பனையில் மிதக்கிறீங்க குழந்தைகளா... நீங்க நினைச்சது, மனப்பிரமையா இருக்கும். அல்லது கொளஞ்சியின் திருவிளையாடலோ என்னவோ...'
'வாயை மூடு; கொளஞ்சியை குறை சொல்லாதே... அவரை இந்த மலைமேல் தெய்வமாகவே வழிபடுகின்றனர்...'
'யார் சொன்னது...'
'விசாரித்து தெரிந்து கொண்டோம்...'
'சரி... கொளஞ்சி நல்லவர் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஏனிந்த நள்ளிரவில் தேவையில்லாத வாக்குவாதம்... போய் துாங்குங்க; ரத்தச்சேற்றை துடைத்து அறையை சுத்தப்படுத்தி விட்டேன்...'
செண்பாவை ஒரு மாதிரி பார்த்தபடி அறைக்கு நடந்தனர்; தரை, 'பளிச்'சென்று இருந்தது. வினு மனதுக்குள் ஏதோ மின்னியது. அரைக்கால் உயர்த்தி, ஜன்னலில் முகம் பதித்து கொல்லையை நோட்டமிட்டான்.
புதைமணல் சேற்றிலிருந்து ஏதோ எழுந்தது.
வாவ்... சகதி பூதம். மதுவையும் இழுத்து காட்டினான். திரவ சாக்லெட் குளத்தில் இறங்கி எழுந்தது போல இருந்தது.
அது நடக்க நடக்க, கால் பிசுபிசுப்பு தரையில் ஒட்டியது. நடக்கும் போதே அங்குமிங்கும் நோட்டமிட்டது. அதன் பார்வை மது, வினு அறை பக்கம் பாய்ந்தது.
அறை விளக்கை ஆப் செய்திருந்தான் வினு; பத்து நொடிகளுக்கு பின், மீண்டும் எட்டிப்பார்த்தான். நீண்ட மெழுகுவர்த்தி முழுதும் எரிந்து, முறையற்ற வடிவமாய் காட்சி தருவது போல நின்றது சகதி பூதம்.
இத்தனை திகிலான காட்சி அமைப்பிலும் வினுவுக்கு சிரிப்பு வந்தது.
'என்னடா சிரிக்கற...'
'பூதங்கள் தான் எத்தனை வகை! கோந்து மாதிரியான திரவத்தை சுரந்தபடியே நத்தை, பீரங்கி டாங்கு போல நகரும். அதை விட மோசமாக இருக்கு இந்த சகதி பூதத்தோட நடை...'
'படுபயங்கரத்தைக் கண்டு ரசிக்கிற...'
'வேறென்ன செய்றது... எப்பேர் பட்ட கோழையும், ஒரு லிமிட் வரைக்கும் தான் பயப்படுவான். திகில், திகில்... மேலும் திகில்... எல்லாம் மரத்துப்போச்சு...'
'அப்படின்னா வா... ஓடிப்போய் சகதி பூதத்தை சிறை பிடிப்போம்...'
'தேவையில்லை...'
'அங்கே பார்...'
வளர்ப்பு மிருகங்கள் புதைத்திருந்த இடத்தை தேடியது சகதிபூதம். தவறான இடத்தை பூதம் தோண்டிய போது, மண்டையோடுகள் வந்தன. அவற்றை, எடுத்த இடத்திலேயே வைத்து மூடியது.
பத்து முறைக்கு மேல் முயற்சித்த சகதி பூதத்துக்கு வெற்றி. வளர்ப்பு மிருகங்களை புதைத்த இடத்தை கண்டுபிடித்து விட்டது. பரபரவென தோண்டியது. சுண்டெலி, ஆமைக் குட்டி உடல்களை எடுத்து ரசித்து தின்றது.
பின், சதுப்பு நிலத்துக்குள் டைவ் அடித்து, சேற்றுக்குள் மறைந்தது.
வினுவும், மதுவும் படுக்கையில் அமர்ந்தனர்.
'பிணங்கள் தின்னும் கேவலமான ஜந்து சகதிபூதம்ன்னு தெரிஞ்சிக்கிட்டேன்...'
'அதில்லடா... நம்பளையும் அதுக இப்படித்தான் தின்னப்போகுது...'
'தைரியமா இரு; இந்த மலை மாளிகையோட மர்மங்களை விடுவிச்ச பின், சகதி பூதங்களை சிறை பிடிக்கலாம்...'
இருட்டில் முறைத்தாள் மது.
'விடிந்தவுடன் கொளஞ்சியை சந்தித்து, ஆலோசனை கேட்டு, துர்ஆவிகளோட போர் தொடுப்போம்...' என்றான் வினு.
இருவரும் படுத்த அதே நேரத்தில் -
பொதிகை மலை உச்சி முகட்டில், 'எங்கேடா ஒளிந்திருக்கிறாய் கொளஞ்சி... கோழையே! தைரியமிருந்தா நேரா வா... மோதிப் பார்த்திடலாம்...' என்ற குரல் எதிரொலித்து அடங்கியது.
வெளிப்படவில்லை கொளஞ்சி.
மலை முகட்டில் படுத்திருந்த கரடியின் தலையைச் சீவியது ஒரு முகமூடி உருவம். ரத்தத்தை முகத்தில் பூசி மீண்டும் அதே வாசகத்தை கர்ஜித்தது!
- தொடரும்...
