PUBLISHED ON : நவ 04, 2023

பத்தமடை கிராமத்தில் குணசேகரனும், ரவியும் வசித்தனர். பள்ளியில், 5ம் வகுப்பில், ஒரே பிரிவில் படித்து வந்தனர். படிப்பில் ஆர்வம் காட்டாமல், பகட்டாக திரிவதில் குறியாக இருந்தனர். இதனால் பொறாமை குணம் வளர்ந்தது. இருவரும் எதிரிகளாயினர்.
குணசேகரன் புதிய உடை அணிந்தால், ரவிக்கு தாங்காது. அதை விட மதிப்புள்ள பகட்டான உடையை வாங்கித்தர தந்தையை நச்சரிப்பான். குணசேகரனும் இதே போன்ற துர்குணங்கள் உடையவன்.
இது பெரும் பகையை வளர்த்தது. வகுப்பறையிலும் மோதல் தொடர்ந்தது. ஆசிரியர்கள் எச்சரித்தும், இருவரும் மாறவில்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவில்லை. ஆத்திரத்தில் அறிவிழந்து எப்போதும் புறம்பேசி திரிந்தனர்.
அன்று -
தமிழ் பாட வகுப்பில், 'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்...' என்ற குறளை விளக்கி அழகிய கதை ஒன்றை கூறினார் ஆசிரியர்.
இறுதியில், 'கோபம் என்ற அரக்கனை கட்டுப்படுத்தப் பழகினால் சிறப்புடன் வாழலாம். தவறினால் நம்மையே அழித்து விடும்...' என பாடம் புகட்டினார்.
அந்த அறிவுரையை குணசேகரனும், ரவியும் மனதில் பதிக்கவில்லை.
கோபத்தில் முறுக்கியபடி திரிந்ததால் இரு குடும்பங்களிலும் எதிரொலித்தது. பகைமை குடிகொண்டது. நிம்மதி குலைந்தது. அன்று பள்ளியில் இருந்து திரும்பிய போது வாக்குவாதம் முற்றி தெருவில் சண்டை போட்டனர்.
அவ்வழியே வந்த ரவியின் தந்தை, இருவரையும் அதட்டி விலக்கி விட்டார். கோபத்தில் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான் குணசேகரன். இதனால் சற்று கடுமையாகவே அதட்டினார் ரவியின் தந்தை.
அழுதவாறே வீடு சென்ற குணசேகரன், தந்தையிடம் அது பற்றி தெரிவித்தான். அவரது கோபத்தை துாண்டும் விதமாக, ''உங்களுக்கு மிகவும் கெட்ட குணம் என திட்டுகிறான் ரவி... அவன் தந்தையும் அதை துாண்டி விடுகிறார்...'' என்று சிண்டு முடிந்தான்.
முன் கோபம் மிக்க அவர் வெகுண்டெழுந்தார். உடனே ரவி வீட்டுக்கு விரைந்தார்; வாய்க்கு வந்தபடி பேசியதால் சண்டை மூண்டது. கைகலப்பு ஏற்பட்டது. தந்தையர் இருவரும் படுகாயம் அடைந்தனர். குற்றம் சாட்டி இருவரையும் கைது செய்தது காவல்துறை.
இரண்டு குடும்பங்களும் துன்பத்தில் உழன்றன. அதன்பின் தான் ரவியும், குணசேகரனும் பாடம் கற்றனர். தவறை உணர்ந்தனர். பகையை மறந்து நட்பு பாராட்டினர். நற்பண்புகளை வளர்த்து படிப்பில் முன்னேறினர். குடும்பங்களில் அமைதி ஏற்பட்டது.
பட்டூஸ்... கோபத்தை வெல்ல பழகினால், விட்டுக்கொடுக்கும் பண்பு வளரும். வாழ்வில் மேன்மை அடையலாம்!
- டி.சந்திரமோகன்
