PUBLISHED ON : ஜூலை 08, 2016

அந்தி மாலைப் பொழுது. கடவுள் படத்துக்கு விளக்கேற்றிய சமயம். வாசலில் நிழல் ஆடியது. யார் அது என ஓடிப்போய் பார்த்தார் என் தாயார்.
சிங்கத்தின் பிடரி போல வெளுத்த முடியுடன், ஆஜானுபாவ தோற்றத்துடன் ஒரு உருவம், 'உள்ளே வரலாமா?' என்றது.
என் கை, காலெல்லாம் ஆடிவிட்டது. எங்கள் பள்ளியில் சிம்ம சொப்பனமாக விளங்கிய என் எட்டாம் வகுப்பு ஆசிரியர், டி.எஸ்.என். என்கிற டி.சவுந்தர ராஜலு நாயுடு.
நாற்காலியில் அமர்ந்தவாறு வீட்டின் நான்கு பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றினார்.
'சும்மா இந்த பக்கம் வந்தேன். ஜெயகுமார் வீடு இங்கேன்னு ஞாபகம் வந்தது. இன்னும் கொஞ்சம் அவன் உடம்பைப் பார்த்துக்கங்க. வகுப்பிலே நல்லாதான் படிக்கிறான். உடம்புதான் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறான். ராத்திரியிலே ஒரு கைப்பிடி அளவு சுண்டல் செய்கிற கடலையைத் தண்ணியிலே போட்டு, காலையிலே அந்த கடலையையும், ஊறின தண்ணீரையும் சாப்பிட சொல்லுங்கோ. சரி வரட்டுங்களான்னு' பேசிவிட்டு அம்மாவிடம் கைகூப்பி புறப்பட்டு போய்விட்டார்.
மறுநாள் பள்ளிக்குப் போனால், போகிற வழியில் நாலைந்து மாணவர்களின் வீட்டுக்குப் போய் நன்றாகப் படிக்கச் சொல்லி பெற்றோருக்கு, அறிவுரை நல்கினராம் எங்கள் டி.எஸ்.என்., வாத்தியார்.
ஆங்கில தமிழ் அகராதி ஒன்றைத் தொகுத்து மாணவர்களின் ஆங்கில அறிவுக்கு வித்திட்டார். குழந்தை இல்லாத அவருக்கு, மாலை நேரமானால் இதுபோல மாணவர்களின் வீடுகளுக்கு போய் பெற்றோர்களிடம் மாணவர்களைப் பற்றிய விவரங்களை விவாதிப்பது வழக்கமாக இருந்தது.
இதுபோன்று ஆத்மார்த்தமாக, மாணவர் நலனில் அக்கரை எடுத்துக் கொள்பவரை ஆசிரியர்களாகக் கொண்டது, சென்னை கொண்டித்தோப்பு அம்மன் கோவில் தெருவிலிருக்கும், டாக்டர் ஜி.எம்.டி.டி.வி உயர்நிலைப் பள்ளி என் பள்ளி, என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
-ஜி.ஜெயக்குமார், செம்பியம்.

