PUBLISHED ON : மே 29, 2015

சென்றவாரம்: அமைச்சருக்கு முடி திருத்துவதாக வந்த சிறுவன், தன் தந்தை சிங்கன் கொடுத்ததாக ஒரு ஓலையை அமைச்சரிடம் கொடத்தான். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதே என்று கூறினார் அமைச்சர். இனி-
''சரி நீ போய்வா. எவரிடமும் எதுவும் பேசவேண்டாம். புரிகிறதா?'' என்று அவனுக்கு பழங்களும், இனிப்புகளும் கொடுத்து அவனை மகிழ்வித்தார்.
''சரிங்க அய்யா நான் வர்றேனுங்க!'' என்று சின்னதம்பி அங்கிருந்து வெளியேறினான்.
அதே சமயம், அவனை தொடர்ந்து ஒரு வீரன் வந்தான்.
''ஏ தம்பி நில்!''
சின்னதம்பி புரியாமல் திரும்பினான்.
''டேய் நில்லுடா! நீ யார்? எதற்காக அமைச்சர் மாளிகைக்கு சென்றாய்?''
''அய்யா அது எல்லாம் முடிந்த கதை. நீங்கள் யார்? எதற்கு இப்போது இந்த விவரம் எல்லாம் தங்களுக்கு?''
''ஏய்! என்னையா எதிர் கேள்வி கேட்கிறாய்,'' என்றபடி கன்னத்தில், 'பளார்' என்று ஒரு அறைவிட்டான் அந்த வீரன்.
சின்னதம்பியின் உடல் நடுங்கியது. அடிதாங்காமல், அழத்தொடங்கினான்.
''ஏன்டா அழுது சாதிக்கிறே. நீ யாருடா? உண்மையை கூறு. இல்லை அடித்தே கொன்று விடுவேன்,'' என்று மீண்டும் மிரட்டினான் அந்த வீரன்.
''அய்யா. நான் முடி திருத்துபவன். அமைச்சருக்கு முடிதிருத்திவிட்டு வருகிறேன். வேண்டுமானால் உங்கள் அரண்மனை வாயில் காவலர்களை கேட்டுக்கொள்ளுங்கள்!'' என்றான்.
''ஓ! நீ அந்த அளவுக்கு பெரிய ஆளா. இந்த மாபெரும் நாட்டின் அமைச்சருக்கு முடிதிருத்தி விட்டு வருகிறாயோ. சரி நம்புகிறேன். எங்கே திறந்து காட்டு உன் கைபெட்டியை!'' என்றான்.
சின்னதம்பி திறந்து காட்டினான்.
''சரி. உன் உடைகளை கழற்றி காட்டு!'' என்றான்.
சின்னதம்பி அதற்கு சம்மதிக்க வில்லை.
''அய்யா என்னை உங்கள் வாயில் வீரர்களே சோதனை செய்து அனுப்பியபிறகு நீங்கள் ஏன் என் ஆடைகளை சோதிக்க வேண்டுமாம்?''
''ஓ! உன் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டும். அவ்வளவுதானே!'' என்றவன், வேகமாக அவன் ஆடைகளை உறுவினான். லட்சினை உருண்டு ஓடியது.
''நீ பெரிய ராஜ உளவாளி. உனக்கு அமைச்சரின் லட்சினை. அப்படி என்றால் ஏதோ சதி நடக்கிறது. வா என்னுடன்,'' என்று அவனை தன் குதிரையில் ஏற்றி தளபதி மாளிகைக்கு சென்றான். நடந்தவைகளை தளபதியிடம் கூறினான் அந்த வீரன்.
''நல்லது குணாளா? நம் முயற்சிக்கு இது பெரும் வெற்றி. இந்த சிறுவனுக்கு ஏன் அமைச்சர் ராஜ முத்திரையை கொடுக்க வேண்டும். இப்போது சதி வேலைகள் புரிந்ததா? இதை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவனும் இருக்கக்கூடாது. இவனிடம் இருக்கும் லட்சினை பற்றிய விஷயமும் அமைச்சருக்கு தெரியக்கூடாது. சரி! நீ இந்த பொடியனை அழைத்து வந்ததை யாரும் கவனிக்கவில்லையே?''
''இல்லை பிரபு!''
''நல்லதாக போயிற்று. உடனே இவனை கங்கை வெள்ளத்தில் அந்த பெட்டியுடன் தூக்கி வீசிவிடு. இது இப்போதே நடக்க வேண்டும். இவனை மக்கள் நடமாட்டம் இல்லாத அய்யனார் கட்டடத்திற்கு அழைத்து சென்று அங்கு வீசிவிடு!''
''சரி!'' என்றபடி குணாளன் வேகமாக தலையாட்டினான்.
சின்னதம்பியின் கண்கள் குளமாயின. அச்சத்தால் உடல் நடுங்க வாய் மட்டும், ''அம்மா'' என்று முணுமுணுத்தபடி இருந்தது.
தளபதி லட்சினையை எடுத்து வைத்துக் கொண்டார்.
தளபதியிடம் விடைபெற்ற குணாளன் தன் குதிரையில் சின்னதம்பியை ஏற்றினான்.
''அம்மா, அம்மா!'' என்று அவன் கதறியபடி இருக்க, குதிரை அசுர வேகத்தில் ஆள் நட மாட்டமில்லாத அய்யனார் கட்டடத்திற்கு பாய்ந்து சென்று நின்றது.
சுற்றிலும் நோக்கினான் குணாளன். மனித நடமாட்டமில்லா பகுதியானதால் அங்கு யாருமே காணப்படவில்லை. பின் சின்ன தம்பியை அவன் கதற, கதற குதிரையில் இருந்து இறக்கி, வேகமாக கங்கை வெள்ளத் தில் தூக்கி வீசினான்.
கங்கை கரையில் ஒரு ஓரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் வாண்டு, தன் வயதொத்த சிறுவன் ஒருவனின் அழுகுரலையும், ஒரு வீரன் அந்த சிறுவனை கங்கையில் தூக்கி எறிவதையும் கண்டு அதிர்ச்சியுற்று, திகைத்து நின்றான்.
அந்த வீரன் அறியாதபடி, அந்த அய்யனார் கட்டடத்தின் ஒரு ஓரத்தில் தன்னை மறைத்தபடி இருந்தான்.
அதற்குள் சிறுவன் கங்கையால் இழுத்து செல்லப்பட்டதை உறுதி செய்துகொண்ட குணாளன், வேகமாக குதிரையில் திரும்பிச் சென்றான்.
இதை பொறுக்க மாட்டாத சிறுவன் வாண்டு உடனே, கங்கையில் குதித்தான். கங்கையின் ஓட்டத்துடனேயே நீந்தியபடி இருந்தான்.
இருப்பினும் சிறுவனுக்கு களைப்பு மேலிடவே, கரை நோக்கி வரலானான். அப்போது அவனுக்கு ஒரு ஆச்சரியம். முடி மட்டும் வெளியே தெரிய ஒரு உருவம் மிதந்தபடி வந்து கொண்டிருந்தது. உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த முடியை பிடித்து இழுத்தவன் வேகமாக நீந்தி கரை வந்தான். இப்போது அந்த உருவத்தை இழுத்து கரையில் போடவும் அவன் உடல் நடுங்கியது.
'அய்யோ இவனையா அந்த வீரன் வீசி எறிந்தான். இவன் நம் பெரியப்பா மகன் சின்னதம்பி ஆயிற்றே... ஏன் இப்படி பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறான். உயிர் இருக்கிறதா இல்லையா?' அவன் உடலில் மீண்டும் ஒரு நடுக்கம்.
நல்ல வேலை உயிர் இருக்கிறது. அவ்வளவு தான் வேகமாக அவன் பாதங்களை தேய்த்து சூடு ஏற்படுத்தினான். இப்போது சின்னதம்பி யின் உடல் மெல்ல அசைந்தது.
'அம்மா' என்றும் முனகல் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் உற்சாகம் மேலிட அவனை சூடுபடுத்தியபடி இருந்தான் வாண்டு.
இப்போது சின்னதம்பி கண் திறந்தான். அருகில் வாண்டு நிற்பதை கண்டான்.
''ஆபத்து! தப்பித்து ஓடு,'' என்று மெல்ல அதே சமயம் ஒரு பரபரப்புடன் குரல் கொடுத்தான் சின்ன தம்பி.
''முடியாது. இப்போது என்ன ஆபத்து வந்தாலும் எனக்கு கவலை இல்லை. உன்னை இந்த நிலையில் விட்டு என்னால் செல்ல முடியாது,'' என்று ஆணித்தரமாக மறுத்த வாண்டு, அப்போதுதான் தான் வந்த இடத்தை கவனித்தான்.
மனதில் மகிழ்ச்சி. இது அவன் பெரியப்பா அதாவது சின்னதம்பியின் அப்பா இருக்கும் கங்கை கட்டடம். அப்படி என்றால் நம் குல தெய்வம் நமக்கு நல்லதுதான் செய்திருக்கிறது. சரியான இடத்துக்கே நம்மை கொண்டு வந்து விட்டது. சின்ன தம்பி மிகவும் பயத்துடனும் அதே சமயம், களைப்புடனும் இருக்கிறான். அவனை அவன் தாயிடம் முதலில் ஒப்படைக்க வேண்டும். அவன் யோசித்த போதே குதிரையின் காலடி ஓசை கேட்க, சின்ன தம்பி நடுநடுங்கி, ''அடே வாண்டு ஓடிப்போ. நான் மீண்டும் கங்கையில் குதிக்க போகிறேன். நம் இருவர் உயிருக்கும் ஆபத்து வேகமாக வந்து கொண்டிருக்கிறது,'' என்று மூச்சு முட்ட கூறினான் சின்னதம்பி.
''கவலை இல்லை. கங்கையில் வீசிய அந்த வீரனே வந்தாலும் எனக்கு கவலை இல்லை!'' வாண்டு ஆவேசமாக பேசினான்.
''அடே வாண்டு என் மவனுக்கு என்னடா ஆச்சு. எவன்டா அவனை கங்கையில் வீசியவன்? ஒருபுறம் ஆவேசம். மறுபுறம் மகனைக்கண்டு துக்கம். கண்களை துடைத்துக் கொண்டே தன் மகனின் தலையை வருடி விட்டாள். அப்போதுதான் வாண்டு அந்த பெரும் குதிரையை கவனித்தான்.
''ஏன் பெரியம்மா அப்ப குதிரையில் வந்தது தாங்கள் தானா? உங்களுக்கு குதிரை ஏற்றம் எல்லாம் தெரியுமா?'' வாண்டுவின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன.
''தம்பி அது ஒரு கதை. எல்லாம் விவரமாக வீட்டுல பேசுவோம். இப்ப என் மகனுக்கு என்ன ஆச்சு? நீ எப்படி இங்கிட்டு வந்தே? உன் அம்மா எங்க இருக்காங்க? அவள் உடலில் பதட்டம் தெரிந்தது.
''அம்மா!'' கை ஜாடை காட்டி, அருகில் அழைத்தான் சின்ன தம்பி.
''என்னடா செல்லம். உனக்கு என்னடா வேணும். அமைச்சர்கிட்ட அனுப்பி வெச்சேனே ஏதாவது ஆபத்தா போச்சாடா கண்ணு,'' பேசிக் கொண்டே அவன் அருகில் சென்று அமரவும், அவள் காதை வாய் கிட்டே வைத்து, மெல்ல பேசலானான் சின்ன தம்பி.
- தொடரும்...
பூரணி
