PUBLISHED ON : ஏப் 07, 2017

மதுரை மாவட்டம், சின்னமனூர் கிருஷ்ணய்யர் உயர்நிலை பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த சம்பவம்... எங்களின் அறிவியல் பாட ஆசிரியர் ஒவ்வொன்றையும், ஒரு உதாரணம் சொல்லி பாடத்தை விளக்குவார்.
வகுப்பறையின் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஒரு மாணவனுக்கு, எப்போதும் சந்தேகம் வரும். அதனால், அவனை, 'சந்தேகி' என்றழைப்போம். அன்று, 'வெப்பக் கடத்தல்' பற்றி பாடம் நடத்தி முடித்த பின், எல்லாருக்கும் புரிந்ததா என்றவர், 'எப்பா! சந்தேகி உனக்கு புரிந்ததா' என்று கேட்க, 'புரியல சார்...' 'ஒரு முனையில் கம்பியை சூடுபடுத்தினால், மறுமுனைக்கு கடந்து வரும். இப்ப புரிந்ததா...' என்றார் ஆசிரியர். 'புரியல சார்!' என்றான்.
உடனே ஆசிரியர், 'டேய்! உதாரணமா உன்னிடம் ஒரு மிட்டாய் கொடுக்கிறேன். அது கடைசியில் இருப்பவனிடம் போய் சேர வேண்டும். நீ போய் கொடுக்க கூடாது. என்ன செய்வாய்...' என்றவுடன், 'சார் நான் எனக்கடுத்தவனிடம் கொடுப்பேன். அது அப்படியே அடுத்தடுத்தவனிடம் போய், கடைசியில இருப்பவனிடம் போய் சேரும்...' என்றான்.
மறுநாள், பரீட்சையில் இதே கேள்வி வர, எல்லாரும் எழுதிய பதிலில் இவன் மட்டும், 'ஒரு மிட்டாயை என்னிடம் கொடுத்து அது அடுத்தடுத்தவன் கொடுத்து கொடுத்து கடைசியில் இருப்பவனிடம் போய்ச் சேருமே, அது தான் வெப்பக்கடத்தல்' என்று எழுதியிருந்தான். இதை ஆசிரியர் படிக்க, அவருடன் சேர்ந்து அனைவரும் சிரித்தோம். இன்றும் அவனை பார்த்தால், 'வெப்பக்கடத்தல் எப்படி இருக்க...' என்றால், 'அட போப்பா' என்று சிரிப்பான்.
- டி.எஸ்.எம்.மைதீன், சின்னமனூர்.
