
நான் ஹாஸ்டலில் தங்கி, பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம். மாணவர்கள் யாரும் கையில் பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. வகுப்பாசிரியரிடம் கொடுத்து வைக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் கூட்டுறவு ஸ்டோர், ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம், அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பணம் வாங்கி, வேண்டிய பொருட்களை மாணவர்கள் வாங்குவர்.
எங்கள் வகுப்பாசிரியர், மாதக் கடைசியில் மாணவர்களின் பணத்தை செலவழித்து விடுவார். ஒரு சில மாணவர்களுக்கு மட்டும், கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்து வரும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் கேட்கும்படி சைகையில் சொல்வார்.
இறுதியில், வகுப்பறையில் உள்ள போர்டில், 'இன்று நான் மவுன விரதம் இருப்பதால், மாணவர்கள் யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது!' என்று எழுதிப் போட்டு விடுவார். அடுத்தடுத்து பணம் கேட்டு வரும் மாணவர்களை கையைப் பிடித்து இழுத்து வந்து போர்டில் எழுதி இருப்பதைக் காட்டுவார். மாணவர்கள், வேண்டுமென்றே வகுப்பாசிரியரிடம் செல்வதும், அவர்,' போர்டைக் காண்பிப்பதும் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
- எஸ்.லிங்கேஷ், விஸ்வநாதபுரம்.

