PUBLISHED ON : ஜூலை 24, 2015

சென்றவாரம்: மந்திராஜாவிடம் அடிபட்ட தளபதியும், குணாளனும் ராஜவைத்தியரிடம் சிகிச்சை எடுத்தனர். அந்த சமயத்தில் இரு சிறுவர்களும் மன்னரை சந்திக்க அரண்மனைக்கு சென்றவனர். இனி-
''என் அன்பார்ந்த நாட்டு மக்களே! இப்போது உங்களுக்கு பல வித்தைகள் காட்டிய மலை காட்டுவாசிகளை நாம் பாராட்ட வேண்டாமா? அவர்களின் அசகாய செயலுக்கு நாம் பரிசு கொடுக்க வேண்டாமா? மேலும், இந்த குரங்குக்கும் அந்த அக்கிராமக்கார மனிதனுக்கும் ஓய்வு தேவை அல்லவா? அப்போதுதானே நாளை அவர்கள் தங்கள் வேடிக்கையை செய்து உங்களை மகிழ்விக்க முடியும். அதனால் இப்போது நான் என் தனிப் பட்ட விருந்தினர்களாக ஏற்று என் மாளிகைக்கு அழைத்து போகிறேன். நீங்கள் அவர்களை மகிழ்விக்கும் முகமாக உற்சாகமாக கரகோஷம் இட்டு என்னுடன் அனுப்பி வையுங்கள்,'' என்றதும் சிறுவர்களும், மக்களும் பெரும் கரகோஷமிட்டனர்.
''நீங்கள் இப்போது கலைந்து செல்லலாம். இது மன்னர் உத்தரவு!'' என்றும் கூறி மற்றவர்களை அழைத்துக்கொண்டு மன்னர் தன் மாளிகைக்கு சென்றார். மக்களும் கலைந்து சென்றனர்.
இங்கே தளபதி, மற்ற வீரர்களை தனிமை யில் இருக்கச் செய்துவிட்டு குணாளனுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அப்போது ஒரு வீரன் ஓடிவந்தான்.
''தளபதியாரே அவசரம் செய்தி!''
''ஏய் நீ மன்னரின் மெய்காப்பாளன் தானே. நான் உனக்கு இட்ட கட்டளை என்ன? அதை விடுத்து இங்கு ஏன் வந்தாய்; ஏதோ ஒரு சிறுவன் இப்போது மன்னரை சந்திக்க சென்றுள்ளான். இந்த சமயத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன? நீ வந்த காரணம் சரியில்லை என்றால் இங்கேயே உன் தலை கொய்யப்படும்,'' என்றான் தளபதி.
''தளபதியாரே. நானும் அந்த சிறுவன் விஷயமாகத்தான் வந்தேன். அவன் மன்னரின் மனதை மாற்றி விட்டான். அவன் மன்னரிடம் கூற, கூற அவர் முகம் கோபமாக மாறியதை நானே கண்டேன். அதன் விளைவு உடனே பாதாள சிறையில் இருந்து அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டு அதை சிறை தலைமை காவலரிடம் கூறுமாறு என்னிடம் கட்டளை யிட்டார். நான் தான் இனி உங்களுக்கு ஆபத்து நேருமே என்று கருதி உத்தரவை பாதாள சிறை தலைமை காவலனிடம் கூறாமல் சுரங்க பாதை வழியாக தங்களை நேரில் சந்திக்க வந்து விட்டேன். மன்னிக்க வேண்டும்!'' என்றான்.
''மன்னிக்க ஒன்றும் இல்லை. நல்லதுதான் செய்திருக்கிறாய். இப்போது அமைச்சர் விடு விக்கப்பட்டால் சந்தேகம் முழுவதும் என் மீது விழுந்து விடும். ம்...!'' பெருமூச்சு விட்டான் தளபதி.
''விழுந்து விடும் இல்லை. விழுந்து விட்டது. அதனால் தான் ஒரு சிறுவன் பேச்சை நம்பி அமைச்சரை விடுவிக்க உத்தரவு வந்திருக்கிறது. இனி அடுத்த உத்தரவு தளபதி வந்து பார்க்க மன்னர் உத்தரவு என்றுதான் இருக்கும்,'' என்றான் குணாளன்.
''வீரனே உன் சேவை இப்போது எனக்கு மிகவும் தேவை. நீ உடனே அரண்மனை செல். ஆனால், அமைச்சரை விடுவிக்கும் உத்தரவை சிறை தலைவனிடம் கூறிவிடாதே. இன்னும் ஒரு நாழியில் சில விஷயங்கள் நடைபெற இருக்கின்றன. அப்போது உன் உதவியும் எனக்கு தேவைப்படும்!'' என்ற தளபதி அவனை சுரங்க பாதை வழியாக வேகமாக அனுப்பி வைத்தான்.
தளபதி ஒரு பெரும் முடிவை எடுத்தவராக குணாளனை அழைத்து அவனிடம் ஒரு தகவலை ரகசியமாக கூறி கிழக்கு கோட்டை வாயில் செல்லும் சுரங்கபாதை வழியாக அவனை வேகமாக அனுப்பினார்.
''சின்னையா நீ மேற்கு கோட்டை காவல் தலைவனிடம் சென்று இந்த கத்தியை கொடு,'' என்றவர் தங்கத்தால் ஆன ஒரு சிறு கத்தியை கொடுக்க அவன் அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டான். பின் அவனை மேற்கு கோட்டை வாயிலுக்கு செல்லும் சுரங்க பாதை வழியாக அனுப்பி வைத்தார்.
அடுத்து மற்ற மேலை நாட்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு மன்னரின் அந்தரங்க மண்டபம் செல்லும் சுரங்க பாதை வழியாக வேக வேகமாக வெளியேறினார்.
மன்னர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
'என்ன இது பாதாள சிறைத்தலைவனிடம் அமைச்சரை விடுதலை செய்யும் என் உத்த ரவை கூறிவிட்டு இந்த மெய்க்காப்பாளனே வந்து விட்டானே. ஆனால், ஏன் இன்னும் அமைச்சர் விடுதலையாகி வரவில்லை. ஒரு வேளை, என் உத்தரவில் சந்தேகமுற்று சிறைத் தலைவனே வருகிறானோ. இல்லை நான் செய்த பெரும் தவறிலும் பாவத்திலும் மனம் உடைந்து வெளியே வர அமைச்சர் மறுக் கிறாரா? என்ன செய்யலாம்? ஆம். இதுதான் சரியான மரபு. என் தவறுக்கு நானே பிராயச் சித்தம் செய்ய வேண்டும். நானே அந்த பாதாள சிறை சென்று நம் தேசப்பற்று மிகுந்த மதிப்பு மிகு அமைச்சரை வரவேற்று அழைத்து வருகிறேன்' என்று முடிவெடுத்தவர் அருகில் இருந்த சின்னதம்பியிடமும் பெரியவரிடமும் கூறி விடை பெற்றார்.
பெரியவர் தடுத்தார்.
''விக்கிரமசிங்கா நீ அங்கு செல்ல வேண்டாம். உனக்கு ஆபத்து காத்திருக்கிறது!''
மன்னன் வெகுண்டான்.
பெரியவரே! நான் இந்த சிறுவனுக்கு மதிப் பளித்தேன் என்றால் அவன் கூற்றில் உண்மை இருந்தது. ஆனால், தாங்கள் யார் என்றே நான் இன்னமும் விசாரிக்கவில்லை. ஒரு மன்னரிடம் தாங்கள் இவ்வளவு உரிமை எடுத்து எனக்கே ஆணையிடுவதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. உங்களை பிறகு வந்து கவனித்துக் கொள்கிறேன்,'' மன்னர் கோபத்துடன் பேசி விட்டு சென்றார்.
பெரியவர் கடும் சினத்துடன், ''நீ செய்வது தவறு! நீ செய்வது மாபெரும் தவறு!'' என்று உரக்க குரல் கொடுத்தார்.
சிறுவர்களும் அச்சம் அடைந்தனர். மந்தி ராஜா அமைதியாக அமர்ந்திருந்தது. என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத நிலையில் பெரியவர் ஒரு முடிவெடுத்தார்.
பெரியவர் கோபமாக இருப்பதை அறிந்த சின்னதம்பியும், வாண்டுவும் அவரை கைகூப்பியபடி அவர் கட்டளைக்காக காத்து நின்றனர்.
''ஏய் தம்பிகளா! எப்படியோ நாம் வந்த காரியம் நிறைவேறிவிட்டது. நாட்டுக்கு வர இருக்கும் கேட்டையும், அதற்கு முன் அமைச்சரை பாதாள சிறையில் அடைத்தது தவறு என்பதை மன்னர் உணரும்படி செய்து விட்டோம். நம் பணி முடிந்தது. இப்போது மந்திராஜாவை பார்த்தார்.
''நீ உடனே இந்த சிறுவர்களை தோளில் சுமந்து எப்படியாவது என் மலை இருப்பிடத் துக்கு சென்று விடு. நான் எப்படியும் வந்து சேருகிறேன். இந்த மலை காட்டு உளவாளி எப்படியோ தப்பித்து போகட்டும். ம். உடனே செல்!''
பெரியவரின் கட்டளைக்கு மந்திராஜாவே சற்று அச்சமும், கலக்கமும் அடைந்தது. உடனே இரு சிறுவர்களை தோளில் சுமந்தவாறு வழியில் இருந்த காவலர்களை எல்லாம் அசுர பலத்தால் தள்ளிவிட்டு அரண்மனை வாயிற் புரம் வந்து கோட்டை சுவர் ஏறி தாவி தப்பியது.
இப்போது நான்கு கோட்டை இரும்பு கதவுகளும் 'மடார் மடார்' என்ற பெரும் சத்தத் துடன் இழுத்து மூடப்பட்டன. வெளியேயும், உள்ளேயும் இருந்த மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். நான்கு கோட்டை வாயிலில் தயாராக இருந்த வீரர்களை அந்நந்த வாயில் காக்கும் வீரர்களின் தலைவர்கள் வழிநடத்தி அரண்மனையை நோக்கி செல்லும் சுரங்க பாதையில் நாலு திசைகளிலும் பிரவேசித்தனர்.
தளபதி மேலை நாட்டு வீரர்களுடன் மன்னரின் மாளிகைக்கு வந்தான்.
- தொடரும்...
- பூரணி
