PUBLISHED ON : ஆக 05, 2023

மதுரை, காமராஜர் சாலை, சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 10ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் சி.வி.ஆர்.வித்யாசாகர். ஆங்கிலம், வரலாறு மற்றும் புவியியல் பாடமும் நடத்துவார். பொது அறிவு குறித்த தகவல், செய்திகளை சுவாரசியமாக சொல்வார்.
ஒருநாள் வகுப்பு துவங்கிய பின் நொண்டியபடி வந்தான் ஒருவன். சிறு விபத்தில் காயம்பட்டிருந்த விபரத்தை விசாரித்து தெரிந்து கொண்டார் ஆசிரியர்.
பின், 'வாகனங்கள், சாலையில் இடது மற்றும் வலதுபுறமாக எதிரெதிர் திசைகளில் வரும். சாலை ஓரம் வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் நிலையில் தான் நடக்க வேண்டும். வாகனங்கள் செல்லும் திசையிலே நடந்தால், அவை பின்னால் வந்து மோதி விட வாய்ப்பு அதிகம்...' என்று தெளிவாக விளக்கினார். அது, பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது.
எனக்கு, 80 வயதாகிறது; பஸ், ரயில், விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறேன். வகுப்பறையில் பெற்றதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கடைபிடிக்கிறேன்.
என் வாடிக்கையாளர்களிடம், அந்த ஆசிரியர் விளக்கிய சாலை விதிகளை, அவர் நினைவாக சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
- எல்.என்.ஆர்.சந்திரசேகரன், மதுரை.
தொடர்புக்கு: 93608 13080
