PUBLISHED ON : ஜூலை 10, 2015

சென்றவாரம்: அமைச்சரின் உளவாளி கைது செய்த, மெய்யன்பன் உள்ளிட்ட எட்டு மேலை நாட்டு வீரர்களை, தளபதி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இனி-
'எசமான் என்னை மன்னிச்சிடுங்க!'' என்று வேகமாக அழ ஆரம்பித்தான்.
'ஏன் அழுகிறாய்! என்ன தவறு செய்தாய். உடனே கூறு?''
'நான் கூறுகிறேன்...'' என்று பலத்த குரல் கேட்டது.
தளபதியும், சின்னையனும் திரும்பிப் பார்த்தனர்.
'ஆம் தளபதியாரே! நடந்த மாபெரும் தவறுகளுக்கு, இந்த சின்னையனே பொறுப்பு!'' என்று உரக்க கூறியபடி வேகமாக வந்தான் குணாளன்.
'குணாளா என்ன கூறுகிறாய்? என்ன நடந்தது?''
'தளபதி அவர்களே! இப்போது நாம் ஆபத்தில் இருக்கிறோம். காரணம், இரு பெரும் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று, மேலை நாட்டு கப்பலில் வந்த ராஜ தந்திரியும், குறும்படை தலைவனும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் வந்த ஒரு கப்பல் அய்யனார் கட்டத்தில் எரிக்கப்பட்டு விட்டது. அடுத்த கப்பலில் சென்றவர்கள் நமக்கு எதிரியாக இருக்கும் அமைச்சரின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேர்தான் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களில் ஒருவனின் மனைவியை விசாரித்து விவரம் அறிய இருந்த போது, ஒரு சிறுவன் சாமர்த்தியமாக பேசி அவளை மீட்டு சென்று விட்டான்.
'இதில் முழுக்க முழுக்க கோட்டை விட்டவன் இந்த சின்னையன் தான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், என் பெயரையும், உங்களையும் சம்பந்தப்படுத்தியதோடு அல்லாமல் மேலை நாட்டு ராஜ தந்திரியையும் சம்பந்தப்படுத்தி ஏமாற்றி இருக்கிறான் அந்த பொடியன்!''
'என்ன ஒரு பொடியனிடம் ஏமாந்து நமக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டானா இந்த சின்னையன். நீ இருப்பதை விட இறப்பதே மேல்!'' என்றவன் தன் வாளை எடுத்து வீச இருந்த போது, வாசலில் ஒரே ஆரவாரம்.
தளபதி திகைத்தபடி வேகமாக கை தட்ட, உடனே ஒரு வீரன் ஓடி வந்தான்.
தளபதி அவர்களே! ஒரு மனிதநாட்டி விளையாட்டு காட்டுகிறான். அதனால் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மகிழ்ந்து கை கொட்டி சிரிக்கின்றனர் அதுதான் இந்த ஆரவாரத்துக்கு காரணம்!''
'ஏ மடையா. நீ என்ன சொல்கிறாய்? மனித நாட்டியா? குரங்காட்டி என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். என்ன புது கதை விடுகிறாய்?''
'இல்லை தளபதியாரே. இது புது வித்தையாகத்தான் இருக்கிறது. ஆம் நான் சொல்வது உண்மைதான். குரங்காட்டி ஒரு குரங்கை வைத்து வேடிக்கை காட்டுவான். ஆனால், இந்த மனித நாட்டியில், ஒரு குரங்கு மனிதனை வைத்து வேடிக்கை காட்டுகிறது!''
'என்ன? அப்படியும் நடக்குமா? சரி நானே வந்து பார்க்கிறேன்!'' என்றவன், குணாளனையும் மற்ற வீரர்களையும் அழைத்தவாறு வாயிலுக்கு வந்தான்.
இலைதழைகளை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு ஒருவன் இருகைகளையும் கால்களையும் தரையில் ஊன்றி நாலுகால் பிராணிபோல் நிற்க, ஒரு ஆஜானுபாகுவான ஆறடி குரங்கு நல்ல ராஜா சொக்காய் தலைப் பாகை அணிந்து கையில் கைத்தடியுடன் இருக்க, அவர்களை சுற்றி இரு சிறுவர்கள் தன் உடலை முழுவதும் இலைகளால் மறைத்துக் கொண்டு இருக்க, இவர்களை வழிநடத்தும் முகமாக ஒரு வயதான மனிதர் இருக்க, அந்த மனிதநாட்டியின் வேடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தளபதியும், குணாளனும் அதை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
''சின்னவங்களே, பெரிவங்களே இங்கே நிக்கறாரே இவர்தான் மந்திகள் ராஜா. ஆம் காட்டிலும், மலையிலும் வாழும் ராஜமந்தியார். இவர் காட்டில் நேர்மையும், தருமமுமே சத்தியமானவை. யாராவது அக்கிரமம் செய்தால் அங்கு என்ன தண்டனை தெரியுமா?'' ஒரு சிறுவன் சொல்லிக்கொண்டே கூடியிருந்த சிறுவர்களை பார்த்தான்.
''என்ன தெரியாது. சொல்லுங்க?'' என்றது கூடியிருந்த சிறுவர் பட்டாளம். அதில் நிறைய பெரியவர்களும் இருந்தனர்.
''இதோ பாருங்கள்'' என்ற அந்த சிறுவன், மந்தி ராஜா உங்கள் காட்டில் அக்கிரமம் செய்பவனுக்கு என்ன தண்டனை என்பதை இந்த சிறுவர்களிடம் கூறுங்கள்!'' என்று மந்தி ராஜாவை பார்த்தான்.
நாலுகால் பிராணியை போல் இருந்த மனிதனை தூக்கி நிறுத்தியது மந்தி ராஜா. பின் தன் கோலை எடுத்தது. ஓங்கி அவனை அடிக்க கையை ஓங்கவும், பயந்து போன அவன், 'இதுதான் தண்டனை இதான் தண்டனை'' என்று கூறி நூறு குட்டிக்கரணம் போட்டான்.
சிறுவர்கள் குரங்கின் சாமர்த்தியத்தையும், அந்த மனிதன் குட்டிக்கரணம் போடுவதையும் பார்த்து கைகொட்டி சிரித்தனர்.
'சிறுவர்களே! பெரியோர்களே! நேர்மைக்கு பெயர் போன அந்த காட்டு ராஜாங்கத்தில் துரோகம் செய்பவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?'' என்று மற்றொரு பொடியன் கேட்கவும், மந்தி ராஜா கையை தட்டியபடி தன்னிடம் இருந்த பெரிய சவுக்கு மரத்தை எடுத்து அதை தூக்கி நிறுத்தியது.
பின் ம்...ம்... என்று பெரும் குரல் கொடுத்து அந்த மனிதனை ஒரு அறை விட்டு தூக்கி நிறுத்தவும், ''அய்யோ அடிக்காதே! செய்யறேன், செய்து காட்டுகிறேன்!'' என்றபடி வேகமாக அந்த சவுக்கு மரத்தில் குரங்கு போல் தாவி உச்சிவரை ஏறினான்.
சிறுவர்கள் கைதட்டிக்கொண்டே இருந்தனர். இப்போது அவன் மரத்தின் உச்சிக்கு சென்று எல்லாருக்கும் கும்பிடு போட்டான். அப்போது தளபதியும், குணாளனும் இருக்க கண்டான். உடனே, ஓவென அழத்தொடங்கினான்.
பின் சைகை காட்டும் முகமாக வலது கை கட்டை விரலை கவிழ்த்து தளபதியும் குணாளனும் பார்க்கும் படி செய்து கொண்டே இருந்தான்.
இதை இரு சிறுவர்களும் கவனித்து விட்டனர். உடனே பெரியவரிடம் ரகசியமாக கூறினர். அவர் ராஜமந்தியிடம் ஏதோ கூறினர். உடனே அது அந்த நீண்ட சவுக்கு கம்பை வேகமாக சுழற்றியது. அவன், ''அய்யோ அய்யய்யோ!'' என்று கத்தியபடி சுழல ஆரம்பித்தான்.
அது வேகமாக சுழலவும், அவன் அதை இறுக்க பிடித்துக்கொண்டு சுழலவும் அந்த காட்சியை பார்த்து சிறுவர்கள் கைதட்டி மகிழவும் குணாளன் ஒரு அதிர்ச்சியுடன் தளபதியை பார்த்தான்.
'என்ன குணாளா? இது வேடிக்கையாக இல்லை!''
'இல்லை தளபதியாரே. விஷயம் விபரீதமாகிக்கொண்டிருக்கிறது!''
'என்ன சொல்கிறாய்?''
'தளபதியாரே அந்த சவுக்கு கம்பின் உச்சாணியில் சென்றவன் நம்மை பார்த்து சைகை செய்தான் அல்லவா?''
'ஆம்!''
'அந்த சைகை நம்மை பொறுத்த மட்டில் பெரும் சிக்கலில் மாட்டி இருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள் என்பதாக அர்த்தம்!''
'ஆனால், அவன் அந்த விளையாட்டு கூட்டத்தை சேர்ந்தவன். அவனுக்கு நம் சைகை தெரிய என்ன நியாயம் இருக்கிறது. அதனால் நீ அவனை பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம்!''
அப்போது மீண்டும் சிறுவன் பேசினான்.
'இதுவரை சிரித்த சிறுவர்களே. இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல. மாறாக சிந்திக்க வேண்டிய விஷயம். காட்டிலேயே ஒரு ஒழுங்கு வேண்டி இந்த தண்டனைகளை மந்தி ராஜா கொடுக்கும் போது ஒரு நாட்டில் தவறுகள் நடக்க இடம் கொடுக்கலாமா?
'வஞ்சமும், சூழ்ச்சியும் கெடுமதியும் கொண்டு ஒருவன் தவறு செய்தால் ஒரு நாட்டு மன்னன் என்ன தண்டனை கொடுக்க வேண்டும்?''
அனைத்து சிறுவர்களும், ''அவனை அடித்து நொறுக்க வேண்டும்!'' என்று ஆவேசமாக குரல் கொடுத்தனர்.
ஆனால், நம் மந்தி ராஜா என்ன தண்டனை கொடுக்க இருக்கிறார் என்று நீங்கள் பாருங்களேன் என்றதும், அதிர்ச்சி அடைந்த குணாளன், 'தளபதியாரே யார் அந்த குரலுக்கு சொந்தக்காரன் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்,'' என்று அச்சம் கலந்த ஆவேசத்துடன் கூறிய அதே வேளையில், ராஜமந்தி தான் பிடித்திருந்த அந்த பெரும் சவுக்கு கம்பை சரியாக கோணம் பார்த்து கையை வேகமாக விடவும், அது 'மடால்' என்ற சத்தத்துடன் தளபதியின் மண்டையில் விழுந்தது.
'அய்யோ!'' என்று பெறும் குரல் கொடுத்து தலையை பிடித்தபடி கீழே விழுந்தான் தளபதி.
- தொடரும்...
- பூரணி
