PUBLISHED ON : நவ 27, 2015

சென்றவாரம்: பெரியவர் மறைந்த சோகத்தில் இருந்த ராஜமந்தியை, அசுர வேகத்துடன் அம்புகள் எய்து கொன்றான் நல்லான். அந்த சோகத்தில் அழுத சிறுவர்களை தேற்றினான் சின்னதம்பி. இனி-
நல்லானை அழைத்து, விவரம் கூறி உடனே தளபதியை வீரர்களுடன் அழைத்து வர பணித்தான் குணாளன்.
வேகமாக சென்றான் நல்லான்.
இப்போது ஆயிரம் கோடி சூரியனுக்கு நிகரான ஒளிப்பிழம்பு கரும் பச்சை நிறத்தில் தோன்றி அது அந்த அடர்ந்த கானகத்தையே பகலாக்கியது. வானமும் பச்சை நிறத்தில் மாறியது. இப்போது மலையே பிளக்கும் படியான பெரும் சத்தம் கேட்டது. அனைவரும் ஒரு அச்சத்துடன் அந்த மலையையே பார்த்தபடி இருந்தனர். சிறிது நேரத்தில் மலை திறந்து கொண்டது. இப்போது பெரியவர் மயன் பேசினார்.
''எனது அருமை சிறுவர்களே! உள்ளே வாருங்கள்,'' என்றார்.
முதலில் சின்ன தம்பி நுழைந்தான். எங்கும் அகில் சந்தனம், பெரும் புகைமூட்டமாக கிளம்பி அந்த இடமே நறுமணத்தில் திளைத்தது. சின்னதம்பியை தொடர்ந்து வாண்டுவும், மற்ற சிறுவர்களும் உள்ளே நுழைந்தனர். நறுமணத்தில் மெய் மறந்திருந்த சிறுவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த அதிசயத்தை கண்டனர்.
பெரியவர் சிரித்தார்.
ஆம். அந்த இடம் முழுவதும் பெரும் தங்க கட்டிகளால் கட்டப்பட்டு இருந்தது. எங்கு நோக்கினும் தங்க கட்டிகள்.
ஒரு சிறுவன் அதை ஆச்சரியத்துடன் எடுத்து தடவிப்பார்த்தான். அடுத்தவன் அதை எடுத்து தன் இடையில் செருகிக் கொள்ள, அதைக் கண்ட சின்ன தம்பி கோபத்துடன் பாய்ந்து சென்று அதை எடுத்து கீழே போட்டான்.
அப்போது குணாளன் மிகுந்த ஆர்வத்துடன் அந்த இடத்திற்குள் நுழையவும், பெரும் தங்க கதவு அவர்கள் உள்ளே வராத படி மூடிக்கொண்டது.
''உங்களுக்கு இப்போது அனுமதியில்லை. அந்த சிறுவர்கள் சென்ற பிறகுதான் உங்களை அனுமதிக்க முடியும்,'' என்று ஒரு குரல் கேட்டது.
குணாளன் எச்சரிக்கையுடன் நின்று விட்டான்.
என்ன சிறுவர்களே... பொக்கிஷத்தை கண்டீர்களா? எடுத்து செல்ல மனமில்லையா, இல்லை இந்த தங்கம் போதவில்லையா. கவலைப்படாதீர்கள். இது அள்ள அள்ள குறையாது. எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார் பெரியவர்.
''இல்லை. இது பொக்கிஷம் இல்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு தாய்மார்களின் கழுத்திலும் தங்க அணிகலன்கள் அலங்கரித்த படி இருக்கின்றன. அதனால் பல காலங்களாக பழகிப்போன எங்களுக்கு தங்கம் ஒரு பொக்கிஷமே இல்லை,'' என்று உரக்க குரல் கொடுத்தான் சின்னதம்பி.
அதை ஆமோதித்தான் வாண்டு.
மற்ற சிறுவர்கள் தங்கள் ஆசையை விட்டு விட்டு சின்னதம்பி சொல்வதை தலை அசைத்து, ''ஆம், ஆம்!'' என்று ஆமோதித்தனர்.
''ஆகா நல்லது. அப்படியானால், பொக்கிஷமலையின் அடுத்த கட்டம் வாருங்கள்!'' என்றார் பெரியவர் மயன்.
இப்போது கண்களை பறிக்கும் வைரக் கதவு திறந்தது. சிறுவர்கள் சின்னதம்பி தலைமையில் அந்த கட்டத்தில் பிரவேசிக்க தங்க கட்டத்தின் பின்புற கதவுகள் தானாக மூடிக்கொண்டது. அதே சமயம், குணாளன் வருவதற்கு முன்புற கதவுகள் திறந்து கொண்டன.
அவன் ஒரு அசுர வேகத்துடன் தன் வீரர்களுடன் அந்த இடத்திற்குள் பிரவேசித்தான்.
''ஆ தங்கம்! தங்கம்!'' எங்கு நோக்கினும் தங்கம். உடனே குணாளன் தங்க கட்டிகளை அள்ளிக் கொண்டான். அவன் ஆசை அதிகரித்தது. தங்க கட்டிகளையும், தங்க காசுகளையும் எப்படி எடுத்துச் செல்வது என்று யோசித்து பார்த்தபோது அருகில் இருந்த வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் உடைகளில் தங்க கட்டிகளை அள்ளிப்போடுவது தெரிந்தது. இதை இப்படியே விட்டால் ஆபத்து என்று நினைத்தவன் ஒரு வீரனை கூப்பிட்டான்.
''நீ அரண்மனையில் இருக்கும் அத்தனை வீரர்களையும் அழைத்து வா. அவர்கள் வெறுமனே வரக்கூடாது. நிறைய சாக்குகளுடன் வரவேண்டும். குதிரையில் வரட்டும். எத்தனை சாக்குகளை குதிரையில் ஏற்ற முடியுமோ அத்தனை சாக்குகளை மூட்டையாக கட்டி எடுத்து வரச் சொல்லுங்கள்!'' என்றும் கட்டளை கொடுத்தான்.
அந்த வீரன் செல்ல இருந்த போது ஒரு பெரும் குரல் கேட்டது.
''தங்க பொக்கிஷ கட்டடத்தில் இருக்கும் வீரர்களே! உங்களுக்கு இந்த கட்டடம் இன்னும் ஒரு நாழிகை தான் திறந்திருக்கும். ஒன்று நீங்கள் வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுங்கள். இல்லை அடுத்த பொக்கிஷ கட்டடத்துக்கு வாருங்கள். உங்கள் நாழிகை முடிந்தால் நீங்கள் வெறுமனே திரும்பி செல்ல வேண்டியதுதான். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,'' என்றது அந்த மயன் குரல் கம்பீரத்துடன்.
குணாளன் செய்வதறியாது தவித்தபோது வேகமாக நல்லானுடனும், வீரர்களுடனும் உள்ளே பிரவேசித்தான் தளபதி. அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. தான் இருப்பது விஜயபுரியிலா அல்லது தேவலோகத்திலா அல்லது அதற்கும் மீறிய செல்வத்துக்கு அதிபதியான குபேரனின் மாளிகையிலா என்று யோசித்தபடி மெய் மறந்து நின்றான்.
ஓடி வந்த குணாளன் தளபதியின் தோள்களை பிடித்து அழுத்தினான். மெல்ல உணர்வு வரப்பெற்ற தளபதி, ''யார் குணாளனா நீ எப்போது இந்த இந்திரபுரிக்கு இல்லை... இல்லை தேவலோகத்திற்கு, ச்சீ அதுவும் இல்லை இந்த குபேர பட்டணத்துக்கு வந்தாய்?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
''அய்யோ தளபதி இப்படி வீண் சிந்தனையில் இருந்தால் நாழிகை ஆகிக் கொண்டிருக்கிறது. நமக்கு இருப்பது ஒரு நாழிகைதான். அதற்குள் நாம் வேண்டிய தங்கங்களை அள்ளிச் செல்ல வேண்டும். இல்லை இந்த கதவு மூடிவிடும். எனவே, சிந்தனையை விடுத்து ஒரு முகமாக தங்கங்களை அள்ளும் வேலையை வீரர்களுக்கு கொடுத்து அத்தனையையும் மூட்டையாக கட்டி அரண்மனைக்கு சேர்ப்பிக்க ஆவண செய்யுங்கள்.
''இது மிக அவசரம். தாங்கள் நினைப்பது போல் இது இந்திரபுரியோ, சுவர்க்க லோகமோ, குபேர பட்டணமோ அல்ல. ஆனால். அதற்கும் மேலாக நம் விஜயபுரி நாட்டின் பொக்கிஷம் இதுதான். மயன்களால் பாதுகாக்கப்பட்டு வந்ததும் இந்த பொக்கிஷம்தான். இப்போது அந்த மயனாலேயே திறந்து விடப்பட்டது. அதற்கும் காரணம் அந்த பொல்லாத சிறுவர்கள்தான். ஏதோ நமக்கு இந்த விஜயபுரியின் பொக்கிஷ ரகசியம் தெரிந்து விட்டது. உடனே நாம் காரியம் முடிக்க வேண்டும். இல்லை கதவு மூடிவிடும். நாம் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும்,'' என்றும் சற்று கடுமையாகவே கூறி எச்சரித்தான் குணாளன்.
''ஓ! நினைவுக்கு வந்து விட்டேன்!''
''அத்தனை தங்க கட்டிகளையும் மூட்டைகளாக கட்டி, அரண்மனைக்கு செல்ல வேண்டாம் என்றும், அதை தன் மாளிகைக்கு எடுத்து செல்லுமாறும் உத்தரவு கொடுத்தான். அப்படியே நிறைய கோணிப்பைகளை கொண்டு வருமாறும், அனைத்தும் விரைவில் முடியவேண்டும்,'' என்றும் கட்டளை கொடுத்தான்.
உடனே வீரர்கள் வாய் பிளந்தபடி கொட்டிக் கிடக்கும் தங்க கட்டிகள், தங்க பாலங்கள், அனைத்தையும் சாக்கு பையில் போட போட மீண்டும் மீண்டும் தங்க கட்டிகளும் பாலங்களும் உருவாகிக் கொண்டே இருக்க, ஆர்வத்தின் மிகுதியில் வீரர்கள் எடுத்து, எடுத்து அள்ளி போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். தளபதியும் அப்படியே உருண்டு புரண்டு தன் ஆசையை தணித்தபடி பல தங்க கட்டிகளையும், பாலங்களையும் தன் ஆடையினுள் நுழைத்துக் கொண்டான்.
குணாளன் எச்சரிக்கையுடன் வீரர்கள் செய்வதை பார்த்தபடி இருந்தான். அவன் கையிலும் பல தங்க கட்டிகள் இருந்தன. இப்போது மயன் குரல் பெரும் இடி முழக்கமாக கேட்டது.
''தங்க பொக்கிஷத்தில் திளைத்து நிற்கும் மானிடர்களே. இன்னும் சிறிது நாழிகையில் இந்த பொக்கிஷ அறை மூடபட்டுவிடும். அதனால் நீங்கள் வெளியேற வேண்டும். உங்களுக்கு இன்னும் பொக்கிஷம் வேண்டும் என்றால் உடனே அடுத்த கட்டடத்துக்கு வாருங்கள்!''
உடனே குணாளன் சுதாரித்துக் கொண்டான். தளபதியிடம் ஓடினான். அவன் இன்னமும் தங்ககட்டிகளின் மேல் உருண்ட படி இருந்தான்.
''தளபதி உடனே வீரர்களை தங்க கட்டிகளுடன் வெளியேற்றுங்கள். நம்முடன் சில வீரர்கள் வரட்டும்!'' என்றான் குணாளன்.
''அது சாத்தியமில்லையே... நம்மிடம் சாக்கு பைகள் அதிகம் இல்லையே... அதனால் எனக்கு ஒரு உபாயம் தோன்றுகிறது. அதன்படி நாம் செய்ய வேண்டும். இப்போது எடுத்த அத்தனை தங்கங்களையும் நம் வீரர்கள் இந்த பொக்கிஷ மலைக்கு வெளியில் கொட்டி இரு வீரர்கள் காவல் காக்கட்டும். நமக்கு இப்போது தேவை நிறைய கோணிப் பைகள்தான். அதனால் அவர்கள் தங்கங்களை உடனே கொட்டிவிட்டு கோணிப்பைகளுடன் இங்கு வரட்டும்,'' என்று கூறியதும், அதுவும் சரியே என்று ஆமோதித்தான் குணாளன்.
உடனே அனைத்து வீரர்களும் தாங்கள் அள்ளி கட்டிய சாக்கு மூட்டைகளை பொக்கிஷமலைக்கு வெளியே கொட்ட அதை இருவீரர்கள் காவல் காத்தனர். பின் மற்ற வீரர்கள் அனைவரும் பொக்கிஷ அறைக்கு திரும்பி தளபதியுடன் சேர்ந்து கொண்டனர்.
அதே சமயம் பொக்கிஷத்தின் அடுத்த கட்டடத்துக்கு நுழைந்தனர் சிறுவர்கள். எங்கும் வைரம். கண்களை குருடாக்கும் பிரகாசம்.
ஒவ்வொரு வைரக்கற்களையும் பார்த்து பார்த்து ரசித்த சின்னதம்பியும், அவன் நண்பர்களும் வைரகட்டடத்தை முடித்து நின்றனர்.
''என் அருமை சிறுவர்களே... இந்த வைரம் போதுமா... இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?'' என்று மயன் பலத்த குரலில் கேட்டார்.
அப்போது செங்கதிர் செல்வன் பேசினான்.
''பெரியவரே! இந்த வைரம் யாருக்கு வேணும். இது அரச பரம்பரையினரும், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். அதுவும் தங்கள் பகட்டை காட்டுவதற்காகத்தான். இதனால் பசி தீருமா. இல்லையே... அதனால் ஒரு காய்ந்த கருவாட்டுக்கு கூட இது சமன் ஆகாது!'' என்றான் கம்பீரமாக.
இதைக் கேட்ட சின்னதம்பி, ''பலே நண்பா சரியாக சொன்னாய்!'' என்று கட்டி தழுவ, மற்ற சிறுவர்கள் கைதட்டி ஆமோதித்தனர்.
நல்லது. சிறுவர்கள் இதையாவது பொக்கிஷம் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று பார்த்தால் இதையும் மறுத்து விட்டார்களே. ''சரி வாருங்கள் அடுத்த கட்டடத்துக்கு செல்லலாம்,'' என்று மயன் கூறியதும் கண்ணை பறிக்கும் பச்சை நிற கதவு வேகமாக திறந்தது. அதே சமயம் வைரகட்டடத்தின் பின்புற கதவுகள் மூடிக்கொண்டன.
- தொடரும்...
பூரணி
