தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (32)

பொக்கிஷம் (32)

பொக்கிஷம் (32)


PUBLISHED ON : நவ 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தன் இனத்தை அழித்துவந்த குரங்குபடை தலைவனின் மேல் கோபம் கொண்டது ராஜமந்தி. அவனை அழிக்க திரும்பியபோது, அதன் கையை பிடித்து தடுத்தார் பெரியவர். இனி-

பெரியவர் அன்புடன் பேசினார்.

''நண்பா! என் கரம் உன்னை தடுத்து நிறுத்தியதை பார்த்து நீ வருந்தியிருப்பாய். நானும், உனக்காக மனம் வருந்துகிறேன். வரும் நிகழ்வு மிக, மிக ஆபத்தானது. நீ அந்த ஒருவன் உயிரை எடுக்க செல்வதற்குள் இங்கு பல உயிர்களை இழக்க, இப்போது இயற்கையே சதி செய்தது போல் ஆகிவிடும். தயவு செய்து இப்போது இன்னமும் வேகத்தோடு நாம் இந்த இடத்தை கடக்க வேண்டும். நம் வேகத்துக்கு ஏற்றாற் போல், நம் சிறுவர்களையும் துரிதப்படுத்தி அழைத்து வர வேண்டும். யாரும் இதில் பின்தங்கக் கூடாது. அதற்கான முயற்சியைத்தான் நாம் இப்போது செய்ய வேண்டும்,'' என்றவர் நடையை விட்டு, ஓட முயற்சித்தார்.

இந்தநிலை ராஜமந்திக்கும் புரியவில்லை. தன் கோபத்தை குறைத்து பெரியவருடன் ஓட ஆரம்பித்தது. சின்னதம்பியும், வாண்டுவும் வேகமாக ஓடவும், மற்ற சிறுவர்களும் ஓடி வரலாயினர். காற்று பலமாக வீசியது. அப்போது ஏற்பட்ட ஒரு பெரும் மின்னல், அந்த கானகத்தையே ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தியது. சிறுவர்கள் அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் ஒரு குதூகலத் துடன் பார்த்தனர். பிறகு, சற்று நாழி காடே இருளில் மூழ்கிப்போனது. அப்போது பெரும் இடியும், மின்னலும் வானமே பூமியில் விழுவது போல் தீப்பிழம்பாக கீழே வரவும் பெரியவர் இன்னும் வேகமாக ஓடினார்.

மற்றவர்கள் அச்சத்துடன் ஓடினர். இப்போது கீழே இறங்கிய தீப்பிழம்பு ஆயிரம் இடிகளுக்கு இணையான சத்தத்துடன் பெரும் மரத்தில் விழுந்தது. 'அய்யோ' என்ற சத்தம் மட்டுமே கேட்டது.

பெரியவர் திரும்பி பார்த்தார். தன் பின்னால் வரும் சிறுவர்கள் யாவரும் பத்திர மாக இருக்கின்றனர் என்று பெரு மூச்சு விட்டவர் ராஜமந்தியை பார்த்து, ''நண்பா அந்த மரத்தை பார்த்தாயா?'' என்றார்.

''ஆம்!'' என்பதாக தலை அசைத்தது.

இப்போது மரம் முழுவதும் தீப்பற்றி எரியவும் மீண்டும், 'அய்யோ!' என்ற குரலுடன் மர உச்சியில் இருந்து கருகி விழுந்தான் குரங்குபடைத்தலைவன். இந்த நிகழ்வை கண்ட குணாளன் அதிர்ந்து விட்டான்.

''அய்யோ குரங்கு படை தலைவன் எவ்வளவு வீரத்துடன் காரியங்களை செய்தான். அவன் நிலைமை இப்படி ஆகி விட்டதே,'' என்று வருந்தினான்.

நல்லான் மற்றும் வீரர்களுடன் கருகிக் கிடந்த தலைவனுக்கு மரியாதை செலுத்திய படி அவனை வலம் வந்து, பின் கண்ணீர் சிந்தியவன், உரக்க குரல் கொடுத்தான்.

''நல்லானே... மற்றும் வீரர்களே... நாம் இப்போது அந்த பெரியவரையும், அந்த பெரும் குரங்கையும் உடனே கொல்ல வேண்டும். அவர்களுடன் சிறுவர் பட்டாளம் சேர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மடிந்தாலும் பரவாயில்லை. உடனே வேகமாக செயல்பட்டு அந்த பெரியவரின் சடலத்தையும், பெரும் குரங்கின் உடலையும் தூக்கி வாருங்கள். அப்போதுதான் நம் குரங்குபடைத்தலைவனின் ஆன்மா சாந்தி அடையும்,'' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ராஜமந்தி தன் இன குரங்குகளை கொத்து கொத்தாய் அழித்தவனின் செயல் இயற்கைக்கே பிடிக்காமல் பெரும் இடியில் கருகி இறந்ததை கண்டு ஆனந்த கூத்தாடி யது. பெரியவரும் மற்ற சிறுவர்களும் மகிழ்ச்சி யுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அதே சமயம், குணாளனும், வீரர்களும் தங்கள் வாள், வேல் மற்றும் வில் அம்புடன் பெரியவரையும், ராஜமந்தியையும் தாக்க மரம் விட்டு மரம் தாவி, தாவி வேகமாக வந்து கொண்டிருந்தனர். ஆனால், பெரும் மழையிலும் காட்டின் அடர்ந்த தன்மை யாலும் வானில் திரண்டிருந்த பெரும் கரு மேகக்கூட்டத்தாலும் அந்த கானகமே கடும் இருளில் மூழ்கியது.

வீரர்களால் பெரியவர் செல்லும் பாதையை காண இயலவில்லை.

அப்போது ஒரு பெரும் மின்னல் வானில் தோன்றியது. சற்று நாழியில் அது அந்த இடத்தை கடந்து, நீண்ட தூரம் சென்ற போது சின்னதம்பிக்கு பேராச்சரியம். என்ன அது மின்னலின் நிறம் இப்போது எதிரில் இருக்கும் இடத்தை கடந்த போது ஏன் பச்சை நிறமாக மாறியது. அது எப்படி சாத்தியம். இயற்கைக்கு மாறாக அல்லவா இருக்கிறது என்று அவன் நினைத்து, அதை வாண்டுவிடமும் கூறி பகிர்ந்து கொண்டபோது, மீண்டும் மின்னல் தோன்றி எதிரில் செல்லும் போது கரும் பச்சை நிறமாக மாறி மறைந்தது.

''அய்யா இந்த மின்னல் எப்படி எதிர் திசைக்கு செல்லும் போது மட்டும் கரும் பச்சை நிறமாக மாறி மறைகிறது. அது விந்தை யாக இருக்கிறதே. ஒரு வேைள, யாராவது மந்திரவாதி அங்கு இருப்பானோ...'' என்று அச்சத்துடன் கேட்டான் சின்னதம்பி.

''பலே, பலே சிறுவன் சின்னதம்பியே நீ சரியாகத்தான் கேட்டாய்!''

பெரியவர் பேச்சில் இப்போது பெரும் மாற்றம் இருந்ததை உணர்ந்தான். அவர் பேசியது அந்த கானகத்துக்கே கேட்டது. அவ்வளவு கம்பீரத்துடனும் மனிதத் தன்மைக்கு மாறான பெரும் குரலுடனும் பேசினார்.

''என் சிறுவர்களே இப்போது நான் கூறப்போவது இந்த விஜயபுரி நாட்டின் பெரும் ரகசியம். என் பெயர் மயன். நான் மயன் வம்சத்தை சார்ந்த கடைசி வாரிசு. மன்னர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசியம் இது. இதுதான் எங்கள் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த வழக்கம். ஆனால், இப்போது மன்னன் இருப்பதோ பாதாள சிறையில். அவனுக்கு அறிவுறுத்த வேண்டிய மதி நிறைந்த அமைச்சர் இருப்பதும் பாதாள சிறையில் தான். நாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. நாங்கள் முக்காலமும் அறிந்தவர்கள்.

''மன்னரின் சகோதரர் மட்டுமே இந்த ரகசியத்தை அறிந்து வைத்திருந்தார். வழி வழியாக மன்னர் அதை இளவரசனாக முடிசூட்டும் போது இளவரசனுக்கு அறிவிப்பார். ஆனால், விஜயபுரி மன்னர் திடீரென்று இறந்த விட்டதாலும், அவர் மகன் சிறு குழந்தையாக இருந்ததாலும் அவர் விஜயபுரி ரகசியத்தை கூற முடியாமல் போய்விட்டது. இது மகாராணிக்கும் கூட தெரியாத ரகசியம். பொதுவாக அமைச்சர்களுக்கும் இந்த ரகசியம் தெரியாமல் பாதுகாக்கப்படும்.

''அரண்மனையில் இருந்து இந்த இடம் வருவதற்கு தனியாக சுரங்கப்பாதை இருக்கிறது. அதில் மன்னர் மட்டுமே வருவார். அப்போது எங்கள் வம்சத்தில் ஒருவர் உயிருடன் இருப்போம். நாங்கள் ஒரு யோகிபோல் வாழ்வோம். யாரும் எளிதில் புக முடியாத காட்டில் பெரும் மிருகங்களும் அச்சுறுத்தும் கொடிய சூழல் நிறைந்த பகுதியில்தான் நாங்கள் வாழ்வோம். எங்களுக்கு மனிதர்களை விட காட்டு விலங்குகளே நண்பர்கள்.எங்களை எந்த விலங்கும் கொல்லாது. மற்றவர்களாலும் கொல்ல முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் வரம் பெற்றவர்கள். இந்த ரகசியம் இப்போது யாருக்கும் தெரியவே தெரியாது. யார் கண்ணி லும் படாது. இதன் ஒரே பாதுகாவலர்கள் மயன்களாகிய நாங்கள்தான். இந்த ரகசியம் தான் பெருமைக்குரிய விஜயபுரியின் அரும், 'பொக்கிஷம்' அந்த பொக்கிஷம் வெளி உலகுக்கு தெரியும் நிலை வந்தால் மயன் களாகிய நாங்கள் இந்த உலகை விட்டு மறைந்து விடுவோம். இதுதான் நாங்கள் இந்த பொக்கிஷத்தை உண்டாக்கும் போது எங்களுக்கும், அப்போது ஆண்ட விஜயபுரி மன்னருக்கும் உண்டான உடன்படிக்கை.

அந்த வகையில் நான் ஒரு மன்னரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காத விஜயபுரியின் பொக்கிஷ ரகசியத்தை ஒரு சிறுவன் உணர்ந்து கொண்டு விட்டதால், அவன் வாயிலாக கூறிய பின் சற்று நாழியில் மறைந்து விடுவேன். அதற்கு முன், அதன் முழு ரகசியத்தை நீங்கள் அறியும்படி பொக்கிஷ வாயிலை திறந்து விடுவேன்.

''முதலில் சிறுவன் சின்னதம்பியும், அவன் நண்பர்களும் நுழைய கட்டளை. மற்றவர்கள் இவர்களுக்கு பின்னால்தான் செல்ல முடியும். அப்படி இந்த சிறுவர்களை துன்புறுத்தி எவ ரேனும் முன் செல்ல முயற்சித்தால் அவர் கள் அங்கேயே கண்கள் குருடாகி பின், காட்டின் கொடிய விலங்குகளால் கொல்லப் பட்டு மாண்டு போவார்கள். இதன் முக்கிய ரகசியம் அறிவுள்ளவனுக்கு மட்டுமே புலப்படும். இந்த பொக்கிஷ மலையில் இருக்கும் செல்வம் இந்த நாட்டில் பல தலைமுறைகளுக்கு பஞ்சத்தை போக்கி மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டும் செல்லும் வளம் மிக்கது. இதை பொதுவாக மன்னர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் விதி. காரணம், இந்த பொக்கிஷ செல்வம் மன்னரையும், மக்களையும் சோம்பேறிகள் ஆக்கிவிடும். அதனால் எப்போது கடும் வறட்சி நிலவுகிறதோ அப்போது மட்டுமே இந்த பொக்கிஷத்தை மன்னர் பயன்படுத்த வேண்டும்.

''இதுவரை பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாடு கங்கைத்தாயின் அருளால் செழித்தே இருந்ததால், எந்ந மன்னரும் இந்த பொக்கிஷத்தை பயன்படுத்தவில்லை. மன்னர்கள் வெறும் காப்பாளர்களே.ஆனால், மயன்களாகிய நாங்கள்தான் இதன் பொறுப்பாளர்கள். எங்களால் மட்டுமே இந்த வகையில் பெரும் மாணிக்க மலையை உருவாக்கி அதைக்குடைந்து பெரும் பொக்கிஷத்தை கொண்டு வர இயலும். இதில் இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. இந்த பொக்கிஷத்தில் இருந்து எடுக்கப்படும் செல்வம் குறையவே குறையாது. எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும். ஒரு உண்மையை மட்டும் கூறிவிட்டு மறைந்து விடுவேன். நான் சின்னதம்பிக்கும், மற்றவர் களுக்கும் இந்த மாணிக்க மலையின் பொக்கிஷ வாயிலை திறந்து விட்டு பின்னர் பொக்கிஷத்தின் நிலையையும் கூறி வருவேன். இந்த பொக்கிஷம் என்ன, அதன் உண்மையான ரகசியம் என்ன என்பதை புத்திசாலிகள் புரிந்து கொண்டு செயல் பட்டால் அது காலம் காலத்திற்கும் நல்லது. அவ்வளவே என் அறிவுரை!'' என்று கூறி விட்டு பெரியவர் மறைந்தார்.

மழையும் நின்று போனது. ராஜமந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. பெரியவர் இல்லாத நிலையில் அது மிகுந்த சோகத்துடன் தன் முழு வலிமையும் இழந்ததாக உணர்ந்தது. அந்த இடத்திலேயே சின்னதம்பிக்கும், வாண்டுவுக்கும் முத்தம் கொடுத்துவிட்டு சோகத்துடன் அமர்ந்து விட்டது.

அப்போது சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திய நல்லான், ஒரு அசுர வேகத்துடன் பெரும் அம்புகளை எய்தபடி இருக்க, ராஜமந்தி உடல் துளைக்கப்பட்டு மடிந்தது. நல்லான் ஆனந்த கூத்தாட சிறுவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர். சின்னதம்பி அவர்களை தேற்றியபடி இருந்தான்.

தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us