PUBLISHED ON : ஜூலை 03, 2015

சென்றவாரம்: தளபதியின் ஒற்றர்களை ஏமாற்றி காட்டுக்கு தப்பிச் சென்ற சின்னதம்பி, அவன்தாய் மீனாட்சி, வாண்டுவை பிடிக்கச் சென்ற குணாளனின் ஒற்றர்கள் பிடிக்க முடியாமல் திரும்பினர். மன்னரை சந்திக்க அரண்மனை வந்தார் தளபதி. இனி-
''என்ன சொல்கிறீர்கள் தளபதி. உங்கள் உளவுத்துறை சரியாகத்தான் வேலை செய்கிறதா? இல்லை அந்த மேலை நாட்டான் வந்து சென்ற கப்பலைப்போல் இந்த விஷயமும் தவறாகத்தான் இருக்குமா?''
''மன்னா! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த மேலைநாட்டுக்காரன் கப்பல் பற்றி நானா தவறான தகவலை தந்தேன்? குதர்க்கத்துடன் பார்த்தான் .
''ஆம். உங்கள் செய்தி முற்றிலும் தவறு. இரண்டு கப்பல்களும் சென்று விட்டதாக தாங்கள் கூறினீர்கள் அல்லவா?''
''ஆம் மன்னா!''
''அதில் ஒன்றுதான் சென்றிருக்கிறது. அதைத்தான் உமது உளவு வீரனும் பார்த்திருக்கிறான். ஆனால், அனுமானமாகத்தான் அடுத்த கப்பலும் சென்றுவிட்டது என்று தாங்கள் தவறான தகவலை தந்து விட்டீர்கள். இப்போது அடுத்த கப்பல் எங்கே. அது என்ன ஆனது? அந்த கப்பலால் நமக்கு என்ன ஆபத்து நேர இருக்கிறது? உடனே, எனக்கு அது தெரிந்தாக வேண்டும்,'' என்று மன்னர் சற்று கோபமாகவே பேசினார்.
''மன்னா இப்போது எனக்கு முழு விவரமும் விளங்கி விட்டது!''
''என்ன அந்த விவரம்?''
''இந்த நாட்டுத்துரோகிதான் தன் செல்வாக்கை பயன்படுத்தி அந்த கப்பலையும் அதில் இருந்தவர்களையும் காப்பாற்றி இருக்க வேண்டும்!''
''என்ன உளறுகிறீர்கள்?''
''நான் உளறவில்லை. இதோ அந்த அத்தாட்சி!''என்றபடி தளபதி பொய்யான கோபத்துடன், அமைச்சரின் ராஜ முத்திரையை மன்னரிடம் கொடுத்தான்.
''மன்னா இந்த முத்திரையை நம் அரண்மனை சேவகனிடம் இருந்தோ, இல்லை யாரோ ஒரு உளவாளியிடம் இருந்தோ நான் கைப்பற்றவில்லை. மாறாக, ஒரு சிறுவனிடம் இருந்துதான். அதுவும் அந்த சிறுவன் யார் தெரியுமா? அமைச்சருக்கு சிகை அலங்காரம் செய்ய வந்திருப்பதாக கூறி ஒரு சிறுவன் வந்தானே... அவனிடம் இருந்துதான் இது கைப்பற்றப்பட்டது. அப்படி என்றால் இவர் அவனிடம் சிகை அலங்காரமாவது செய்து கொண்டாரா? இல்லையே. அப்படியேதானே முடி உள்ளது. அப்படி என்றால் அந்த சிறுவர் யார்? அவன் இவருக்கு சிகை அலங்காரம் செய்ய வந்திருப்பதுபோல் நாடகமாட காரணம் என்ன? இவர் அவனுக்கு விலை மதிக்க முடியாத, ஏன் என் முக்கிய உளவாளிக்கே கிடைக்காத இந்த ராஜ முத்திரையை கொடுக்க காரணம் என்ன? மன்னா நான் முழு காரணமும் கண்டுபிடித்து விட்டேன்!'' என்றான் தளபதி.
''என்ன சொல்கிறீர்கள் தளபதி?'' இப்போது மன்னரின் பேச்சில் மரியாதை தெரிந்தது.
''மன்னா மேலை நாட்டான் உதவியுடன் உங்களை ஒழித்து இந்த நாட்டை கைப்பற்ற இந்த துரோகி முடிவு செய்து விட்டான். எனக் கென்னவோ இன்னொரு கப்பலில் வந்தவர்கள் மிகவும் முக்கியமான பதவியில் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களை இவர்தான் பாதுகாத்து வருகிறார். ஏதோ விதத்தில் அந்த சிறுவனின் குடும்பம் இவருடன் இந்த வேலையில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்!'' என்ற தளபதி, ஓரக் கண்ணால் அமைச்சரை பார்த்தான்.
அவர் சிறிதும் சலனமின்றி அமர்ந்திருந்தார்.
''ஏன் தளபதி தாங்கள் அந்த சிறுவனை பிடித்தால் நமக்கு நிறைய விவரம் கிடைக்கும் அல்லவா?''
''நம் துரோகி என்ன அவ்வளவு முட்டாளா? ராஜ முத்திரையை நான் கைப்பற்றியதை அறிந்ததும், அந்த சிறுவனால் இனி ஆபத்து நேரலாம் என்று உணர்ந்து புத்திசாலித்தனமாக அவனை கங்கை பிரவாகத்தில் எறிந்து விட்டார்!''
இதைக்கேட்டதும் அமைச்சர் பதறினார். அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
மன்னர் பெரும் சினமுற்றார்.
''அமைச்சரே நான் உங்களை இதுநாள் வரை முழுவதும் நம்பி இருந்தேன். ஆனால், நீங்கள் எனக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள். ஒரு கப்பல் எறிந்து விட்டதாக தாங்கள் கூறிய போது ஏதோ தளபதிதான் எனக்கு தவறான தகவலை தந்து விட்டார் என்று கோபித்தேன். அப்போது கூட நீங்கள் ராஜ முத்திரையை அந்த சிறுவனிடம் கொடுத்த விவரத்தை என்னிடம் கூறவில்லையே?''
''மன்னா என்னை மன்னித்து விடுங்கள். அது ராஜ ரகசியம்!'' அமைச்சர் பணிவுடன் கூறினார்.
''எது ராஜ ரகசியம். மன்னருக்கு மேல் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது. அப்படி என்றால் நீங்கள் இந்த மன்னனையே நம்ப வில்லையா?'' என்று கோபத்துடன் கேட்டார்.
''ஏன் மன்னா! அப்படி என்றால் நாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, துரோகிகளுக்கு உண்டான தண்டனை நிச்சயம் கொடுக்கப்படும் அல்லவா? என்று தளபதி சமயத்துக்கு ஏற்ப பேசினான்.
''ஆம். அதில் என்ன சந்தேகம்! யாரங்கே என்று இருகைகளையும் கொட்டினார்.
உடனே ஒரு சேவகன் ஓடி வந்தான்.
''ஏ சேவகனே! இந்த ராஜ துரோகியை கடும் இருள் சூழ்ந்த பாதாள சிறையின் அறையில் போட்டு பூட்டு. பவுர்ணமி அன்று இவர் கழு மரம் ஏற்றப்படுவார். இது மன்னர் உத்தரவு!'' கோபத்தில் கர்ஜித்தார் மன்னர்.
தளபதியின் முப்பத்திரண்டு பற்களும் அகல விரிய, அமைச்சர் வருத்தம் தோய்ந்த குரலில், ''எதற்கும் ஒரு விடிவு உண்டு. அப்போது என் குரல் ஒலிக்கும்!'' என்று கூறிவிட்டு வீரனுடன் பாதாள சிறை நோக்கி சென்றார்.
''தளபதி, தக்க சமயத்தில் என்னை இல்லை, இந்த நாட்டையே ஒரு துரோகியிடம் இருந்து காப்பாற்றி விட்டீர்கள். அதற்கு பரிசு இந்தாருங்கள்!'' என்றபடி தன் கழுத்தை அலங்கரித்த வைடூரிய மாலையை கழற்றி தளபதியின் கழுத்தில் அணிவித்து அவரை ஆரத்தழுவினார்.
அப்போது அரண்மனை வாயிலில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவசர அவசரமாக ஓரு வீரன் மன்னரிடம் மண்டி யிட்டான்.
''வீரனே கூறு. வாசலில் என்ன சலசலப்பு!'' என்று மன்னர் கேட்டார்.
''மாமன்னா! கங்கையின் வெள்ளத்தில் சிக்கித்திணறிய ஒரு படகு மூழ்கியதில், இருந்து தப்பி நீந்தி வந்த எட்டு மேலை நாட்டு வீரர்களை நம் காவல் வீரர்கள் கைது செய்து வந்துள்ளனர். அதில் ஒரு வீரனாக நம் சின்னையனும் வந்துள்ளான். அவனும் கைது செய்யப்பட்டிருக்கிறான்,'' என்று கூறிவிட்டு வீரன் தலைவணங்கி, மன்னர் பதிலுக்கு காத்திருந்தான்.
மன்னர் மனம் இன்னும் குழப்பத்திலேயே இருந்தது.
''சின்னையனா?''
இந்த சந்தர்ப்பத்தை தளபதி சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டான்.
''ஏ. வீரனே. அந்த வீரர்கள் அனைவரையும் என் விசாரணைக்கூடத்துக்கு அனுப்பி வை!''
மன்னரும் சரி என்பதாக தலை ஆட்ட, அந்த வீரன் வேகமாக வெளியேறினான்.
''மாமன்னா நாம் அந்த வீரர்களை விசாரிப்பதை விட ராஜ துரோகி அமைச்சரைத்தான் விசாரிக்க வேண்டும். அவர் தான் ஏதோ அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதையெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன். தாங்கள் எனக்கு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும்!'' என்று பவ்யமாக பேசினான்.
''சரி. உடனே செயலில் இறங்கி நாட்டை காப்பாற்றுங்கள்!'' என்று கூறிய மன்னர், மன சஞ்சலத்துடன் கொலு மண்டபத்தை விட்டு சென்றார்.
''வெற்றி! வெற்றி!'' என்று மனதிற்குள் கொக்கரித்த தளபதி நிறைந்த மகிழ்வுடன் அந்த இடத்தை விட்டு மறைந்தான்.
தர்மத்தின் வாழ்வுதனை இப்போது சூது கவ்வியது.
''ஏன் சின்னையா நீ சரியான மடையன். நான் மட்டும் அந்த சமயத்தில் மன்னரிடம் இல்லாதிருந்தால் உங்கள் கதி என்ன ஆகி இருக்கும். அது சரி நீங்கள் எப்படி கங்கையில் மூழ்கினீர்கள். நீங்கள் எங்கிருந்து எப்படி வந்தீர்கள்? உங்கள் யாவருக்கும் நீச்சல் தெரியாதா? மேலை நாட்டானுக்குமா நீச்சல் மறந்து விட்டது? எனக்கு விவரமாக கூறு. இன்னும் ஒரு விஷயம் எனக்கு புரிய வேண்டும். உன் பெயர் இதுவரை எல்லாருக்கும் மெய்யன்பன் என்றுதானே தெரியும். அது எப்படி அந்த வீரன் மட்டும் மன்னரிடம் உன் பெயரை சின்னையன் என்று சொல்லி கைது செய்திருப்பதாக கூறினான். அப்படி விவரம் உள்ள அந்த வீரன் யார் என்று உனக்கு தெரியுமா?''
''எசமான். அவன் அமைச்சர் வீட்டு எடுபுடி. அவ்வளவுதான் எனக்கு தெரியும். ஆனால், அவன் எப்படி கங்கை கரை பாதுகாப்பு ரோந்துக்கு வந்தான் என்பதுதான் புதிராக இருக்கிறது,'' என்றான் சின்னையன்.
''அவன் எடுபுடி இல்லை. மாறாக அமைச்சரின் உளவாளி. அதுவும் விவரம் அறிந்த ஒற்றன். உடனே அவனை நான் அந்த இடத்தில் இருந்து நீக்கியாக வேண்டும். எல்லா இடத்திலும் என் ஆட்கள் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால் நமக்கு போட்டியாக அந்த அமைச்சனும் உளவாளிகளை போட்டு வைத்திருக்கிறான். கைதேர்ந்தவன் அந்த அமைச்சர். ஆனால், இந்த தளபதியிடம் அது எடுபடுமா? வரும் பவுணர்மி அன்று அவன் கழுமரம் ஏற இருக்கிறான்!'' என்று கேலியுடன் அட்டகாசமாக சிரித்தான்.
சின்னையனும் பதிலுக்கு சிரித்தான்.
''மடையா சிரிப்பதை விடுத்து நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறு!'' என்றான்.
தொடரும்...
பூரணி
