PUBLISHED ON : ஜன 27, 2017

ஒரு காட்டில், நரியும், கழுதையும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன.
நாள் தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரை தேட வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் அந்த ஆபத்தை விலக்க போராடுவதென்றும் உறுதி செய்து கொண்டனர்.
ஒருநாள் -
தன் நண்பனை இரை தேட அழைத்து செல்வதற்காக சென்றது நரி.
சிறிது தூரம் சென்றதும், அந்த பக்கமாக வந்த சிங்கம் நரியை பிடித்தது.
தன் உயிருக்கு ஆபத்து வந்து விட்டதை கண்டு நடுநடுங்கியது நரி. எப்படியாவது உயிர் பிழைத்து ஓட வழி உண்டா என யோசித்தது.
அதற்கு ஒரே வழி தான் புலப்பட்டது. தன் நண்பன் கழுதையை காட்டி கொடுத்து, தப்பி விடலாம் என்று எண்ணியது.
உடனே சிங்கத்தைப் பார்த்து, “மன்னாதி மன்னா... என்னை கொன்று தின்றால் உங்கள் பசி அடங்கிவிட போவதில்லை. என் நண்பன் கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை தந்திரமாக பிடித்து தருகிறேன். என்னை விட்டுவிட்டு கழுதையை உணவாக கொள்ளுங்கள்!” என வேண்டி கொண்டது.
அதற்கு ஒப்பு கொண்டது சிங்கம்.
சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்க சொல்லி விட்டு, கழுதையிடம் சென்றது நரி.
“நண்பனே! இரை தேட செல்லலாம் வா!” என்று வஞ்சகமாக பேசி அழைத்து சென்று கழுதையை ஒரு பள்ளத்தில் விழுமாறு செய்தது நரி.
பின் சிங்கத்திடம், “மன்னரே! கழுதையை தந்திரமாக ஒரு பள்ளத்தில் விழுமாறு செய்துவிட்டேன். நீங்கள் இனி கழுதையை சிரமமில்லாமல் கொன்று சாப்பிடலாம்!” என கூறியது நரி.
“நரியே! இப்போது எனக்கு பசி அதிகமாக இல்லை. அதனால், இன்று உன்னை கொன்று தின்று பசியாறுகிறேன். கழுதை பள்ளத்திலேயே கிடக்கட்டும். நாளை அதை கொன்று பசியாறுகிறேன்... அதற்கு முன், உன்னை போன்ற நம்பிக்கை துரோகிகளை உயிருடன் விட்டு வைப்பது தவறு... அதனால் உன்னை முதலில் முடிச்சிடுறேன்,” என்றபடி, 'லபக்'கென பாய்ந்து அதை கொன்று தின்றது.
'தான் கெட்டதை விதைத்தோம். அதையே அறுக்கிறோம் ... குட்டீஸ் நீங்களாவது நல்லவர்களாக வாழுங்க...' என்று முணுமுணுத்தபடியே உயிரை விட்டது நரி.
