sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏழு வயதில் கதை எழுதியவரின் கதை இது...

/

ஏழு வயதில் கதை எழுதியவரின் கதை இது...

ஏழு வயதில் கதை எழுதியவரின் கதை இது...

ஏழு வயதில் கதை எழுதியவரின் கதை இது...


PUBLISHED ON : ஜூலை 15, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதலில் இந்தக் கதையை படித்துவிடுங்கள்...

லீ என்றொரு இளைஞன் கடுமையான உழைப்பாளி. ஆனால், எவ்வளவு உழைத்தாலும் அது அவன் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு போதுமானதாக இல்லை. இருந்த போதும், தன் வருமானத்தின் மூலம் கிடைக்கும் உணவை தன் வீட்டருகில் உள்ள ஏழை எளியவர்களுடன் பகிர்ந்துதான் உண்பான்.

ஏழைகளின் வறுமை நிலை மாறவேண்டும்; எளியவர்களுக்கு நல்ல சாப்பாடு வழங்கவேண்டும் என்ற ஏக்கம் லீக்கு ஏற்பட்டது. இதற்காக இறைவனிடம் பிரார்த்தித்தபோது, 'நாளை காலை ஒரு பலூனுடன் அரண்மனையை நோக்கி செல், உன் விருப்பம் நிறைவேறும்' என்று அசரீரி கேட்டது.

பலூனுடன் நடந்து சென்றால் என்ன நடக்கும் என்ற சந்தேகக் கேள்வி எழுப்பாமல், இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற பலூனுடன் நடக்க ஆரம்பித்தான் லீ.

வழியில் ஒரு ஏழை தாய், அழும் தன் மகனை சமாதானப்படுத்த, முயன்று கொண்டு இருந்தார். ஆனாலும், குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இதைப்பார்த்த லீ, தன் கையில் இருந்த பலூனை குழந்தையின் கையில் கொடுத்தான். உடனே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, சிரித்தபடி தன் அம்மாவை கட்டிப்பிடித்து விளையாட ஆரம்பித்தது. இதனால், மகிழ்ந்து போன தாய், லீயைப் பார்த்து நன்றி தெரிவித்துவிட்டு, 'உன் அன்புக்கு நான் என்ன செய்யப்போகிறேன்...' என்று கூறி ஒரு பழத்தை கொடுத்தார்.

பழத்தை வாங்கியபடி தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான் லீ. வழியில் நடக்கமுடியாத ஒருவரை சந்தித்தான், அவரது முகத்தை பார்த்த உடனேயே அவர் பசியோடு இருப்பது தெரிந்தது, கையில் இருந்த பழத்தை அவரிடம் கொடுத்ததும், அதற்காகவே காத்திருந்தது போல வாங்கி ஆசை ஆசையாய் பழத்தை சாப்பிட்டு பசியாறினார். பின், லீயிடம் ஒரு பழைய போர்வையை கொடுத்து, 'இதை வைத்துக்கொள்' என்றார்.

மீண்டும் நடைப்பயணத்தை துவங்கிய லீ, வழியில் ஒரு முதியவர் குளிரில் நடுங்கியபடி இருப்பதை பார்த்து, கையில் இருந்த போர்வையை அவருக்கு போர்த்திவிட்டான். முதியவர் குளிரில் இருந்து விடுபட்டார்.

புன்னகையுடன் தன்னிடம் இருந்த ஒரு மருந்து குப்பியை கொடுத்து, 'இது ஒரு உயிர்காக்கும் மருந்து; ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். எந்த நோயையும் தீர்க்கும் வல்லமை கொண்டது. நான் பல காலமாக வைத்திருக்கிறேன்,. வயதான எனக்கு இம்மருந்து இனி தேவை இல்லை. உன்னைப்போன்ற அன்புமயமான இளைஞனுக்குதான் இது தேவை' என்று சொல்லி கொடுத்தார்.

மருந்து குப்பியுடன் லீ அரண்மனையை நெருங்கினான். அங்கே, அரண்மனையில் யாராலும் குணப்படுத்தமுடியாத காய்ச்சலால் இளவரசி அவதிப்படுவதாகவும், இதனால் ராஜா கவலையுடன் இருப்பதாகவும் கேள்விப்பட்ட லீ, நேராக ராஜாவைப் பார்த்து தன்னிடம் இருந்த மருந்து குப்பியை கொடுத்து அதன் விவரம் கூறினான்.

எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத தன் மகளின் நோயை, இந்த மருந்து எப்படி குணப்படுத்த போகிறது என ராஜா நினைத்தாலும் லீயின் கண்களில் இருந்த அன்பையும், முகத்தில் குடியிருந்த தெய்வீகக்களையையும் பார்த்து நம்பிக்கையுடன் தன் மகளுக்கு மருந்தை கொடுத்தார்.

என்ன ஆச்சர்யம்? இளவரசி மருந்து சாப்பிட்ட அடுத்த நிமிடமே நோய் நீங்கப்பெற்றார். மரணத்தருவாயில் இருந்த தன் மகளை காப்பாற்றிய லீக்கே, தன் மகளைத் திருமணம் செய்து வைத்து நாட்டின் இளவரசனாக்கினார்.

இளவரசனாகிய லீ, அனைத்து ஏழை எளியவர்களும் பயன் பெறும்படியாக நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் நாட்டை ஆண்டார்.

ஏழை எளியவர்களிடம் இரக்கமும், பாசமும், கருணையும் காட்டினால் வாழ்க்கையில் யாரும் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதுதான் இந்த கதையின் நீதி.

இந்தக் கதையை எழுதியது யாராக இருக்கும் என்பதுதான் இந்த கட்டுரையின் விசேஷமே.

மதுரை, டிவிஎஸ் லட்சுமி பள்ளியைச் சேர்ந்த மாணவி, வித்யமீனாட்சி எழுதிய கதை இது.

மோகன்ராஜா - ரேணுகா பரமேஸ்வரி தம்பதியினர் தங்களது வாசிப்பு பழக்கத்தை தங்களின் மகளான வித்யமீனாட்சிக்கு, குழந்தை பருவத்தில் இருந்தே ஏற்படுத்தியிருந்தனர். இதனால், பொம்மை கேட்கும் வயதில் கூட வித்யா புத்தகங்களையே விரும்பி படிப்பார் .

ஒரு கட்டத்தில் கதை, பாட்டு போன்றவைகளை படித்துவிட்டு, தானும் இது போல எழுதப்போவதாக சொன்னவர் சொல்லியபடியே எழுதிவிட்டார். பெற்றோர் தட்டிக்கொடுத்தனர்.

உற்சாகம் அடைந்த வித்யா, இரண்டாவது முடிப்பதற்குள், அதாவது, ஏழு வயது நிறைவதற்குள் ஆறு கதைகள் எழுதிவிட்டார். இந்த கதைகளை தொகுத்து ஒரு சிறு புத்தகமாக போட்டு வித்ய மீனாட்சியின், எட்டாவது பிறந்த நாளுக்கு வந்த குழந்தைகளிடம் பெற்றோர் பரிசாக வழங்க, சிறுகதை புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு.

இதே போல மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது படிக்கும் போது எழுதிய கதைகளை தொகுத்து, புத்தகம் போட்ட வகையில் இதுவரை ஆறு புத்தகங்கள் வந்துவிட்டன. வித்யாவின் புத்தகங்கள் இப்போது அக்கம் பக்கத்தார், உற்றார், உறவினர், சக மாணவ, மாணவியர், ஆசிரியைகள் என்று பலரிடமும் பரவலான வரவேற்பை பெற்றுவிட்டது.

வித்யாவின் அடுத்த புத்தக தொகுப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போது, எட்டாவது படிக்கிறார்.

தமிழில் ஒரு சில கதைகள், பாடல்கள் இருந்தாலும் பெரும்பாலான கதைகளும், கவிதைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றியும் ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

'சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. அவர் வரைந்த ஒவியம்தான் எங்கள் வீட்டு சுவரை அலங்கரிக்கிறது. படிப்பில் எப்போதுமே முதலிடம்தான். ஆகவே, படிப்பிற்கு இடையூறு இல்லாமல் இவர் அவ்வப்போது கதை, கவிதை எழுதுவது எங்களுக்கு பெருமையாகவே இருக்கிறது, என்றனர் பெற்றோர். இவரது கதைகளை சுவாரஸ்யமான புத்தகமாக தொகுப்பதில், வித்யாவின் அண்ணன் சந்தோஷ் ஹரிகரனுக்கும் பங்கு அதிகம்.

'எனக்கு சின்ன வயதில் இருந்தே வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் தினமலர் நாளிதழ்தான். தினமும் காலையில், சத்தம்போட்டு படிக்கச் சொல்வார் அப்பா. எங்கே நிறுத்தி, நிதானமாக படிக்கணும்னு சொல்லிக்கொடுத்ததே அவர்தான். இப்படி நான் படிப்பதை கேள்விப்பட்டு தினமும் பள்ளியில் காலை கூட்டத்தில் இன்றைய தகவல்கள் என்று நான் தினமலர் நாளிதழில் படித்ததை வாசிக்க கூறினர்.

இப்படி தினமலரில் ஆரம்பித்த வாசிக்கும் பழக்கம் தீவிரமாகி நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அதே போல நாம கற்பனையாக மனதில் நினைக்கிறதுக்கு வார்த்தை வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்னு நினைத்து, கதையாக எழுதினேன். படித்தவர்கள் தந்த ஊக்கம் காரணமாக சில கதைகள், பாடல்கள் என, தொடர்ந்து எழுதி வருகிறேன். வரவேற்பை பொறுத்து தொடர்ந்து எழுதுவேன்' என்றார்.

வித்யமீனாட்சியை வாழ்த்த நினைப்பவர்கள் அவர்களது பெற்றோர் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேரம் இரவு 7:00 மணியில் இருந்து 8:00 மணிக்குள்ளாக...

தொடர்பு எண்: 90927 06727.






      Dinamalar
      Follow us