தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முள்ளு குத்திடிச்சி...

முள்ளு குத்திடிச்சி...

முள்ளு குத்திடிச்சி...


PUBLISHED ON : ஆக 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் காட்டில், கெட்ட நரி ஒன்று இருந்தது; அதன் குணமறிந்து, விலகி வாழ்ந்தன மற்ற நரிகள்.

அது, தனியாக அலைந்து திரிந்தது; சோர்ந்து போன நிலையில், ஒரு மரத்தடிக்கு வந்தது. போதிய உணவு கிடைக்காததால், பசி மயக்கத்தில் அங்கு படுத்தது.

அப்போது, இலைகள் சலசலத்தன; ஒரு ஆட்டுக்குட்டி, புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன், நரியின் நாவில் எச்சில் ஊறியது.

அது, வஞ்சக எண்ணத்துடன், 'வேகமாக பாய்ந்து பிடிக்க முயன்றால், ஆட்டுக்குட்டி தப்பி ஓடி விடும்; இப்போது இருக்கிற பசி மயக்கத்தில், அதை துரத்தி பிடிக்க முடியாது. எனவே, தந்திரமாக அருகில் அழைத்து, அடித்து உணவாக்க வேண்டும்' என, திட்டமிட்டது.

அதற்காக, சிறு நாடகத்தை அரங்கேற்றிய நரி, வலியால் துடிப்பது போல், அழுது புரண்டது. ஆட்டுக்குட்டி, மிரட்சியுடன் சுற்றிலும் பார்த்தது. நரியைக் கண்டதும், அதன் உடல் நடுங்கியது. அங்கிருந்து தப்பி ஓட நினைத்தது.

அப்போது, 'யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்...' என, நரி கதறியது. அதை கேட்டதும், ஆட்டுக் குட்டியின் மனம் இளகியது. ஆபத்தில் சிக்கியிருப்பதாக எண்ணி, நரிக்கு உதவ முன்வந்தது.

எனினும், நரியின் கொடூர குணத்தை நினைத்து தயங்கியபடி, 'உனக்கு என்னாச்சு... அருகில் வர பயமாயிருக்கு; உதவாமல் போகவும், மனம் வரவில்லை... ஏதாவது உதவி வேண்டுமானால் கேள்...' என்றது ஆட்டுக்குட்டி.

வஞ்சக எண்ணத்துடன் இருந்த நரி, 'என்னால் நடக்க முடியாது; காலில், முள் குத்தி, சீழ் பிடித்துள்ளது. இறக்கும் தருவாயில் உள்ளேன்...' என்றது.

நரியின் பாசாங்கை புரிந்த கொள்ளாத ஆட்டுக்குட்டி, இரக்கத்துடன் பார்த்தது.

மனதுக்குள் சிரித்த நரி, 'அதோ பார்... அந்த மூலிகைச் செடியை பிடுங்கி கொண்டு வா... அதன் இலைச்சாற்றை, புண்ணில் பிழிந்தால், வலி குறையும்...' என்று பசப்பியது.

இதை நம்பிய ஆட்டுக்குட்டி, செடியை பிடுங்க சென்றது. இது தான் தக்க தருணம் என்று எண்ணிய நரி, ஆட்டுக் குட்டி மீது, பாய எத்தனித்தது.

அந்த நேரம், குட்டியை தேடி வந்த தாய் ஆடு, நிலைமையை உணர்ந்து வேகமாக செயல்பட்டது. வஞ்சக நரி மீது பாய்ந்து, பயங்கரமாக முட்டித் தள்ளியது.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த நரி, ஒரு பாறையில் மோதி, உயிரை விட்டது. குட்டியை காப்பாற்றிய மகிழ்ச்சியில், 'ம்மே... ம்மே...' என, பாடியது தாய் ஆடு.

குட்டீஸ்... கெட்ட நோக்கத்துடன் பழகுவோரின் நட்பை தவிர்க்க வேண்டும். அவர்களின் பேச்சையும், செயலையும் நம்ப கூடாது. நம்பினால், ஆபத்தில் சிக்க வேண்டி வரும் என்பதை, இந்த கதையிலிருந்து புரிஞ்சுக்குங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us