தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (14)

பொக்கிஷம் (14)

பொக்கிஷம் (14)


PUBLISHED ON : ஜூலை 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மந்திராஜா, பெரியவருடன் வந்து வித்தை காட்டுவது போல் நடித்தனர் இரு சிறுவர்கள். அப்போது, மந்திராஜா சவுக்கு கம்பால் தளபதியை தாக்கியது. இனி-

குணாளன் அதிர்ச்சியடைந்து தளபதியை மெல்ல தூக்கி நிறுத்தினான்.

மிகுந்த சினம் கொண்ட தளபதி, 'குணாளா... உடனே அந்த குரங்கையும், மற்றவர்களையும் இழுத்து வா!'' என்று உரக்க குரல் கொடுத் தான்.அவன் மண்டையில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

கைதட்டிய சிறுவர்கள், 'இப்போது அக்கிரமக் காரனுக்கு எங்கள் மந்திராஜா கொடுத்த தண்டனையை பார்த்தீர்களா!'' என்றதும், 'ஆம் ஆம்!'' என்று சிறுவர்கள் கோஷமிட்டனர்.

பெரியவர் சிரித்தபடி நின்றிருந்தார். அவர்களை பிடிக்க குணாளனும், மற்ற வீரர்களும் வருவதை பார்த்த பெரியவர், மந்தி ராஜாவிடம் கண்ணால் பேசினார்.

அவ்வளவுதான் மந்திராஜா பெரும் குட்டிக் கரணம் போட்டபடி சிறுவர்களை மகிழ்வித்து அவர்கள் கைதட்டிக்கொண்டிருக்கும் போதே குணாளன் பக்கம் திரும்பி குட்டிக்கரணம் இட்டுக்கொண்டே அவன் மார்பை உதைத்து, அவன் தலையில் நின்றது. உடனே, மற்ற வீரர்கள் அதை பிடிக்க முயன்ற போது ஒருவன் தலை முடியை பற்றி குணாளன் தலையில் நின்றபடியே வேகமாக சுழற்றி வீசியது. அவன் 'அய்யோ அம்மா!'' என்று கதறியபடி நீண்ட தூரம் போய் விழுந்தான்.

இதைக்கண்டு பயந்த மற்ற வீரர்கள், மெல்ல நழுவிச் சென்றனர். குரங்கிடம் சிக்கிய குணாளன் அதன் கால் பிடியில் இருந்து மீள முடியாமல் போராடினான். கடைசியில் தலை யில் இருந்து கால் நகங்களால் தலையை கீறி விட்டபடி வேகமாக ஒரு தென்னை மரம் அளவு உயரம் தாவி சேட்டைகள் செய்தபடி கீழே குதித்து நின்றது மந்திராஜா.

சிறுவர்கள் ஆரவாரம் அடங்கவே இல்லை. தலையில் ரத்தம் வழிய வலி தாங்காமல், குணாளன் அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று தளபதியிடம் சேர்ந்து கொண்டான்.

'குணாளா நீயும் காயம் பட்டு விட்டாய். நானும் அடி பட்டு விட்டேன். உடனே, நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும். முதலில் நாம் என் மாளிகைக்கு போவோம். இந்த குரங்குகளையும், மற்றவர்களையும் கண்காணிக்க ஒரு வீரனை அனுப்புவோம். பிறகு, நாம் அவர்களை கூண்டோடு அழிக்க ஏற்பாடு செய்வோம்!'' என்று கூறி அடிபட்ட தலையை பிடித்தவாறு தளபதி முன் செல்ல, வழியும் ரத்தத்துடன் குணாளன் வலி பொறுத்த மாட்டாமல் கோபத்துடன், தளபதியின் பின்னால் சென்றான்.

இப்போது சிறுவர்கள் குரங்குடன் அந்த இடத்தை விட்டு அரண்மனையை நோக்கி செல்லலாயினர். வேடிக்கை பார்த்த சிறுவர்களும் உற்சாக மிகுதியால் மந்தி ராஜாவை பின் தொடர்ந்து சென்றனர். மந்திராஜாவும் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக வழியில் உள்ள மாமரத்தில் ஏறி சுவையான மாங்காய்களையும், மாங்கனி களையும் பறித்து சிறுவர்களிடம் தூக்கி போட்டது. சிறுவர்கள் கைகளை தட்டி உற்சாகத்துடன் போட்டி போட்டு அந்த மாங்கனிகளையும், காய்களையும் எடுத்து தின்றனர்.

அவர்கள் சென்ற அதே வேளையில், தளபதியின் கட்டளைப்படி, ஒரு வீரன் சாதாரண உடையில் அவர்களை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

ராஜ வைத்தியர் தளபதிக்கும், குணாளனுக்கும் அடிபட்டு விழுந்த ஒரு வீரனுக்கும் வைத்தியம் பார்த்தார். சின்னையனும் மற்ற வீரர்களும் அமைதியுடன் நின்றிருந்தனர். தளபதி ஒரு நாழிகைக்கு பிறகு வலி குறைந்து மன உற்சாகம் பெற்றான். குணாளனும் நல்ல நிலைக்கு வந்திருந்தான்.

அரச வைத்தியருக்கு பொற்காசுகளை கொடுத்து அனுப்பி வைத்து இந்த நிகழ்வுகளை அரண்மனையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பினான்.

தளபதிக்கு இப்போது கோபத்தால் கண்கள் சிவந்தன. கேவலம் ஒரு குரங்கால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து, நினைத்து பழி வாங்கும் முகமாக பெருமூச்சு விட்டான்.

'ஏன் குணாளா அந்த மனிதநாட்டியிடம் உள்ள சிறுவர்களை பற்றி ஏதோ கூற வந்தாயே?''

'தளபதியே இலை தழைகளை கட்டி மூடியிருந்தாலும் அந்த பெரிய சிறுவனை அவன் குரலை வைத்து நான் அடையாளம் கண்டு விட்டேன். அந்த சிறுவன் வேறு யாரும் அல்ல. அமைச்சரின் லட்சினையை வைத்திருந்தவன். அவருக்கு சிகை அலங்காரம் செய்ய வந்ததாக அவர் மாளிகைக்கு சென்றவன். எல்லா வற்றிற்கும் மேலாக, தங்கள் உத்தரவுப்படி நான் அவனை அய்யனார் கட்டத்தில் இருந்து பெருக் கெடுத்து பிரவாகமாக ஓடும் கங்கையில் வீசி எறிந்தேன். அதில் மூழ்கியவர் யாரும் பிழைக் கவே முடியாது. ஆனால், அவன் பிழைத்து விட்டான். அதுதான் எனக்கு பேரதிர்ச்சி!''

'ஓ அப்படி என்றால் அவன் காப்பாற்றப்பட்டு இருக்கிறான்!'' கவலை தோய்ந்த குரலில் கூறினான் தளபதி.

'ஆம் தளபதியாரே. அந்த சிறுவனை நானும் அடையாளம் கண்டு கொண்டேன். அவன் தான் சாமர்த்தியமாக பேசியவன். மேலை நாட்டு ராஜதந்திரியார் கூறியதாக இரு குதிரைகளை காட்டி என்னை நம்ப வைத்து நாங்கள் ஒரு உளவாளியின் மனைவியிடம் அந்த உளவாளியை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது, ஏமாற்றி அவளையும் அழைத்துக்கொண்டு தப்பி ஓடியவன். அவனுடன் அவன் தாயும் இன்னொரு உளவாளியின் மகன் வாண்டு பயலும் சென்றனர்,'' என்றான் சின்னையன்.

'தளபதியாரே இப்போது எனக்கு எல்லாம் விவரமாக புரிந்து விட்டது. அந்த குரங்குடன் வந்த பெரியவர் தான் நம் மலை மற்றும் அங்குள்ள காட்டு ஒற்றர்களிடம் சிக்காமல் தப்பித்து வரும் ஒரு மர்ம பெரியவர். அவர் நடமாட்டம் மர்மாக இருப்பதாக நமக்கு பலமுறை மலைகாட்டு உளவாளிகளின் தலைவன் நல்லான் கூறியிருக்கிறான்.

'நானும் அவரை பிடித்து வரும்படி அவனுக்கு கட்டளை இட்டேன். அவன் வசம் ஐம்பது குதிரை வீரர்கள் படை இருக்கிறது. இருந்தும் அந்த பெரியவரை பிடிக்கமுடிய வில்லை. அவர் சித்து வேலைகள் செய்து தப்பிப்பதாக அவன் கூறினான்.

'அப்படி பார்த்தால் அந்த சித்து வேலை செய்யும் அந்த பெரியவர்தான் இப்போது வந்திருப்பதாக நான் நினைக் கிறேன். அவரை அந்த குரங்குதான் காத்து வருகிறது என்றும் நான் நம்பு கிறேன்!'' என்றவன் சற்று யோசித்தான்.

பிறகு, 'அய்யோ தளபதியே ஆபத்து ஆபத்து!'' என்று உரக்க கத்தினான்.

'ஏய் என்ன உளறுகிறாய். இப்போது நமக்கு எங்கிருந்து ஆபத்து?'' என்று தளபதி கோபத்துடன் கேட்டான்.

'பிரபு! பெரும் சோகம் நிகழ்ந் திருக்கிறது. வலது கை கட்டை விரலை கவிழ்த்து நம்மிடம் பலமுறை ஒருவன் காட்டினான் அல்லவா? அவன் கண் களை வைத்து கண்டுபிடித்து விட்டேன். அவன் வேறு யாரும் இல்லை. மலை காட்டு பிரதேசத்தின் நம் உளவாளி களின் தலைவன் நல்லான்தான் அவன். அவன் கதியே இப்படி இருந்தால் அவனுக்கு கீழ் இருந்த ஐம்பது குதிரை வீரர்களின் கதி என்னவாகியிருக்கும்!'' குணாளன் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

தளபதியும் கதி கலங்கிப்போனான்.

'ஆம் நம் சைகை அவனுக்கு எப்படி தெரியும் என்று நான்தான் அலட்சியப் படுத்தினேன். இப்போது புரிந்து விட்டது நாம் சரியாக ஏமாந்தோம்!'' என்று அவன் கோபத்துடன் பற்களை நற நறவென்று கடித்து சின்னையன் பக்கம் திரும்பிய அதே வேளையில், தளபதியின் வீரன் ஓடி வந்தான்.

'பிரபு முக்கிய செய்தி!''

'என்ன சொல்?''

'பிரபு அந்த மனித நாட்டியை பல வீர சாகசங்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் மிகுந்து அரண்மனையையே சுற்றி வளைத்து விட்டனர். அரண்மனை வீரர் களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் மன்னரே அந்த இரு சிறுவர்களில், பெரிய சிறுவனை சந்திக்கும்படி அழைப்பு விடுவிக்க அந்த சிறுவன் மன்னரை சந்திக்க சென்று விட்டான்!''

'அப்படி என்றால் அது பெரும் ஆபத்து தளபதியாரே! அந்த சிறுவன் இப்போது மன்னனை காண சென்றுள்ளான். அவனைத் தான் நாம் கங்கையில் வீசி கொல்ல முயன்றோம். அவனிடம் இருந்து எடுத்த லட்சினையை கொண்டுதான் தாங்கள் மன்னரிடம் சாமர்த்தியமாக பேசி அமைச்சரை பாதாள சிறைக்குள் தள்ளினீர்கள். இப்போது அந்த சிறுவன் நடந்த எல்லாவற்றையும் கூறப்போகிறான்... பிறகு... அய்யோ எனக்கு நினைக்கவே பயமாக இருக்கிறதே!''

தளபதியும் யோசிக்க ஆரம்பித்தான்.

அதே சமயம், அரண்மனையில் மன்னர் வாயிலுக்கு வந்தார். கூடியிருந்த அனைத்து சிறுவர்களும், மக்களும், மன்னரை கண்டதும் 'வாழ்க' என்று வாழ்த்தி பெரும் கோஷ மிட்டனர்.

- தொடரும்...

பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us