PUBLISHED ON : டிச 25, 2015

சென்றவாரம்: பொக்கிஷ மலை உடைந்து மண்ணாகக் காரணம் சிறுவர்கள்தான் என்று நினைத்த தளபதி, அவர்களை அழிக்க குணாளன் மற்றும் நல்லானுடன் புறப்பட்டான். இனி-
அதற்குள் சிறுவர் பட்டாளம் அங்கிருந்து செல்ல ஆயத்தமாயினர். மீனாட்சியும், ராஜம்மாவும் குதிரையில் தாவி ஏறிச்செல்ல ஆயத்தமாயினர். தளபதியும், குணாளனும் அவர்களை தடுத்தனர்.
சிறுவர்கள் சின்னதம்பிக்கும், வாண்டுவுக்கும் அரணாக சுற்றி பாதுகாப்பு கொடுத்தனர்.
''அடே பொல்லாத சிறுவர்களே, இப்படி உங்கள் முட்டாள்தனத்தால் விஜயபுரியின் பொக்கிஷத்தையே மண்ணாக்கி விட்டீர்களே... அதற்கு என்ன தண்டனை தெரியுமா?'' தளபதி கோபத்துடன் தன் வாளை எடுத்தான்.
''மடையனே! ஒரு நாட்டின் பொக்கிஷம் என்பது வெறும் பொன்னும், மணியும் அல்ல. மாறாக, நாட்டில் வளரும் எழுச்சி மிகு சிறுவர்களின் சக்திதான் என்பதை நீ இன்னமுமா உணரவில்லை. அதை இப்போது உணர்த்துகிறேன்,'' என்றவன், ''ஜெய் விஜயபுரி!'' என்றதும், ''ஜெய் ஜெய் விஜயபுரி!'' என்ற சிறுவர்கள் கூட்டம் அப்படியே தளபதியையும், குணாளனையும் நல்லானையும், வேகமாக சுற்றி வளைத்து, அவர்கள் மேல் விழுந்து அவர்களை கீழே தள்ளி பின் கயிற்றால் கட்டினர்.
இப்போது மூவரும் எழுந்து நிற்க வைக்கப்பட்டனர். தலையை குனிந்தபடி தளபதி தள்ளாடி நிற்க, குணாளன் கோபத்துடன் நின்றிருந்தான். நல்லானோ அய்யோ பாவமாக நின்றிருந்தான்.
''தீய நோக்கத்துடன் மன்னரை சிறை பிடித்து, அமைச்சரையும் பாதாள சிறையில் தள்ளிய உம் செயலுக்கு நீர் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். அத்துடன், மேலை நாட்டானுடன் சதி செய்து நாட்டை காட்டி கொடுத்த நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல,'' என்று மற்ற சிறுவர்களை பார்க்கவும், அவர்கள், 'ஓ' என்று குரலிட்டபடி தளபதியையும், குணாளனையும், நல்லானையும் குதிரையில் ஏற்றினர்.
நிலைகுலைந்தான் தளபதி.
வெட்கத்திலும், வேதனையிலும் கேவலமாகிப் போனான் குணாளன். நல்லானோ செய்வதறியாது அதிர்ச்சியுடன் காணப்பட்டான்.
தளபதி வீரர்களை பார்த்து, ''வீரர்களே நீங்கள் வீரர்களா; இல்லை சோரர்களா? உடனே இவர்களை துவம்சம் செய்து என்னையும், குணாளனையும் விடுவியுங்கள். இது என் கட்டளை!'' என்று கர்ஜித்தான் தளபதி.
ஒரு வீரன் பேசினான்.
''இந்த விஜயபுரியின் வீர சிறுவர்களுக்கு எங்கள் வணக்கங்களை முதலில் சமர்ப்பிக்கிறோம். தளபதியின் சூழ்ச்சி வலையில் சிக்கிய சிறு மீன் குஞ்சுகள் நாங்கள் அவ்வளவே. தளபதி வலை என்றால் அந்த வலையை வீசிய கொடியவன்தான் குணாளன். இனியும் நாங்கள் வீரனாக இல்லை என்றால் அது எங்கள் தாய்க்கு அவமானம்!'' என்ற வீரன் உடனே இடைவாளை உருவி தளபதியையும், குணாளனையும் குத்தும் விதமாக வந்தான். சின்னதம்பி அவனை தடுத்தான்.
''வீரனே நீங்கள் திருந்தியது மகிழ்ச்சி. ஆனால், நம் மன்னரையும், அமைச்சரையும் விடுவிக்காமல் மன்னர் உத்தரவு இல்லாமல் நாம் இவர்களுக்கு தண்டனை வழங்குவது நீதியாகாது. அதை மன்னர் மதிமிகு அமைச்சர் ஆலோசனை பேரில் முடிவு செய்வார். இப்போது நாழிகை ஆகிக்கொண்டிருக்கிறது. நாங்கள் உடனே கங்கை கலக்கும் கடலுக்கு செல்ல வேண்டும். எனவே, உடனே நாம் அரண்மனைக்கு இவர்களை இழுத்து செல்வோம். வேண்டாம்... இவர்கள் பெரிய மனிதர்கள். இவர்களை இந்த குதிரையிலேயே அழைத்து செல்வோம். காரியம் மிக அவரசம்!''
''தளபதியின் வீரர்கள் அரண்மனையில் இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேணடும். பின் நீங்கள் விஜயபுரி நாட்டின் கோட்டையை காத்து நில்லுங்கள். நாங்கள் எதிரிகள் கங்கையில் நுழையாதபடி ஏதாவது தந்திரம் செய்து விடுவோம். எனவே, உடனே கிளம்புங்கள். இப்போது நாம் புறப்படலாம்,'' என்றதும் மீனாட்சியும், ராஜம்மாவும் பெரிய குதிரையில் ஏறி கிளம்ப தயாராக, சின்ன தம்பியும் வாண்டுவும் சிறிய குதிரையில் ஏறி அரண்மனைக்கு செல்ல ஆயத்தமாயினர்.
மற்ற சிறுவர்களை அய்யனார் கட்டடத்தில் இருக்கும் படகுகளில் ஏறி வலித்து வருமாறும், தான் கங்கை கட்டத்தில் ஏறிக் கொள்வதாகவும் சின்னதம்பி கூறினான்.
செங்கதிர் செல்வனும், வருணும் மற்ற சிறுவர்களை வழி நடத்தி செல்ல, சின்னதம்பி வேக வேகமாக அரண்மனை சென்றான்.
அரண்மனைக்கு கட்டி இழுத்துவரப்பட்ட தளபதியையும், குணாளனையும் கண்ட தளபதியின் வீரர்கள் முதலில் எதிர்த்தனர். பின், தேசப்பற்றுள்ள மனம் திருந்திய வீரர்கள் படை அரண்மனை உள்ளே நுழைந்ததால், அச்சமுற்று பின் வாங்கினர். அனைத்து தளபதியின் வீரர்களையும் மற்ற வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடனடியாக ஒரு வீரன் வழிகாட்ட பாதாள சிறை நோக்கி சென்றனர் சிறுவர்களும், வீரர்களும். பாதாள சிறை திறக்கப்பட்டது. உடனே தளபதியையும், குணாளனையும் நல்லானையும் பிடித்து வேகமாக உள்ளே தள்ளினான் ஒரு வீரன்.
அவர்கள் போய் உள்ளே விழவும், அடுத்த வீரன் உடனே அவர்களை பெரும் தூணில் கட்டினான். பின் மன்னரும், மதிமிகு அமைச்சரும் அவர்கள் ஆலோசனையின் பேரில் நந்தவன தோட்டக்காரரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போது அனைவரும் மிக சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு பழரசம் உடனடியாக வழங்கப்பட்டது. மன்னர் மெல்ல கண் விழித்து சிறுவர்களையும், மற்ற வீரர்களையும் பார்த்தார். அமைச்சரும் மெல்ல உற்சாகம் பெற்று எழுந்தார். தோட்டக்காரன் கைகட்டி, வாய் பொத்தி அமைதியாக நின்றிருந்தான்.
''சிறுவர்களே என்ன நடந்தது. எப்படி இந்த சதிகாரர்களை பிடித்து உள்ளே தள்ளினீர்கள். இது சாத்தியம் அல்லாத செயலாயிற்றே. இவர்கள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களே,'' என்று மன்னர் படபடப்புடன் பேசவும், சின்னதம்பி பேசினான்.
''மாமன்னருக்கு வணக்கம். அன்று நாங்கள் அரண்மனை வந்த போது ஒரு பெரியவரை நீங்கள் பார்த்தீர்களா அல்லவா?''
''ஆம் ஆம்!''
''அவர்தான் விஜயபுரியின் பொக்கிஷத்தை காத்துவந்த மயன். அவர் மூலம் பொக்கிஷ ரகசியம் அறிந்தோம். பின் கயவர்களை சிறைபிடித்தோம்!''
''என்ன சொல்கிறாய்?''
''ஆம். மன்னா! இப்போது தளபதியின் அனைத்து நம்பிக்கைக்குரிய வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டு விட்டனர். இன்று பவுர்ணமி. இன்றுதான் இந்த தளபதி உங்களையும், மதி மிகு அமைச்சரையும் கழுமரம் ஏற்றிவிட்டு மேலை நாட்டான் உதவியுடன் மன்னராக முடிசூட்ட நினைத்தான். அவனுக்குத்தான் குணாளன் போன்ற எண்ணற்ற உளவாளிகளும், வீரர்களும் உதவினர். ஆனால், துரோகம் என்று தெரியாமலேயே பதவிக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட வீரர்கள் மனம் வருந்தி, அதனால் திருந்தி இப்போது நம் அரண்மனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர்.
பெரியவரின் ஆலோசனையின் பேரில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். பெரியவரின் ஆலோசனையின் பேரில் நானும், என் நண்பன் இந்த வாண்டுவும் செயல்பட்டதால் தளபதியின் சூழ்ச்சியை முறியடிக்க நூற்றுக்கணக்கான எம் நண்பர்கள் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
அவர்கள் இப்போது அய்யனார் கட்டடம் வழியாக கங்கை கடலில் கடக்கும் இடம் நோக்கி செல்கின்றனர். நாங்களும் உடனே அங்கு செல்ல வேண்டும். நான் கங்கை கட்டடத்தில் சேர்ந்து கொள்வதாக கூறி வந்திருக்கிறேன். எனவே, நாங்கள் உடனே புறப்பட வேண்டும். இன்று பவுர்ணமி. இன்றுதான் மேலை நாட்டான் பெரும் படையுடன் வருகிறான். அவனுக்கு பரிசு நம் நாட்டு பொக்கிஷம். அதற்கு அவன் தளபதிக்கு கொடுக்கும் பரிசு இந்த நாட்டின் மன்னர் பதவி. ஆனால், பெரியவர் உதவியால் எல்லாம் முறியடிக்கப்பட்டுவிட்டது. இப்போது பொக்கிஷ ரகசியம் அறிந்த எங்களால் இந்த நாடு காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் அந்த பெரியவர் மயன் அந்த பெரும் பொக்கிஷங்கள் தாங்கிய மாணிக்கமலையையே உடைத்து தூள் தூள் ஆக்கிவிட்டார். அவர் உங்களுடன் ஒருமுறை பேசுவேன் என்று எங்களிடம் உறுதி கூறி, பின் மறைந்து விட்டார். இப்போது நாங்கள் புறப்பட வேண்டும். உடனே எங்களுக்கு அனுமதி தாருங்கள்,'' என்று பாதம் பணிந்து வேண்டினான் சின்னதம்பி.
மன்னரும் தலையசைத்து ஆமோதித்தார். பின் இரு சிறுவர்களின் கைகளை பிடித்து அவர்களுக்கு முத்த மழை பொழிந்தார். அவர்கள் செல்ல இருந்த போது, தன் கரங்கள் கூப்பி சிறுவர்களுக்கு மரியாதை செலுத்தி, ''சிறுவர்களால் ஆகாதது எதுவும் இல்லை. சிறுவர்கள்தானே ஒரு நாட்டின் உண்மையான பொக்கிஷம்!'' என்று மன்னர் கூறி விடை கொடுக்கவும், சின்னதம்பி மனம் மகிழ்ந்தான்.
''மாமன்னா! இதையேதான் நாங்களும் ஒரு நாட்டின் பொக்கிஷம் என்று கூறினோம். அதனால் ஆனந்தம் அடைந்த பெரியவர் மயன், ''சரியாக சொன்னீர்கள் பொன்னும், வைரமும், வைடூரியமும், முத்தும், மரகதமும், மாணிக்கமும், பவளமும், கோமேதகமும், நாகரத்தினமும் அள்ள அள்ள குறையாதபடி வடிவமைக்கப்பட்டு அதை இத்தனை காலம் பாதுகாத்த எங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் சிறுவர்களாகிய உங்களுக்கு தெரிந்து விட்டதால் இனி இந்த போலி பொக்கிஷம் தேவையில்லை,'' என்று கூறித்தான் அந்த பொக்கிஷங்கள் அடங்கிய மாணிக்க மலையை தூள் துளாக்கினார் பெரியவர் மயன்,'' என்றான் சின்னதம்பி.
''பரவாயில்லை. எல்லா பொக்கிஷங்களுமே ஒரு சிறுவனின் தன்னம்பிக்கைக்கு, நேர்மைக்கு, நியாயத்துக்கு, அவர்களின் ஒளி கொண்ட பார்வைக்கு, தேசப்பற்றுக்கு, ஈடாகமுடியாது. பெரியவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக, சிறுவர் சக்தியை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். அது தான் அவர் எங்களுக்கு உணர்த்தியிருக்கும் பாடம். அதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் போய் வாருங்கள்.
நான் மற்ற வீரர்களுடன் அமைச்சர் பெருமானை அழைத்துக்கொண்டு அந்த கொடுங்கோலன் தளபதி மற்றும் அவன் உறுதுணையாளன் குணாளனை என்ன நடந்தது என்று எப்படி விசாரிக்க வேண்டுமோ, அப்படி விசாரித்து வைக்கிறேன். கவலைப் படாமல் சென்று வெற்றியுடன் வாருங்கள். உங்கள் உயிர் இந்த நாட்டுக்கு அவசியம். அனாவசியமாக சண்டையிட்டு பலியாகி விடாதீர்கள். அப்படி மேலை நாட்டான் படையுடன் வந்தால் இங்கு வரட்டும். தோற்பதாக இருந்தாலும், சாவதாக இருந்தாலும் அனைவரும் இந்த நாட்டுக்காக ஒன்றாகவே மடிவோம். இதுவே என் விருப்பமும், அறிவுரையும்!'' என்று மன்னர் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.
- தொடரும்...
பூரணி
